டைட்டில் ரோல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, யானை, குதிரை, போர்...
பொன்னியின் செல்வன் அனுபவங்களை பகி ர்ந்துகொள்கிறார் ஜெயம் ரவி
‘‘‘கல்கி’ வார இதழ்ல ‘பொன்னியின் செல்வன்’ வெளியான நேரம். ஒவ்வொரு தொடரா சேர்த்து பைண்டிங் செய்து பழைய பேப்பர் கடைல வெச்சிருப்பாங்க. அதை வாங்க சைக்கிள்ல பல மைல்கள் போவேன். அப்படிப் படிச்ச ஒரு கதைல ‘நீ இன்னைக்கு ஹீரோவா?!’னு அப்பா அவ்வளவு எமோஷனல் ஆகிட்டார்...’’ சொல்லும் போதே, தானும் எமோஷனலாகிறார் அருண்(ள்)மொழி வர்மனாக, கதைத் தலைப்பின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக நடிக்கும் ‘ஜெயம்’ ரவி.
 வாய்ப்பு வந்தவுடன் உங்களுக்குள் தோன்றிய கேள்விகள் என்னென்ன? முதல்ல என்னல்லாம் மணிரத்னம் சார் சொன்னார்னு கேளுங்க. ஆரம்பத்துல ‘பொன்னியின் செல்வன்’ பட உருவாக்கம், அதுல நடிக்க அழைப்பு... அதையே என்னால நம்ப முடியலை. அடுத்த அதிர்ச்சி ‘நீதான் டைட்டில் கேரக்டர் ரவி’னு அவர் சொன்னதும் இது உண்மைதானா... நிஜமாவே இது சாத்தியமா... இத்தனை நடிகர்கள் இருக்கும் போது நான் ஏன் ராஜ ராஜ சோழன்னு ஏகப்பட்ட கேள்விகள் எனக்குள்ள.‘இன்னைல இருந்து நீ வீட்டுக்கு போனா கூட ஒரு ராஜாவாதான் இருக்கணும். உன் கண்ணுக்கு முன்னாடி இருக்கற அத்தனையும் உனக்கு சொந்தம் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கணும்’னு சொன்னார்.

அப்பறம் என்ன... வீட்டு மாடில உட்கார்ந்தா கூட ‘ஆங் இந்தப் பக்கத்து வீடு என்னது, ஏன், கடல் இருக்கே... அதுகூட எனக்குதான் சொந்தம்’னு இருந்தேன்.
டப்பிங்குல வசனம் பேசும் போது மணி சார் அவ்வளவு அழகா மாடுலேஷனை புரிய வைப்பார். சில வார்த்தைகளை அழுத்துவோம், அப்ப ‘அவ்வளவு அழுத்த வேண்டியதில்ல, கேரக்டரையும், விஷயத்தையும் உள்ள வாங்கிக்க, அந்தந்த வார்த்தைகள், தானாகவே அழுத்தமாகும்னு சொன்னார்.அருண்மொழி வர்மன் பாத்திரமா மாற என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது?

நாவல் படிக்கும் போதே மனசுல இருந்த ராஜ ராஜ சோழன் சிவாஜி சார்தான். அவரை நாம பார்த்திட்டோம். அவர் கேரக்டரை எல்லாம் ஓவர்டேக் செய்யவே முடியாது. ஆனா, இளவரசன் அருண்மொழிவர்மனை யாரும் பார்த்ததில்லை. அதை ஒரு பெரிய பிளஸ்ஸா நினைச்சேன். டைட்டில் ரோல்... இதைவிட என்ன சவால் இருக்கணும்.
ஆறு மாசத்துக்கு முன்னாடியே முடி வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். இந்த தோள்பட்டைய ரெடி பண்ணவே சரியா இருந்துச்சு. கவசம், வாள் இதெல்லாம் தூக்கவே தனி பலம் வேணும். எப்படி அந்தக் காலத்திலே இந்த 50, 100 கிலோ ஆயுதங்கள், கவசமெல்லாம் போட்டுக்கிட்டே இருந்தாங்கன்னு தோணுச்சு.  அடுத்து குதிரை சவாரி, வாள் வீச்சு... இப்படி நிறைய தயாராக வேண்டியிருந்தது. ராஜா என்கிற மனநிலையைக் கொண்டு வரவே தனியா என்னை நான் தயார் செய்துக்கிட்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்துல கமிட் ஆனதுமே நாவலைப் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா, மணி சார் ஸ்கிரீன்பிளே படிக்கும்போது கொஞ்சம் புதுசா இருந்துச்சு. சரி, குழப்பிக்க வேண்டாம். இது மணி சார் வெர்ஷன்... அதுக்கு ரெடியாவோம்னு தயாரானேன்.
 மணிரத்னத்திடம் பாராட்டு, திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?
சார் பாராட்டைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன? நல்லா இருந்தா ஒரு ஸ்மைல்; ரொம்ப நல்லா இருந்தா ‘நைஸ்’, ‘குட்’ அவ்ளோதான்.
ஆங்... திட்டெல்லாம் வாங்கியிருக்கேன். ‘பொன்னியின் செல்வன்... டோன்ட் லுக் டவுன்’னு அவர் அழுத்தமா , ஸ்டிராங்கா சொல்லும்போதே, இளவரசன் கீழ குனிய மாட்டார்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்ப முதல் இப்ப வரை பாருங்க... தலை குனியவே இல்ல! வீட்டில் அப்பா, அம்மா, குறிப்பா அண்ணன் இயக்குநர் ராஜா என்ன சொன்னார்?

அம்மா எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் ரெண்டுலயும் லிட்ரேச்சர் முடிச்சவங்க. நான் அருண்மொழி வர்மனா வசனம் பேச எனக்கு உதவினதே அம்மாதான். ‘ழ’, ‘ல’, ‘ள’ உச்சரிப்புக்கு எல்லாம் அம்மாதான் ஃபுல் கிளாஸ் எடுத்தாங்க. மத்தபடி ராஜாவா நடிச்சாலும், கூஜாவா நடிச்சாலும் அம்மாவுக்கு எப்பவுமே ஹேப்பிதான். அப்பாதான் ‘நீ பொன்னியின் செல்வனா?’னு கேட்டு செம எமோஷனலாகி சந்தோஷப் பட்டார்.
நானும் அண்ணனும் ‘தனி ஒருவன் - 2’ பட வேலைகள் ஆரம்பிக்க இருந்தோம். இந்த வாய்ப்பு வந்த உடனேயே அண்ணன் சொன்ன வார்த்தைகள் ‘நாம ரெண்டு பேரும் ஒண்ணாதான் இருக்கோம்... எப்ப வேணும்னாலும் இந்தப் படம் எடுக்கலாம். ஆனா, ‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு அப்படி இல்ல... முதல்ல அந்த ஸ்கூலுக்குப் போயிட்டு வா’னு அண்ணன் சொல்லும் போது மணி சார் மேலே அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்குன்னு புரிஞ்சது. ரஹ்மான் இசையில் முதல் படம்... என்ன சொல்ல! இத்தனை வருஷத்துக்கு அப்பறம், எத்தனையோ விருதுகள், சாதனைகளுக்கு அப்பறமும் கூட அவர் இசைக்கான தேடல் நிற்கவே இல்ல. உலகம் முழுக்க பயணம் செய்திருக்கார். இந்த ‘பொன்னியின் செல்வன்’ இசைக்காக உலகம் முழுக்க சுத்தி தேடி இசையை கொண்டு வந்திருக்கார்.
மணி சார் + ரஹ்மான் சார் காம்போவுக்கு நான் ரசிகன். அவங்க காம்போல இப்ப நான் மெயின் ரோல்... சொல்லணுமா... சந்தோஷத்தை விளக்க வார்த்தையே இல்ல. நான்கு படங்கள் த்ரிஷாவுடன் ஜோடியாக நடித்துவிட்டு இப்போது சகோதரி... ரசிகர்கள் பாவம் இல்லையா?
நான் மட்டும் யாரு? த்ரிஷா ஆதரவாளர்கள்ல ஒருத்தன்தானே! மெகா ஹிட் படங்கள், ஹிட் பாடல்கள்னு த்ரிஷா கூட நடிச்ச அனுபவங்களை மறக்கவே முடியாது.
ஆனா, இந்தப் படத்துல நடிக்கும்போது நாங்க ரெண்டு பேருமே ஜெயம் ரவி, த்ரிஷாவா தெரிய மாட்டோம். அருண்மொழிவர்மன், குந்தவையாதான் தெரிவோம். குந்தவை பாத்திரத்துக்கு த்ரிஷா அவ்வளவு பொருத்தமா இருக்காங்க. நானே சொல்லக் கூடாது, ஆனாலும் சொல்றேன், இந்தப் படத்திலே ஒவ்வொரு கேரக்டரும் உங்களுக்கு நடிகர்களா தெரிய மாட்டாங்க. அத்தனை பேரும் கேரக்டர்களா மட்டுமே தெரிவோம். அதுதான் மணி சார் மேஜிக்.
பொன்னியின் செல்வன்- வந்தியத்தேவனின் புரோமான்ஸ் எப்படி வந்திருக்கு? விக்ரம், ஐஸ்வர்யா ராய் பற்றி சொல்லுங்க!
வந்தியத்தேவன் கேரக்டருக்குனே பிறந்தவர் கார்த்தி. அவ்வளவு சரியான பொருத்தம். ‘என் சகோதரிக்கு வந்தியத் தேவன் மேலே நம்பிக்கை, அதனால் எனக்கும் அவர் மேலே நம்பிக்கை... இதுதான் கதைல பந்தம்’னு மணி சார் சுலபமா விளக்கிட்டார். ஆனா, அதைக் கடந்து நிறைய ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள், மணி சார் பார்க்காமலே எங்களுக்குள்ள ஃபன்... இப்படி ஒரு செம பாண்டிங் எங்களுக்குள்ள வந்திருக்கு.
விக்ரம் சார்... எனக்கு சீனியர். இந்த வார்த்தைக்கு எவ்வளவு மரியாதை இருக்கணுமோ அந்த மரியாதைக்குரிய அத்தனை திறமையும் அவர்கிட்ட இருக்கு. ஜஸ்ட் லைக் தட் நடிச்சிட்டு போயிட்டே இருப்பார். ஐஸ்வர்யா மேம் கூட முதல் படம். உலக அழகியா அவங்களுக்கு கிரீடம் சூட்டப்பட்ட காட்சியை டிவில பார்த்தவங்கள்ல நானும் ஒருத்தன். அவங்க ரசிகன். அப்படிப்பட்டவங்களோடு நடிப்பேன்னு நினைச்சே பார்க்கலை.
படம் முழுக்க அவ்வளவு நடிகர்கள். விக்ரம் பிரபு, பார்த்திபன் சார், ஜெயராம் சார்... அப்புறம் பிரகாஷ்ராஜ் சார் கூட ஏழு படங்கள் நடிச்சிருக்கேன். நடிப்பைத் தாண்டிய நட்பு எங்களுக்குள்ள இருக்கு.பிரபு சார், நாசர் சார், சரத்குமார் சார், கிஷோர் ப்ரோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா... இப்படி எல்லாருமே அவ்வளவு ஹார்ட் ஒர்க் கொடுத்திருக்காங்க.
பிரபு சார்லாம் ‘ஹ்ம்ம்..! கீழே குனியாதே, ஷோல்டரை தூக்கி நில்லு...’னு சொல்லிட்டே, ‘அப்படியே அவனுக்கு சொல்லிக் கொடு’னு விக்ரம் பிரபுவை கைகாட்டிட்டு போவார். இந்தப் படம் எல்லாரையும் ஒரு குடும்பமா இணைச்சிடுச்சு.
ஹீரோ டூ இளவரசன்... ஜெயம் ரவி ரொம்ப அழகானவரா தெரியறாரே?போன வருஷம் வரைக்கும் ஸ்கூல் ஸ்டூடண்டா கூட நடிச்சிருக்கேன். அப்ப ஒரு நடிகனா நான் என்னை சரியாதான் கவனிச்சிக்கிறேன்னு நினைக்கறேன். அதையும் தாண்டி நான் ஸ்கிரீன்ல நல்லா இருக்கேன்னா அதற்குப் பின்னாடி கேமரா மேன் ரவிவர்மன் சார் பங்கும் அதிகமா இருக்குன்னு சொல்லணும்.
அவர் ஃபிரேம்ல நான் என்ன... யாரா இருந்தாலும் அம்சமா இருப்பாங்க. நிறைய லொகேஷன்ஸ், உலகம் முழுக்க சுற்றி ஷூட் செய்திருக்கோம். தோட்டா தரணி சார் செட்லாம் பார்த்து ஆச்சர்யப்படுவீங்க. அவ்ளோ மெனக்கெட்டிருக்கார்.
ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்று...நிறைய இருக்கே, எதைச் சொல்ல? மொத்தப் படமே சுவாரஸ்யமான அனுபவம்தான். ‘சந்திரலேகா’ படத்துக்கு அப்பறம் மிகப்பெரிய பிரம்மாண்ட உருவாக்கம்னு நினைக்கிறேன். ஆங்... இந்த சம்பவம் சொல்றேன். எனக்கு யானை கூட ஒரு காட்சி இருக்கு.
நாவல் படிச்சவங்களுக்கு அது என்ன காட்சின்னு நிச்சயம் தெரியும். அந்த சீன்ல யானை காதுல போய் நான் பேசணும். அப்ப மணி சார் கேட்டார் ‘என்ன சொல்லப் போறே?’, நான் ‘தெரியலை சார்’னு சொன்னேன். ‘சரி... இந்தப் படம் சீக்கிரம் முடியணும்னு போய் சொல்லு... போ’னு சொன்னார். அப்படியே போயி யானை காதிலே சொன்னேன். இப்ப சொன்னபடி முடிஞ்சு ரிலீஸுக்கும் தயாராகிடுச்சு!
ஷாலினி நியூட்டன்
|