துப்புரவுத் தொழிலாளியை மணந்த மருத்துவர்!
பாகிஸ்தானைச் சேர்ந்த கிஸ்வர் சாஹிபாவின் திருமணத்தைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக். பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் முக்கிய பெண் மருத்துவராக இருந்தார் கிஸ்வர். அந்த மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் சாஷாத்.
 தவிர, மருத்துவர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுப்பதும் சாஷாத்தின் பணி. ஒரு நாள் கிஸ்வரின் அறைக்கு தேநீர் கொடுக்கச் சென்றிருந்தார் சாஷாத். ‘‘ஏதாவது அவசரம் என்றால் கூப்பிட வேண்டும். போன் நம்பர் தாருங்கள்...’’ என்று கிஸ்வர் கேட்க, சாஷாத்தும் கொடுத்துவிட்டார்.
தனது ஸ்மார்ட்போனில் சாஷாத்தின் எண்ணை சேமித்த பிறகு, வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்களை நோட்டமிட்டிருக்கிறார் கிஸ்வர். அன்று சாஷாத் வைத்திருந்த ஸ்டேட்டஸ் கிஸ்வருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அடுத்த நாளே கிஸ்வர் காதலைச் சொல்ல, சாஷாத் பச்சைக்கொடி காட்ட, திருமணமும் முடிந்துவிட்டது.
ஒரு துப்புரவுத் தொழிலாளியை, மருத்துவர் ஒருவர் திருமணம் செய்த நிகழ்வு மருத்துவமனையில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதனால் மருத்துவமனையிலிருந்து விலகிவிட்டார் கிஸ்வர். தான், குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு கிளினிக்கைத் திறக்கப்போகிறார் கிஸ்வர். தவிர, புதுத்தம்பதியர் இணைந்து இப்போது ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
த.சக்திவேல்
|