இந்தியாவை உலுக்கும் இ-வேஸ்ட்



உடல் ஆரோக்கியத்திலும், சுற்றுச்சூழலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இ-வேஸ்ட்டை கட்டுப்படுத்துவதும், அதை சரியாக மேலாண்மை செய்வதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். மண், நீர், காற்று ஆகியவற்றுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் இ-வேஸ்ட்களுக்கு இருப்பதால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தன்மையிலும், எளிதாக மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலும் எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும்படி நிறுவனங்களுக்குக் கோரிக்கை வைக்கின்றனர் இ-வேஸ்ட் நிபுணர்கள்.

அதென்ன இ-வேஸ்ட்?

வீட்டை அடைத்துக்கொண்டு பயன்படாமல் இருக்கும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன், கம்ப்யூட்டர், ஏசி, ஃபேன்... போன்ற அனைத்து விதமான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் தூக்கியெறிவோம் அல்லது பழைய பொருட்கள் வாங்கும் கடைகளில் எடைபோட்டு விற்போம். இப்படித் தூக்கியெறியப்படும் எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகளைத்தான் ‘இ-வேஸ்ட்’ என்று அழைக்கின்றனர்.

இருபது வருடங்களுக்கு முன்பு வளர்ந்த நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு சொல், இ-வேஸ்ட். இன்று இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சியும், அதிகரித்திருக்கும் வாங்கும் திறனும்தான் மக்கள் மத்தியில் அதிகமான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புழங்க காரணம். மட்டுமல்ல; மக்களும் அடிக்கடி பழைய எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, புது மாடல்களுக்கு மாறுகின்றனர். இதன் விளைவாக இந்தியாவுக்கும் இ-வேஸ்ட் நெருக்கமாகிவிட்டது.

இந்தியா முழுவதும் சேகரிக்கப்படும் இ-வேஸ்ட்கள் தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மாநகரங்களில் குவிக்கப்படுகின்றன. இப்படி குவியும் இ-வேஸ்ட்களை முறையாகவும், முறையற்ற முறையிலும் மறுசுழற்சி செய்து, கடைசி துகள் வரை விற்பனை செய்யும் பிசினஸும் அரங்கேறி வருகின்றன.மட்டுமல்ல; இ-வேஸ்ட்டை மறுசுழற்சி செய்த பிறகு கிடைக்கும் பொருட்கள் தொழில்நிறுவனங்களுக்குப் பயன்படுகின்றன; பல்வேறு பொருட்கள் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

அதனால்தான் ஏராளமான தொழில்நிறுவனங்கள் இ-வேஸ்ட் மறுசுழற்சி மையங்களை மொய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதுபோக சில இ-வேஸ்ட்கள் பழுதுபார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு மறுபடியும் விற்பனைக்குச் செல்கின்றன. சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இ-வேஸ்ட்டை மேலாண்மை செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்பது மட்டுமே இதிலிருக்கும் ஒரே ஆறுதல்.

நச்சுப்பொருட்கள்

லெட், மெர்க்குரி, லித்தியம், காட்மியம், நிக்கல், பேரியம், பெரிலியம், குரோமியம் போன்றவற்றுடன் பிளாஸ்டிக்கும் இ-வேஸ்ட்டில் கலந்துள்ளன.
இவற்றால் நரம்பு மண்டலம் உட்பட மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். தவிர, சிறுநீரகக் கோளாறும், மூச்சுப்பிரச்னையும் வரலாம்.

உற்பத்தி

இந்தியாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் கம்பெனிகளும் சேர்ந்து 75 சதவீத இ-வேஸ்ட்டை உற்பத்தி செய்கின்றன. இ-வேஸ்ட்டில் தனி நபர்களின் பங்களிப்பு 16 சதவீதம் மட்டுமே. மில்லியன் டன்களில் குவிக்கப்படும் இ-வேஸ்ட்களில் 70 சதவீதம் கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த சாதனங்களிலிருந்தும், 12 சதவீதம் டெலிகாம் துறைகளிலிருந்தும், 8 சதவீதம் மருத்துவ உபகரணங்களிலிருந்தும், 7 சதவீதம் மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களிலிருந்தும் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் வருடந்தோறும் இ-வேஸ்ட்டின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கிறது.

வகைகள்

இ-வேஸ்ட் துறையில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசியை ‘ஒயிட்’ என்றும்; டிவி, கேமரா, ரெக்கார்டை ‘பிரவுன்’ என்றும்; கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், பிரின்டர்களை ‘கிரே’ என்றும் வகைப்படுத்துகின்றனர்.

இ-வேஸ்ட்டில் உள்ளவை

இந்தியாவில் குவிக்கப்படும் இ-வேஸ்ட்டில் 50 சதவீதம் இரும்பும், ஸ்டீலும், 21 சதவீதம் பிளாஸ்டிக்கும், 13 சதவீதம் காப்பர், அலுமினியம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களும்; மீதி 16 சதவீதம் மற்ற பொருட்களும் கலந்துள்ளன. இந்தப் பொருட்களைப் பிரித்து விற்பனை செய்வதற்காகவே லட்சக்கணக்கானோர் இ-வேஸ்ட் மறுசுழற்சிப் பணிகளில் நேரடி
யாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் இயங்கிவருகின்றனர். குறிப்பாக ஆயிரம் கிலோ எடை கொண்ட செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் இ-வேஸ்ட்டிலிருந்து 280 கிராம் தங்கம் கிடைக்கும். இதன் விலை சுமார் 16 லட்ச ரூபாய்.

விற்பனை

இந்தியாவில் வருடத்துக்கு 15 கோடி ஸ்மார்ட்போன்கள், 1.75 கோடி தொலைக்காட்சிகள், 2 கோடி ஆடியோ உபகரணங்கள், 1.45 கோடி ஃபிரிட்ஜ்கள், 70 லட்சம் வாஷிங் மெஷின்கள் விற்பனையாகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 9 முதல் 10 வருடங்கள். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் சராசரியாக ஐந்து வருடங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு இந்த எலெக்ட்ரானிக் சாதனங்கள் எல்லாம் இ-வேஸ்ட்களாக கழிக்கப்படுகின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் முறையாக 472 இ-வேஸ்ட் மறுசுழற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இவை 15 சதவீத இ-வேஸ்ட்களை மட்டுமே மறுசுழற்சி செய்கின்றன. மீதியிருக்கும் 85 சதவீத இ-வேஸ்ட்கள் சட்டத்துக்குப் புறம்பாகவும், பாதுகாப்பில்லாமலும் இயங்கி வரும் முறையற்ற மையங்களால் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

இந்த முறையற்ற மையங்களில் மட்டும் 4 முதல் 5 லட்சம் வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். இந்த மையங்களில் மறுசுழற்சி செய்வதற்காக சரியான தொழில்நுட்பமும், வசதிகளும் இல்லாததால் இங்கே வேலை செய்பவர்கள் உடல் ரீதியாக பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.  

த.சக்திவேல்