கோடிகளில் புரளும் இந்திய முடிகள்!



அண்மையில் சென்னையில் முடிகளை சேகரித்து மொத்த வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி வீட்டில் ஒரு கொள்ளையன் புகுந்து அந்த முடிகளை லவட்டிக் கொண்டு போன சம்பவம் அரங்கேறியது.

‘‘ப்பூ... முடிகளைப் போய் திருடியிருக்கிறார்களே... அதில் என்ன கிடைக்கும் என்று உதட்டைச் சுழிக்கலாம். ஆனால், இந்தியாவின் முடி ஏற்றுமதி பல கோடிகளில் புரள்வதை மறக்கக் கூடாது. அதிலும் உலகளவில் இந்திய முடி என்பது தரத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது...’’ என்கிறார் ஜார்ஜ் செரியன்.
சென்னையில் மனித முடிகளை ஏற்றுமதி செய்யும் ராஜ் இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜார்ஜ் செரியன். இவரது தந்தையால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ‘‘மொதல்ல இந்தியாவில் முடிகள் எப்படி கிடைக்கிறது என்ற விஷயத்தை தெரிந்துகொண்டால்தான் இதுபோன்ற திருட்டுகள் ஏன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

இந்தியாவில் இரண்டு வகையாக முடிகள் கிடைக்கின்றன. ஒன்று கோயில்களிலிருந்து. மற்றது நம் வீடுகள், சலூனில் இருந்து. கோயில்களில்  மொட்டை போடுவது, முடி தானம் செய்யும் காணிக்கைகள் பலகாலமாக நடந்து வருகின்றன.

அடுத்து நாம் வீட்டில் தலையை சீவும்போது கீழே விழும் முடி, சலூனில் வெட்டும் முடி. இந்த இரண்டு வகையான முடிகளை சேகரிப்பதுதான் இந்தியாவில் ஒரு வியாபாரமாக பலகாலமாக நடக்கிறது. இந்த முடி சேகரிப்பில் 75 சதவீதம் வீடுகளில் இருந்து கிடைக்கிறது என்றால், கோயில்களில் இருந்து கிடைப்பது 25 சதவீதம்தான்.

ஆனால், இந்த இரண்டுவிதமான முடிகளில் அதிக பெறுமதியானது, விலை அதிகம் போகக்கூடியது கோயில் முடிகள்தான்...’’ என்று சொல்லும் ஜார்ஜ் அந்த வித்தியாசங்களையும் விவரித்தார்.

‘‘முழுமையாக மொட்டை போடும்போதோ அல்லது முடியை பெரிய அளவில் வெட்டும்போதோ கோயில்களில் கிடைக்கும் முடியானது நீளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டில் முடி சீவுபவர்கள் அல்லது சலூனில் முடி வெட்டிக்கொள்பவர்களின் முடி, நீளம் குறைவாக இருக்கும். இத்தோடு கோயில்களில் மொட்டை போடும்போது முடியை வெட்டுபவர்களால் முடியின் தலை எது, வால் எது என்று பிரித்து வைக்கமுடியும். முடியின் தலை என்பது முடியின் வேர்ப் பகுதியைக் குறிக்கும். ஆனால், வீட்டிலோ, சலூனிலோ வெட்டப்படும் முடியின் தலை எது வால் என்று பிரித்தறிய முடியாது. இது சிக்கல் நிறைந்ததாகவும், குப்பைகளுடன் சேர்ந்தும் இருக்கும்.

இதனால்தான் தலை வேறு, வால் வேறு என்று கண்டுபிடிக்கக்கூடிய முடியை ஃப்ரெஞ்சு மொழியில் ‘ரெமி’(Remy) என்றும்; அப்படி கண்டுபிடிக்கமுடியாத முடியை ‘நான்-ரெமி’(Non-Remy) என்றும் உலகளவில் அழைக்கிறார்கள். ரெமி முடியின் மதிப்பும் விலையும் அதிகம். நான்-ரெமியின் முடி கால்வாசியே பெறும்...’’ என்று சொல்லும் ஜார்ஜ் இந்த இரண்டு வகையான முடிகளின் மதிப்பும் விலையும் ஏன் மாறுபடுகிறது என்றும் விவரித்தார்.

‘‘உலகளவில் முடி வர்த்தகத்தில் பெரும் மதிப்புடையது, விலை ஏறிக்கொண்டே இருப்பது டோபா என்று சொல்லப்படும் விக்குகளுக்காகத்தான். விக்குகளுக்குத் தேவை நீண்ட முடிகள்.
இதனால் இந்தியக் கோயில்களில் கிடைக்கும் முடிகளின் மதிப்பும் விலையும் அதிகம். வீடு, சலூனில் கிடைக்கும் குட்டையான, சிக்கான முடிகளை சில கயிறு வகைகள், திருஷ்டி கயிறுகள் மற்றும் இன்னபிற சிறு தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதிலும் சிக்கான முடிகளை நேராக்கி, அவற்றை குப்பைகளில் இருந்து பிரித்து சுத்தம் செய்வதற்கே  பலமணிநேரம் தேவைப்படும்.

கோயில் முடி கிலோவுக்கு 15000 ரூபாய் என்றால் வீடு, சலூன் முடி கிலோவுக்கு 4000 ரூபாய் என்ற அளவிலேயே விலை போகும்...’’ என்றவர் இந்தியாவின் ஏற்றுமதியில் அதிக இடமும், வருமானமும் பெற்றுத் தரும் விக்குகள் பற்றி பேசினார்.‘‘விக்குகள் தயாரிப்பு பலவகைப்படும். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, ரசனைக்கேற்ப, பொருத்தத்துக்கு ஏற்ப விக்குகளைத் தயாரிக்கவேண்டும். அதாவது ரஜினிக்கு என்றால் ஒருவகை, கமலுக்கு என்றால் ஒருவகை என்பது போல.

ஒரு விக் செய்ய பலபேரின் முடி தேவைப்படும். ஒரு விக் செய்ய குறைந்தது 8 அங்குல நீளம் கொண்ட முடி தேவை. இதனால்தான் விக் செய்பவர்கள் கோயில்கள் விடும் ஏலத்திலிருந்தோ அல்லது காண்ட்ராக்ட் மூலமோ இந்த முடிகளைப் பெற்று வியாபாரம் செய்கிறார்கள். முடியின் தலையும் வாலும் தெரியக்கூடியதாக இருக்கவேண்டும் என்று சொன்னதற்குக் காரணம், ஒருவரின் முடியின் வேர்ப் பகுதியும் வால் பகுதியும் வேறுவேறு மாதிரியான இழைப்பிலும் கனத்திலும் இருப்பதுதான்.

உதாரணமாக ஒரு முடியில் அதிக கனம் வேரில்தான் இருக்கும். வால் பகுதி கனம் குறைந்ததாகத்தான் இருக்கும். ஆகவே, ஒரு விக் செய்யும்போது வேர்ப் பகுதிகளை ஒருபுறமும், வால் பகுதியை மறுபுறமும் வைத்துச் செய்தால்தான் அது இயற்கையான முடி போல் இருக்கும். தலை வேறு, வால் வேறாக செய்தால் அது தலைமுடிபோலவே இருக்காது. இத்தோடு வேர்ப் பகுதிதான் வளரக்கூடியது. மொத்த வேர்ப் பகுதியும் ஒரே பக்கத்தில் இருந்தால் அது வளர்ந்து வால் பகுதிக்கும் ஒரு நீளத்தைக் கொடுக்கும். கூடவே இந்த விக்குகளுக்கு ஒருவரின் தேவைக்கேற்ப கலர் செய்வது எல்லாம் இருக்கும்...’’ என்று சொல்லும் ஜார்ஜின் நிறுவனம் முடி தானம், முடி போன புற்றுநோயாளிகளுக்கு இலவச விக்குகளை வழங்குதல் உள்ளிட்ட சேவையையும் செய்து வருகிறது.

‘‘புற்றுநோய் மற்றும் சில சரும நோய்களால் முடி போனவர்களுக்கு விக்குகளை செய்வதற்காக ‘பெல்லி அண்ட் ஹோம்’ என்ற ஒரு கிளை நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இலவச நிதிகள் மூலம் இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்த விலை அல்லது இலவசமாக இந்த விக்குகளை வழங்கி வருகிறோம். அப்படி இதுவரை சுமார் 800 விக்குகளை  இலவசமாக வழங்கியிருக்கிறோம். அதேபோல ‘செரியன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் மூலம் முடி தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயாளிகளின் விக் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம்.
 
கோயில்களில் கிடைக்கும் இயற்கையான முடிகளால்தான் உலகளவில் இந்திய முடிகளுக்கு மதிப்பும் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்த முறை மற்ற நாடுகளில் கிடையாது. ஆனால், இவை இந்தியாவின் முடி சேகரிப்பில் வெறும் 25 சதவீதம்தான். வீடுகளிலும், சலூன்களிலும் முடி வெட்டும் நபர்கள் இந்த முடி தேவைகளைப் புரிந்து கொண்டு சுமார் 8 அங்குல அளவுக்காவது வெட்டிக்கொண்டால் பலரும் பயன்பெறுவர்.

இன்று முடி தொடர்புடைய டை, கலரிங் போன்ற தீங்கான பழக்கவழக்கங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் இயற்கை முடி மதிப்பை வருங்காலத்தில் குறைத்துவிடும். முடியின் வால் பகுதியில் டை இருந்தாலும் போகப்போக அது வேர்ப் பகுதிகளையும் பதம் பார்க்கக்கூடியது. இதையெல்லாம் மனதில் கொண்டு முடி தானம் செய்பவர்கள் செயல்பட வேண்டும்...’’ என்கிறார் ஜார்ஜ் செரியன்.   

டி.ரஞ்சித்