த லன்ச் பாக்ஸ்



இதுவரை வெளியான இந்திப்படங்களில் சிறந்த பத்து படங்களைத் தேர்வு செய்தால் அதில் ‘த லன்ச்பாக்ஸி’ற்கு நிச்சயம் ஓர் இடமிருக்கும். ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. இலாவிற்கு கணவனுடனான உறவில் சின்ன விரிசல். நல்ல சுவையான உணவைச் சமைத்து கணவனைக் கவர நினைக்கிறாள்.
அப்படி சமைத்த மதிய உணவை டப்பாவாலாவிடம் கொடுத்து, அலுவலகத்தில் பணிபுரியும் தனது கணவனிடம் சேர்க்கச் சொல்கிறாள். மும்பையில் இருக்கும் ஹோட்டல் அல்லது வீடுகளில் சமைக்கப்பட்ட மதிய உணவை அலுவலகங்களுக்குக் கொண்டு சென்று உரியவர்களிடம் சேர்க்கும் பணியைச் செய்பவர்கள் இந்த டப்பாவாலாக்கள்.

இலா கொடுத்த உணவை அவளது கணவனிடம் சேர்க்காமல் சாஜன் என்பவரிடம் சேர்த்துவிடுகிறார் அந்த டப்பாவாலா. மனைவியை இழந்து தனியாக வாழும் அக்கவுன்டன்ட்தான் இந்த சாஜன்.

விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகிறார். எப்போதுமே ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் அவருக்கு இலாவின் உணவு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.  கடிதம் மூலம் இலாவிடம் தொடர்பு கொள்கிறார். இந்த கடிதத் தொடர்பு இருவருக்குள்ளும் என்ன மாதிரியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதே அழகான திரைக்கதை. மறக்க முடியாத ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சாஜனாக நடித்த இர்ஃபான் கான். படத்தின் இயக்குநர் ரிதேஷ் பத்ரா.