வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்யும் பெண்களே... இந்த 2 பக்கங்கள் உங்களுக்குத்தான்!



இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்குச் சென்று வந்த காலத்தில் உணவுப்பழக்கம் சீராக இருந்தது. எப்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால், இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது.
பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால் பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்றுதான் பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிஸ்ஸார்டர்). கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதைக் கூறலாம்..

இந்த கட்டியில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி, உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும்.இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பதுதான். அதிகக்கொழுப்புச் சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும். மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல, வேறு எந்த நோயும் அண்டாது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போது இதையெல்லாம் எப்படி சரி செய்வது... இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது..?  

சிம்பிள். வேலையின் இடைவெளி களில் உடற்பயிற்சி செய்யலாம். பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப்பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளைச் செய்தால் உடற்பயிற்சி செய்வது போல் கடினமாகத் தோன்றாது.எடைக்குறைவு, மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.

(படத்தில் இருப்பவர்கள் மாடல்களே)

ஜான்சி