சிறுகதை - சில்லுன்னு ஒரு காதல்..!



பத்மாவை நான் மறுபடியும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. பார்த்ததுமே பக்கென்று ஆகிவிட்டது. என்ன பேசுவது எனப் புரியவில்லை. தோற்றத்தில் நிறைய மாற்றம் இருந்தது. மாடர்னாக இருந்தாள்.வழவழவென உடலைத் தழுவியிருந்த சேலை, ஜாக்கெட். ஆச்சரியமாயிருந்தது. கருநாக ஜடையைக் கத்தரித்து தோளில் புரளவிட்டிருந்தாள்.“இந்த ரிஜிஸ்டர்ல உங்க டீட்டெய்ல்ஸை எழுதுங்க...” அடர்த்தியாக நிறமேற்றிய இதழ்களை அசைத்தாள்.

அவள் நகர்த்திய ரிஜிஸ்தரில் விவரங்களை நான் நிரப்ப  என் மனம் முழுவதும் பத்மாவே நிரம்பினாள்.‘பத்மாவிற்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் கடமையே கண்ணாயிருக்கிறாள்.ஒருவேளை…. நான் என் மனைவியோடு வந்திருப்பதால்… கண்டுகொள்ளாத மாதிரியிருக்கிறாளா?

யோசித்தபடியே விவரங்களை பதிவு செய்தேன்  “ரூம் நம்பர் ஒன் நாட் த்ரீ...” அத்துடன் தன் வேலை முடிந்ததைப் போல் தன் மொபைலில் எதையோ தேடத் தொடங்கினாள்.லிஃப்ட் வழியாக ஆறாவது தளத்தை அடைந்து சாவி எண்ணுக்குரிய அறையில் உடைமைகளை வைத்த பிறகு நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பால்கனியில் நின்றபடி பரந்துவிரிந்த ஊட்டியின் பசுமையை ரசிக்க முயன்றேன்.

பத்மா இந்த ஹோட்டலில்  வேலை பார்க்கிறாளா?
நினைத்ததுமே நெஞ்சு வலித்தது. எப்படியெல்லாம் அவளை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கடைசியில் இன்று மாதச் சம்பளம் வாங்கும் உத்யோகத்தில்…
குற்ற உணர்வு கொத்தித் தின்றது. நான்… நான் மட்டும் அவளை திருமணம் செய்துகொண்டிருந்தால்… இன்றைக்கு சாந்தா இருக்குமிடத்தில் அவள்..?சிலீரென காற்று வீசியது. பத்மாவுடன் இணைந்து படித்த அந்த மூன்று ஆண்டுகளும் மிக இனிமையானவை. தோழியாகப் பழகிய அவள் மேல் காதல் துளிர்த்தது. அவளுக்கும் அதே நிலைதான். ஆனால், யார் முதலில் சொல்வது என இருவருக்குள்ளும் போராட்டம்.

மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்ததும் விடுமுறைக்கு அவரவர் ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில் சரியாக பத்து நாட்கள் கழித்து பத்மா அலைபேசியில் அழைத்தாள்.
‘‘உடனே நாம சந்திக்கணும்...’’ என்றாள். விவரம் நேரில் சொல்கிறேன் என்றாள்.இருவரும் ஒரு காபி கடையில் சந்தித்தோம்.காபியை ரசித்து ருசித்து பருகியவாறே அவள் வெகு இயல்பாகக் கேட்டாள். “சங்கு… நாம எங்கயாவது ஓடிப் போயிடலாமா?”சுரீர் என நாக்கில் சுட்டுவிட்டது காபி. தூக்கிவாரிப் போட்டதில் கையிலிருந்த காபி கோப்பை தளும்பி சட்டையில் சிந்தியது.

காதலை சொல்லுவாள் என்று நான் கிளுகிளுப்புடன் காத்திருக்க அவளோ அசால்ட்டாக இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாள்.

“நீயும் நானும் ஓடிட்டா… ஊர் அசிங்கமா பேசும். நம்மை காதலர்கள்னு சொல்லும்...”“அப்ப நாம காதலர்கள் இல்லையா?”அவள் அடுத்து வீசிய கேள்வியில் அப்படியே சிக்குண்டேன்.“நான் உன்னை காதலிப்பதா எப்பவாவது சொல்லியிருக்கேனா?”“அப்ப நீ என்னைக் காதலிக்கலையா?” இந்தக் கேள்விக்கு ஏனோ என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் தன் காதலை வெளிப்படுத்தியதும் ஏன் நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை..?“என்ன எதுவும் பேசாம இருக்க?”“அது… வந்து காதல்னு சொல்ல முடியாது. பட் உன்மேல ஒரு விருப்பம் இருக்கு...”

“சும்மா பொய் சொல்லாதே. நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாய். இதான் உண்மை...”
“சரி அப்படியே வச்சுப்போம். இப்ப அதுக்கென்ன?”“நாம ஓடிப் போய்டலாம்...”
“ஏன்?”“ எங்க வீட்ல கல்யாணப் பேச்சை எடுக்கறாங்க. அதனாலதான் சொல்றேன். நாம ஓடிப்போய்  கல்யாணம் பண்ணிக்கலாம்...”“என்ன விளையாடுறியா? நான் மேல படிக்கணும். வேலைக்குப் போகணும். லைஃப்ல செட்டிலாகணும்...”“ம்... அதெல்லாம் நீ முடிச்சுட்டு வர்றதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன். நாம கல்யாணம் பண்ணிப்போம். எங்காவது வேலைக்குப் போவோம். குடும்பம் நடத்துவோம்...”

“ப்ச். வெறும் டிகிரியை வச்சுக்கிட்டு வேலைக்குப் போனா ஐயாயிரமோ பத்தாயிரமோதான் கிடைக்கும்.  உன்னை ராணி மாதிரி வச்சுக்கலைன்னாலும் நல்லபடியாவது பார்த்துக்க வேணாமா?”

“ஏன் பார்த்துக்க முடியாது? ஆரம்பத்துல கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அப்பறம் நாம முன்னேறிடலாம்...”“ பத்மா எல்லாம் பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும்...’’“அப்போ நம்ம காதல்?”“இதெல்லாம் ஒரு காதலே இல்லை.  நாம நல்ல ஃபிரண்ட்ஸ். ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நட்பை மீறி ஒரு ஈர்ப்பு இருக்குது. அதை காதல்னு கற்பனை பண்ணிக்கிட்டு நம்ம வாழ்க்கையை நாமே கெடுத்துக்க வேண்டாம்...”அன்றைக்கு சொன்னது அடுத்து வந்த நாட்களில் எல்லாம் என்னை குத்திக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.

நான் ஒரு கோழை. காதலை ஒத்துக்கொள்ள தைரியம் இல்லாதவன்.இதோ… இப்பொழுது பத்மா ஒரு சாதாரண வரவேற்பாளினியாக வேலை செய்கிறாள். அந்த உண்மையான காதலை இழந்துவிட்டேனே...வேதனை நெஞ்சையடைத்தது.எப்படியாவது பத்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆனால்… காலையில் அவளை வரவேற்பறையில் காணவில்லை.
ஏன் அவள் வேலைக்கு வரவில்லை?  ஒரு வேளை என்னைப் பார்த்ததும் நான்  இங்கு தங்கியிருக்கும் நாட்களில் என்னை சந்திப்பதை தவிர்ப்பதற்காக லீவு
போட்டுவிட்டாளா?’தொடர்ந்து வந்த நாட்களிலும் அவள் வரவேற்பறையில் இல்லை.

வேதனை நெஞ்சைப் பிழிந்தது. அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்ளம் தவித்தது.கடைசியாக நான் கிளம்பும் நாள் வந்தது. அன்றைக்காவது கண்ணில் படுவாளா என என் மனம் அலைந்தது.வரவேற்பறைக்கு வந்து பில்லை முழுவதுமாக செட்டில் பண்ணும் போது அங்கு இருந்த பெண்ணிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்க பத்மான்னு ஒரு லேடி இருந்தாங்களே, அவங்க வேலைக்கு வரலையா?”இதைக் கேட்டு அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறிங்க?”“அவங்க வரவேற்பாளினி கிடையாது. இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட ஓனரே அவங்கதான்!”தூக்கிவாரிப்போட அதிர்ந்தேன். ‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சொந்தக்காரியா?’“எனக்கு ஒருவாரமா உடம்பு சரியில்லை. இங்க எல்லாருக்கும் வேலை ரொம்ப டைட்டாயிருக்கும். மத்தவங்க வேலையைப் பார்க்க முடியாது. அதனாலதான்  இங்க மேடம் இருந்திருக்காங்க. அவங்க கிட்ட ஏதாவது சொல்லணுமா? ஃபோன் போட்டுத் தர்றேன்... பேசுங்க...”
“இல்லை… வேண்டாம்...” சொல்லிவிட்டு ஹோட்டலைவிட்டு வெளியே வந்தேன்.

காரில் சாந்தா காத்திருந்தாள். ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தாள்.“நானே காரை ஓட்டறேன்...” என்றாள்“என்ன ஒரு மாதிரியாயிருக்கீங்க?’’ கேட்ட மனைவியிடமிருந்து உணர்வுகளை மறைக்க அலைபேசியைக் கையிலெடுத்தபோது ஒரு புது எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது.‘சங்கு.. நான் பத்மா. ஹோட்டல் ரெஜிஸ்டர்ல நீ எழுதின உன் செல்ஃபோனை நோட்பண்ணித்தான் இந்த மெசேஜை அனுப்பறேன். உன்னைப் பார்த்ததும் பேசவேண்டும் என்றுதான் ஆசையாக இருந்தது. ஆனால், உன் மனைவி ஏதாவது நினைத்துக் கொள்வாளோ என்று நினைத்துத்தான் அமைதியாகி விட்டேன். நீ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வந்து தங்கும் நிலையில் இருக்கிறாய் என்றால் நிச்சயம் நீ பணக்காரனாகத்தான் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உன் மேல் எனக்கு நிறைய கோபம் இருந்தது, மனசு முழுவதும் காதலை வைத்துக்கொண்டு அதை மறைத்துவிட்டாய் என்று.

ஆனால், காலப்போக்கில் எனக்குப் புரிந்தது, நீ செய்ததுதான் சரி என்று. நீ மட்டும் அன்றைக்கு என் காதலை ஏற்றுக்கொண்டு என்னை இழுத்துக்கொண்டு ஓடியிருந்தால்… நிச்சயம் நம் காதல் அழிந்து போயிருக்கும். வறுமை நமக்குள் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். இயலாமை நம் இதயத்தைக் கிழித்திருக்கும். அந்த அழகான காதலை பருவ வயதுக் கோளாறோ என சந்தேகிக்க வைத்திருக்கும். தப்பு செய்துவிட்டோமோ என்ற  குற்ற உணர்விற்கு ஆளாக்கியிருக்கும். வயிற்றுப் பசியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருப்போமே தவிர வாழ்க்கை லட்சியங்களைக் காற்றில் பறக்க விட்டிருப்போம்.

இணைந்திருந்தால் நம் காதல் மார்ச்சுவரி பிணமாகக் கூறு போடப்பட்டிருக்கும். பிரிந்ததால் நம் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதே அழகுடன். இணைந்தால்தான் காதல் வெற்றியடைவதாகக் கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை இணைந்த எந்தக் காதலும் வாழ்வதில்லை. நிறைய காரணங்களுக்காக காதலர்களே அதை சாகடித்துவிடுவர். இணையாத காதலே என்னைப் பொறுத்தவரை வாழ்கிறது. நான் கோடீஸ்வரியாக வாழ்கிறேன். அதனால் என் காதலும் சேதப்படாமல் செழிப்பாக வாழ்கிறது...’என் மனதில் இருந்த பெரும்பாரம் குறைந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக சிலீரென காற்று வீசியது.

- ஆர்.சுமதி