ரத்த மகுடம்-154பொழுது விடிவதற்கு முன் பல்லவப் படை மீது தாக்குதல் நடத்த வேண்டும் என விநயாதித்தன் தீட்டிய திட்டம் தவிடு பொடியாகிவிட்டது.என்றாலும் சாளுக்கிய இளவரசன் கலங்கவில்லை.புரவிப்படையின் முன்பாக தன் குதிரையைக் கொண்டு வந்தவன் பல்லவர்களின் அணிவகுப்பை தீர்க்கமாக அலசினான்.
‘நம்மை விட சிறிய படை. நாம் படையை நகர்த்த தயாராக இருக்கிறோம். பல்லவர்களோ சற்றும் நகராமல் நிற்கிறார்கள். அப்படி யானால் கரிகாலன் ஏதோ செய்யப் போகிறான் என்று அர்த்தம்...’சாளுக்கிய இளவலின் புருவங்கள் சில கணங்கள் முடிச்சிட்டன. மெல்ல மெல்ல கரிகாலனின் எண்ணப் போக்கு என்னவாக இருக்கும்... எப்படி பல்லவப் படையை அவன் நடத்தப் போகிறான் என்பது விநயாதித்தனுக்குப் புரிந்தது. உதட்டிலும் புன்னகை பூத்தது.

சட்டென சாளுக்கிய உபதளபதியை அழைத்தான். ‘‘திட்டமிட்டபடி யானைப்படை முதலில் முன்னேறட்டும். ஆனால், புரவிப் படை சற்று பின்தங்கியே செல்லட்டும்...’’ என கட்டளையிட்டான்.

தலையசைத்த உபதளபதி சற்றே தயங்கினான்.
‘‘காரணத்தை அறிய வேண்டுமா..?’’
உபதளபதி தலையசைத்தான்.

‘‘எனது ஊகம் சரியானால் தங்களிடம் உள்ள வில்லவர்களைக் கொண்டு பல்லவர்கள் நம் யானைப் படை மீது அம்பு மழை பொழியப் போகிறார்கள். இதனால் சிதறும் நம் யானைப் படை திரும்பி நம்மை நோக்கி வரும். நமது புரவி மற்றும் காலாட் படைகளுக்குள் மூர்க்கமாகப் புகும். பல்லவர்கள் நம்மை அழிப்பதற்குள் நம் யானைப் படையே பாதி அழிவை ஏற்படுத்திவிடும்...’’
விநயாதித்தன் இப்படிச் சொன்னதுமே உபதளபதியின் கண்கள் விரிந்தன. ‘‘என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள் இளவரசே...’’‘‘யானைப் படையை முன்னால் அனுப்பி நாம் பின்வாங்குவோம். யானைப் படை பாதிக்கப்பட்டுத் திரும்பினால் நமது படைகளை விசிறி போல் கச்சிதமாக விரியச் செய்வோம்.

அம்புகளால் சீறும் யானைகள் நதிக்கரைக்கு ஓட இடமளிப்போம். பிறகு விசிறி போன்ற நிலையில் நமது புரவிப் படையும் காலாட் படையும் முன்னேறும். புரவிகள் பல்லவர்களுடன் மோதும். காலாட் படை பக்கத்து மலைமேட்டுப் பகுதியில் நின்று எதிரிகள் மீது அம்புகளைப் பொழியும். நம் புரவிப் படையை பல்லவர்கள் எதிர்த்தாலும், ஊடுருவிப் புகுந்தாலும் நம் வில்லவர்கள் அவர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவிப்பார்கள்...’’இந்தச் சூழலில் விநயாதித்தனைவிட வேறு யாராலும் இப்படியொரு மகத்தான திட்டத்தை வகுக்க முடியாது என்பதைப் புரிந்து உபதளபதி உடனடியாக சாளுக்கிய இளவல் சொன்னபடி படைகளை நகர்த்த நகர்ந்தான்.

துங்கபத்ரையில் இருந்து சற்றுத் தொலைவில் மேட்டுப் பகுதி ஒன்றில் தளமிட்டிருந்த கரிகாலன், குன்றின் மீது அழுத்தமாக கால்களை ஊன்றியபடி தன் கண் முன்னால் விரிந்திருந்த சாளுக்கியப் படையை நோட்டமிட்டான்.முன்னணியில் நின்றிருந்த யானைப் படைகளையும் சற்றே பின்வாங்கிக் கொண்டிருந்த புரவிப் படையையும் கண்டவனின் உதட்டில் புன்னகை பூத்தது.
சாளுக்கியர்களின் யானைப் படை மட்டும் துரிதமாக முன்னேறுவதையும், அதற்கும் புரவிப் படைக்கும் இடைவெளி அதிகமாவதையும் பார்த்த கரிகாலன், ‘திறமையான எதிரியைத்தான் சந்திக்கப் போகிறேன்...’ என முணுமுணுத்தான்.

பல்லவப் படையை நோக்கி சாளுக்கியப் படைகள் வர வர எதிரியின் புரவிப் படையும் காலாட் படையும் விசிறி போல் விரிவதைக் கண்ட கரிகாலன், தன்னை மீறி ‘‘சபாஷ்...’’ என்றான். ‘‘பெரிய ராஜ தந்திரியை எதிர்கொள்ளப் போகிறேன். இந்தத் திட்டத்தை வகுத்த விநயாதித்தன் உண்மையிலேயே திறமை வாய்ந்தவன். நாளை சாளுக்கிய மன்னனாக அவன் அமரும்போது நிச்சயம் பல்லவர்களுக்கு பெரிய சவாலாகத் திகழ்வான்...’’உள்ளூர சொல்லிக்கொண்ட கரிகாலன் திரும்பி தன் தந்தை உள்ளிட்ட உபதளபதிகளைப் பார்த்தான்.

‘‘சாளுக்கியர்கள் முன்னேறுகிறார்கள்...’’ அமைதியைக் கிழித்தார் கரிகாலனின் தந்தையான சோழ மன்னர்.‘‘ஆம்...’’ கரிகாலன் தலையசைத்தான்.‘‘நெருங்கிவிட்டால் நாம் போரிட வசதியிருக்காது... ஏற்கனவே நீ வகுத்த திட்டத்தை நிறைவேற்றுவது கடினமாகி விடும்...’’தன் தந்தைக்கு கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால், அவனது புருவ நெரிப்பும், கண்களின் அசைவும், யாருக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் தன் தலையை இருமுறை ஆட்டிக் கொண்டதும் ஏதோ தீவிரமாக அவன் யோசிக்கிறான் என்பதை அங்கிருந்தவர்களுக்கு உணர்த்தின.

சட்டென ‘‘தந்தையே...’’ என்று அழைத்தான் கரிகாலன். ‘‘நமது படைகள் முன்பு திட்டமிட்டது போல் நான்காகப் பிரிந்து முன்னேறட்டும். ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் வில்லாளர்கள் சாளுக்கியர்களின் யானைப் படையை நோக்கி அதன் துதிக்கை அல்லது கண்களைக் குறிபார்த்து அம்புகளை எய்யட்டும். யானைகள் மிரண்டு திரும்பினால் அவற்றுக்கு வழி விடவே புரவிப் படையை இடைவெளிவிட்டு விநயாதித்தன் நடத்தி வருகிறான். இதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்...’’‘‘எப்படி..?’’ என்பது போல் சோழ மன்னர் தன் மைந்தனைப் பார்த்தார்.

புரிந்து கொண்டதுபோல் கரிகாலன் பதில் அளித்தான். ‘‘முன்னோக்கி வரும் யானைப் படை நம் அம்புகளால் தாக்கப்பட்டு சாளுக்கியப் படையை நோக்கி பின்வாங்கும்; ஊடுருவும். அந்த சமயத்தில் நமது நான்கு பிரிவுகளும் இணைந்து யானைப் படைக்குப் பின்புறத்தில் செல்லட்டும். இதனால் ஊடுருவப் போகும் நமது படைக்கு எதிரியின் யானைப் படை மறைவு அளிக்கும்... நாம் செய்ய நினைக்கும் முதல் பகுதியை யானைகளே கவனித்துக் கொள்ளும். தவிர அதோ பாருங்கள்... சாளுக்கியர்களின் புரவிப் படையும் காலாட் படையும் விசிறி போல் விரிகிறது... சாளுக்கிய வில்லவர்கள் மலை மேடுகளில் பரவி தங்கள் விற்களை வளைக்கிறார்கள்...’’கரிகாலன் சுட்டிக் காட்டிய திசையை சோழ மன்னர் ஆராய்ந்தார்.

‘‘ஆமாம்...’’‘‘இந்த அர்த்த சந்திர வியூகத்தில் நாம் நுழைந்தால் தனி வீரன் கூடத் தப்பாமல் அழிக்கப்படுவான்... இதுதான் விநயாதித்தனின் திட்டம்... இதை முறியடிக்க நமது இரு பிரிவுகள் மேற்புறம் செல்லட்டும்... மற்ற இரு பிரிவுகள் கிழக்குப்புறம் நகரட்டும். சாளுக்கியர்களின் யானைப் படை நமது அம்பு மாரியின் எல்லைக்குள் வந்ததும் ஒரே சமயத்தில் நம் வில்லவர்கள் இயங்கட்டும். யானைப் படை சிறிது திரும்பும் சமயத்தில் நமது நான்கு பிரிவுகளும் இணைந்து யானைப் படை அளிக்கும் விலங்குச் சுவரின் மறைவில் ஊடுருவட்டும்.

எதற்கும் அடையாளத்துக்கும் படைத்தாக்குதலுக்கும் என் வாள் வீச்சைக் கவனித்துக் கொள்ளுங்கள்... நம்மை விட சாளுக்கியர்களின் படை எண்ணிக்கை அதிகம். ஆனால், வெற்றி நமக்குத்தான். படை எண்ணிக்கை ஒருபோதும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை என்பதற்கு இப்போரும் ஓர் உதாரணமாகட்டும்...’’சொன்ன கரிகாலன், தாவி தன் புரவியின் மீது ஏறினான். ‘‘தந்தையே! நமது ஐந்தாவது படைப் பிரிவு இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்...’’‘‘ஐந்தாவதா..?’’ சோழ மன்னர் வியந்தார்.

‘‘ஆம்! சிவகாமி அதற்குத் தலைமை தாங்குகிறாள்!’’ கண்களைச் சிமிட்டினான் கரிகாலன்.அடுத்த சில கணங்களில் தாரைகள் ஊதப்பட்டன. கரிகாலன், தன் வாளை உயர்த்தியதும் மந்திரவாதியால் இயக்கப்படும் பதுமைகளைப் போல் பல்லவர் படை நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது.பல்லவர்களின் படை நான்காகப் பிரிந்ததும் விநயாதித்தனின் வதனத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. ‘போர்களால் வீரன் மகிழ்ச்சியடைய வேண்டும். போர்க்களத்தில் மாண்ட வீரனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை விட அவன் வீரத்துக்கு அத்தாட்சி கூறுவது வேறு எதுவுமில்லை... கரிகாலா! நீ கெட்டிக்காரன்... சோழர்களை ஏன் தங்கள் நண்பர்களாக பல்லவர்கள் பாவிக்கிறார்கள்...

தங்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருந்தாலும் சோழர்களை ஏன் சுதந்திரமாக இயங்க பல்லவர்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்பது இப்பொழுது புரிகிறது... உன்னை எங்கள் பக்கம் இழுக்க என் குருநாதரும் எங்கள் போர் அமைச்சருமான ராமபுண்ய வல்லபர் ஏன் முயற்சித்தார் என்பதற்கான காரணமும்... உண்மையிலேயே நான் மகிழ்கிறேன் கரிகாலா... திறமைசாலி யுடன்தான் மோதப் போகிறேன்...’முணுமுணுத்த விநயாதித்தன், தன் படை துரிதமாக முன்னேற தன் வாளை உயர்த்தி சைகை செய்தான்.

அதேசமயம் பல்லவர் படையின் வில்லவர்கள் வீசிய அம்பு மழை சாளுக்கியர்களின் யானைப் படையின் மீது உக்ரமாக விழுந்தது. நன்றாகக் குறி வைத்து எய்யப்பட்ட அம்புகளாலும், அம்புகள் தீர்ந்ததும் முன்னோக்கி ஓடிய புரவிகளின் மீது அமர்ந்திருந்த வீரர்கள் வீசிய வேல்களாலும் யானைகள் பெரிதாக அலறின.இதற்காகவே காத்திருந்தது போல் சாளுக்கிய வில்லவர்கள் கரிகாலனுக்குப் பின்னால் வந்த புரவிப் படையின் இரு பிரிவுகள் மீதும் பாய்ந்தனர்.

ஆனால், இப்படி நடக்கும் என்பதை முன்பே ஊகித்திருந்த கரிகாலன், யானைகள் நதியை நோக்கி ஓடியதால் கிடைத்த இடைவெளியில் சாளுக்கியப் படைக்குள் பாதி தூரம் ஊடுருவி விட்டான்.சாளுக்கியப் படை ஒன்று சேர்ந்தாலும் கூடப் பாதி தூரத்துக்கு மேல் ஊடுருவியிருந்த பல்லவப் படை நீண்ட சரம் போல் வளைந்து நெளிந்து எதிரிகளுடன் போரிட்டது.

அரை ஜாமத்திற்குள் பல்லவப் படை நன்றாக ஊடுருவி விட்டதைக் கண்ட விநயாதித்தன் சினத்தின் வசப்பட்டு தனது புரவியில் இருந்து கீழே குதித்து கடைசியில் வேகமாக வந்துகொண்டிருந்த யானைமீது ஏறி வேல் ஒன்றை கரிகாலனை நோக்கி குறி பார்த்து வீசினான்.

இதற்குள் சற்றும் எதிர்பாராத திக்கிலிருந்து பாய்ந்து வந்த சிவகாமி தலைமையிலான வீரர்கள் விநயாதித்தனை நோக்கி அம்புகளையும் வேல்களையும் எய்யவும் வீசவும் தொடங்கினார்கள்.

குனிந்து நிமிர்ந்தும் கேடயத்தால் தடுத்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்த விநயாதித்தன், சட்டென அதிர்ந்து சிலையானான்.காரணம், யார் மீது அவன் வேலை எறிந்தானோ அந்த கரிகாலன், குறியிலிருந்து தப்பித்ததுடன், தன்னை நோக்கி வீசப்பட்ட அம்பு, வேல்களையும் தடுக்கத் தொடங்கியிருந்ததுதான்!

விநயாதித்தனால் இதை நம்பவே முடியவில்லை. எதிரியான தன் மீது கரிகாலனுக்கு ஏன் இந்த பாசம்..?
‘‘சாளுக்கிய இளவல் சுத்தமான வீரன் சிவகாமி... அதனால்தான் அவனைக் கொல்ல விரும்பவில்லை... இந்த பல்லவ - சாளுக்கிய போரில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்... நம் பல்லவ மன்னர்தான் மீண்டும் அரியணையில் அமரப் போகிறார்...

இந்நிலையில் வருங்காலத்தில் சாளுக்கியர்கள் படை திரட்டி வர வலுவான தலைமை அவசியமல்லவா..? அதனால்தான் விநயாதித்தனை உயிருடன் அனுப்பி வைத்திருக்கிறேன். இந்த துங்கபத்ரா போரில் சாளுக்கியர்கள் அடைந்திருக்கும் தோல்விதான் நமது வெற்றிக்கான முதல் படி...’’ சிவகாமியின் கொங்கைகளில் தன் முகத்தைப் பதித்தபடி கரிகாலன் முணுமுணுத்தான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் குழலை சிவகாமி கோதினாள்.போரில் ஏற்பட்ட காயத்தால் கசிந்த இருவரது குருதிகளும் இரண்டறக் கலந்தன...

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்