99 வயதில் 100 பேரன்கள், பேத்திகள்!
சரியாக 100 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1922ம் வருடம் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்தார் மார்கரெட் கொல்லர். ஒரே மகள் என்பதால் தன் விருப்பப்படி வளர்ந்தார் கொல்லர். பதின்பருவத்தில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற கொல்லரின் விருப்பத்துக்குக் கூட அவரது பெற்றோர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை. அதனால் கன்னியாஸ்திரி ஆவதற்கான முயற்சிகளில் இறங்கினார் கொல்லர்.
 அப்போது வில்லியம் என்பவரைச் சந்திக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 1942ல் வில்லியமை திருமணம் செய்துகொண்டார் கொல்லர். இந்த தம்பதியினருக்கு 11 குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்திருந்த போது வில்லியம் மரணமடைந்துவிட்டார். அதற்குப் பிறகு தனியாகவே குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கினர் கொல்லர்.
இந்த 11 வாரிசுகள் மூலம் 56 பேரன், பேத்திகளுக்கு பாட்டியானார் கொல்லர். அதற்குப்பின் கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும் கொல்லரின் குடும்பத்துக்குள் இணைந்தனர். சமீபத்தில் 100வது கொள்ளுப் பேரனுக்குப் பாட்டியாகியிருக்கிறார் கொல்லர். அந்த கொள்ளுப்பேரனுக்கு வில்லியம் கொல்லர் பிளாஸ்டர் என்று கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியின் பெயரை வைத்துள்ளனர்.
த.சக்திவேல்
|