விஜய் படங்களின் ஸ்டில் போட்டோகிராஃபர் இவர்தான்!



‘‘எனக்கு என்ன வேணும்னு விஜய் சாருக்கு தெரியும், அவருக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும்!’’ நெகிழ்கிறார் மானெக்‌ஷா.இணையம் துவங்கி இதயம் வரையிலும் அதிர வைத்து வைரல் பீட் கொடுத்திருக்கிறது ‘பீஸ்ட்’ படத்தின் சமீபத்திய ஃபர்ஸ்ட், செகண்ட் லுக்குகள். இதற்குப் பின்னால் இருப்பவர்தான் இந்த ஸ்டில்ஸ் மானெக்‌ஷா.‘‘1971ல பாகிஸ்தான் - பங்களாதேஷ் போர் நடந்தது. அப்ப பங்களாதேஷ் சார்பா இந்தியா களத்துல இறங்கினப்ப முப்படைகளுக்கும் தலைமை தாங்கியவர் இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷலான சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்‌ஷா!

அதே வருஷத்துல நானும் பிறந்ததால எனக்கு ‘மானெக்‌ஷா’னு அப்பா பெயர் வைச்சுட்டார்...’’ என தன் பெயருக்கான காரணத்தை சொன்னவரின் சொந்த ஊர் வேலூர்.

‘‘அப்பா தணிகாசலம், சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிக் கழகத்துல பியூனா இருந்து கொஞ்சம் கொஞ்சமா வேலையைக் கத்துக்கிட்டு ரீடிங் எடுக்கற அளவுக்கு உயர்ந்தார்.
குவார்ட்டஸ்லதான் வளர்ந்தேன். அப்பாவுக்கு ராணுவம் சார்ந்த விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். வீட்ல ஒருத்தரையாவது ராணுவத்துல சேர்க்கணும்னு விரும்பினார். ஆனா, எல்லாரும் வேறு வேறு துறைக்கு போயிட்டோம்.எனக்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரர்.

தமிழ் மீடியத்துல படிச்ச என்னை 6வதுல ஆங்கில மீடியத்துக்கு மாத்தினாங்க. திணறிட்டேன். விளைவு 10வது ஃபெயிலு. மறுபடியும் எழுதி பாஸ் ஆனேன்...’’ என்னும் மானெக்‌ஷா, இப்போது கேமராவில் ஷூட் செய்யும் அளவுக்கு உயர்ந்ததற்குக் காரணம் தன் நண்பரின் அண்ணன்தான் என்கிறார். ‘‘சினிமா பத்திதான் அந்த அண்ணன் பேசுவார். அவருடைய ஃப்ரெண்ட்ஸும் சினிமாக்காரங்க. ஒளிப்பதிவு, கேமரா டெக்னிக், லைட்டிங்னு பேசுவாங்க. அதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் கேமரா மேல ஆர்வம் வந்துடுச்சு.  

அப்புறம் இன்னொரு நண்பர் சொன்ன யோசனைப்படி சீனியர் போட்டோகிராஃபர் ஏ.எல்.கே.பிரசாத் சாருடைய ஸ்டூடியோவிலே வேலைக்கு சேர்ந்தேன். அங்க இருந்த ஆனந்தன் சார்தான் எனக்கு கேமரா பத்தின அடிப்படைகளைச் சொல்லிக் கொடுத்தார்.சொந்தமா கேமரா வாங்கற அளவுக்கு அப்ப வசதியில்ல. அப்ப ஃபிலிம் ரோல் விலை ரூ.50. அதுக்குக் கூட வழியில்லாம, மீதமான ஈஸ்ட்மன் ரோல்ல 10 அடி - 15 அடினு வாங்குவோம். ஓர் அடி ரூ.2க்கு கிடைக்கும். அதை வாங்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன். என் நண்பர் பாபு தன் கேமராவை இரவல் கொடுப்பார்.
ஆறு வருஷங்கள் ஏ.எல்.கே.பிரசாத் சார் ஸ்டூடியோல வேலை பார்த்தேன். அவருடைய கஸ்டமர்கள் எல்லாம் சினிமால முக்கியஸ்தர்கள். அவங்க எல்லாம் பழக்கமானாங்க. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ தெலுங்கு வெர்ஷனுக்கு ஓர் உதவியாளர் தேவைனு என்னை கூட்டிட்டுப் போனாங்க.

இப்படிதான் என் சினிமா பயணம் ஆரம்பமாச்சு...’’ என்னும் மானெக்‌ஷா, விஜய்க்கு நெருக்கமான கதையை விவரித்தார்.‘‘லைட்மேன் யூனியன் இருக்கிற அதே பில்டிங்குல சொந்தமா வீடியோ கவரேஜ், ஃபங்ஷன் கவரேஜ்னு பொதுவான போட்டோக் ஸ்டூடியோ தொடங்கினேன். ஸ்டூடியோல எடுக்கற போட்டோக்களை வடபழனியில் இருந்த ஒரு லேப்ல பிரிண்ட் போடுவேன்.

அதே லேப்ல பிரிண்ட் போட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வருவாங்க. அவங்க நான் வித்தியாசமா எடுத்த போட்டோக்களைப் பார்த்து பாராட்டுவாங்க.

அப்ப ஜிலாகி செல்வம் சார் பெரிய பெரிய படங்களுக்கு போட்டோஸ் எடுத்துட்டு இருந்தார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ’காதல் கோட்டை’னு நிறைய படங்கள் அவர் கைவண்ணம்தான்.
அவர் என் போட்டோக்களைப் பார்த்துட்டு சினிமாவுக்கு வரச் சொன்னார். முதல் படம் ‘அன்பு’. தொடர்ந்து சில சின்னச் சின்ன படங்களுக்கு எடுக்க வைச்சுட்டு திடீர்னு ஒருநாள் பெரிய படம் ஒன்றுக்கு ஸ்டில் ஷூட்னு செல்வம் சார் கூட்டிட்டுப் போயி இயக்குநர் ரமணாவை அறிமுகப்படுத்தினார்.

கேமரா செட் பண்ணிட்டு ஆர்ட்டிஸ்ட்டுக்காகக் காத்திருந்தேன். பார்த்தா... சைலன்டா விஜய் சார் வந்து நின்னார். ஆடிப் போயிட்டேன். ‘திருமலை’ புரமோஷன் ஷூட்டுக்குனு போனவன், அப்படியே முழுப் படத்துக்கும் வேலை செய்தேன்.சீன் நடுவுல விஜய் சார்கிட்ட ஸ்டில்ஸுக்காகனு சொல்லி வேலை வாங்கினேன். அவரும் முகம் சுளிக்காம நான் கேட்டதை செய்து கொடுத்தார். எடுத்த போட்டோஸை பிரிண்ட் போட்டுக் கொடுத்தேன். ரமணா சாருக்கு பிடிச்சிருச்சு. விஜய் சார் ரொம்ப ஹேப்பியானார். தன் அடுத்த படமான ‘சுள்ளான்’ல ரமணா சார் என்னை ஒப்பந்தம் செய்தார்.

தொடர்ந்து ‘மெர்குரி பூக்கள்’, ‘காதல் டூ கல்யாணம்’, ‘மறந்தேன் மெய்மறந்தேன்’, ‘வியாபாரி’ உட்பட பல படங்கள் பண்ணினேன். நிறைய சின்ன படங்களும். சில படங்கள் சரியா போகலை... சிலது ரிலீஸ் ஆகலை. சினிமாவே வேண்டாம்னு முடிவு பண்றப்ப எல்லாம் ரீஎன்ட்ரி கொடுக்கிற மாதிரி பெரிய பிரேக் கிடைக்கும். அப்படி ஸ்டில்ஸ் ரமணி சார் மூலமா ஒரு கிளாஷ் ஒர்க் வந்துச்சு. அடுத்து ‘தருமபுரி’ படம். அந்தப் படத்தின் உதவி ஒளிப்பதிவாளர்ல மனோஜ் பரமஹம்சாவும் ஒருத்தர். அதேமாதிரி உதவி இயக்குநர்ல ஒருத்தர் அறிவழகன். எங்க மூணு பேருக்கும் ஒரே ரூம் கொடுத்தாங்க. நாங்க நண்பர்களானோம். என் வேலை அவங்களுக்கு பிடிச்சிருந்ததால அவங்க வளர வளர என்னையும் கூடவே கூட்டிட்டுப் போனாங்க.

கௌதம் மேனனை  பரிந்துரை செய்தார் மனோஜ் பரமஹம்சா. அந்தப் படம் ‘வாரணம் ஆயிரம்’. அப்ப எனக்கு வேற கமிட்மென்ட் இருந்ததால அந்தப் படத்துல ஒர்க் பண்ண முடியலை. அடுத்து அதே கெளதம் மேனன் காம்பினேஷன்ல ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ தொடங்கினப்ப நானும் இணைஞ்சேன்.அறிவழகன் ‘ஈரம்’ இயக்கினப்ப அதுல ஒர்க் பண்ணினேன். பிறகு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது...’’ என்னும் மானெக்‌ஷா, ‘எந்திரன்’ வாய்ப்பைத் தவற
விட்டிருக்கிறார்.  

‘‘சரியோ தப்போ... ஒரு படம் முடியாம அடுத்த படம் கமிட் ஆக மாட்டேன். இதனாலதான் ‘எந்திரன்’ல பணிபுரிய முடியாம போயிடுச்சு. ஷங்கர் சார் ‘நண்பன்’ இயக்கினப்ப கூப்பிட்டார். மறுக்காம போனேன். மறுபடியும் விஜய் சார் என்ட்ரி. அந்தப் படத்துல அசிஸ்டண்ட் டைரக்டராஇருந்த அட்லி, ‘நாம சேர்ந்து ஒர்க் பண்ணலாம்ணா’னு சொன்னார். ‘ராஜா ராணி’ செய்தோம். அந்தப் படத்துல ஆர்யா பழக்கமானார். ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ செய்தேன். இந்தப் படத்தோட புரொடக்‌ஷன்மானேஜர் மூலமா ‘தனி ஒருவன்’ கிடைச்சது. தொடர்ந்து ‘வேலைக்காரன்’.

பிறகு அட்லியின் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘சர்கார்’, ‘மாஸ்டர்’, இப்ப ‘Beast’னு விஜய் சார் கூட டிராவல் பண்றேன்...’’ என்ற மானெக்‌ஷா, ‘பீஸ்ட்’ போட்டோ செஷன் குறித்து சொன்னார்.
‘‘எனக்கும் விஜய் சாருக்கும் இணைப்பா இருக்கறது கேமராதான். எனக்கு என்ன வேணும்னு அவருக்குத் தெரியும்; சாருக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்ல பெருசா பேசவே மாட்டார். அதே சமயம் கேரவன்ல ரெஸ்ட் எடுப்பவரும் இல்ல. தன் ஷாட் முடிஞ்சதும் ஓரமா சேர் போட்டு உட்கார்ந்துடுவார். நடப்பதை பொறுமையா கவனிப்பார்.
விஜய் சார்கிட்ட அதிகமா நான் பேசினதில்ல. எனக்கு இது வேணும், அது வேணும்னு கேட்டதே இல்ல. அவரும் ‘இப்படி எடு அப்படி எடு’னு சொன்னதில்ல. ஒரு சின்ன சிரிப்பு, கண்ணசைவு... இதுலதான் நாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசிப்போம்.

சீன்களுக்கு நடுவுல, ‘சார் ஸ்டில்’னு சொன்னா யோசிக்காம போஸ் கொடுப்பார். என்மேல அவருக்கு அந்தளவு நம்பிக்கை. சரியான நேரத்துக்கு வந்துடுவாரு. எல்லா டெக்னீஷியன்கள், நடிகர்கள்கிட்டயும் குட் மார்னிங் சொல்லிட்டு நேரா ஷாட்டுக்கு போய் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவாரு!’’ என்னும் மானெக்‌ஷா, நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘பிகில்’ படத்தில் ராவுத்தர் பாய் ஆக நடித்திருக்கிறார். இப்போது ‘டைனோசர்’ படத்தில் ஒரு பெரிய ரோலில் நடிக்கிறார். என்றாலும் கேமராதான் தன் வாழ்க்கை என்னும் மானெக்‌ஷா, கலைஞரையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

‘‘செம்மொழி மாநாடு நிகழ்ச்சிக்காக கலைஞர் ஐயாவைப் புகைப்படம் எடுத்ததை பெரிய விஷயமா நினைக்கறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள்... புது விஷயம் கத்துக்கப் போறேன்னுதான் ஆரம்பிப்பேன். ஒவ்வொரு ஒளிப்பதிவாளர்கள் கிட்டயும் லைட்டிங், ஃபிரேம்ஸ், டெக்னிக்ஸை கத்துக்கிட்டே இருக்கேன்...’’ என்கிறார் மானெக்‌ஷா. அவர்கள்தான் என் குருக்கள். என் ஒரே வேண்டுகோள், இந்த ஸ்டில் கலைஞர்களுக்கும் விருதுகள்கொடுத்தா மன நிறைவா இருக்கும்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்