இரண்டாம் எலிசபெத் A to Z
இங்கிலாந்தின் நீண்ட கால முடியாட்சியின் குறியீடாக இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96வது வயதில் காலமானார். இவர் 70 ஆண்டுகள் பிரிட்டனின் மகாராணியாகப் பொறுப்பில் இருந்தார்.
 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று லண்டன் நகரத்தில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் என்கிற இயற்பெயரோடு பிறந்தார் இரண்டாம் எலிசபெத்.
1947, நவம்பர் 20ம் தேதி கிரீஸின் இளவரசராக இருந்த பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2021ல் தன்னுடைய 99வது வயதில், கிட்டத்தட்ட 74 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு உடல் நலக் குறைவால் காலமானார் இளவரசர் பிலிப்.
 1948ம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு சார்லஸும், 1950ல் இளவரசி ஆனேவும், 1960ல் இளவரசர் ஆண்ட்ரூவும், 1964ல் இளவரசர் எட்வர்டும் பிறந்தனர். இந்தப் பிள்ளைகள் வழி மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்புக்கு மொத்தம் எட்டு பேரக் குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரன் பேத்திகள் பிறந்தனர்.
1952ம் ஆண்டு இளவரசி எலிசபெத் கென்யாவில் இருந்த போது அவருடைய தந்தை காலமானார். அதன் பிறகுதான் -அதாவது 1953, ஜூன் 2 அன்று - பிரிட்டனின் மகாராணியாக எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது. அப்போது அவருக்கு வயது 27 மட்டுமே.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனின் மகாராணியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டாம் எலிசபெத் காலத்தில்தான், பிரிட்டன் சாம்ராஜ்யம் காமன்வெல்த் ஆகப் பரிணமித்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
அவருடைய காலத்தில்தான் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் சேர்ந்தது, அவருடைய காலத்திலேதான் பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் தனி நாடாகப் பிரிந்து வந்தது.வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களோடு பணியாற்றியுள்ளார் இரண்டாம் எலிசபெத் மகாராணி. சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை அன்றுதான் லிஸ் ட்ரஸ்ஸை பிரிட்டன் பிரதமராக மகாராணியார் முறைப்படி நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில் மொத்தம் 3 பெண்கள் பிரிட்டனின் பிரதமராகப் பணியாற்றியுள்ளனர் என்பது ஹைலைட்.
என்.ஆனந்தி
|