கலைஞர், சிவாஜி, ஜெயலலிதா, எஸ்பிபி... இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர்!



உலகில் முதல்முதலாக ஃப்ரீசர் பாக்ஸை கண்டுபிடித்தவர்...

ஆம்புலன்ஸில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியவர்...


‘‘ஒருகாலத்துல எங்கள பார்த்து ஒதுங்கிப் போனவங்க அதிகம். பக்கத்துலகூட சேர்த்துக்க மாட்டாங்க. ஏன்னா, நோயாளிகளை ஏத்திட்டுப் போயிருப்போம். இறந்த உடலை எடுத்திருப்போம். எங்க மேல கிருமிகள் இருக்கும். அது ஒட்டிக்கும்னு நினைப்பாங்க. இதுமட்டுமல்ல. இறந்த உடலை கொண்டு போய் ஒப்படைக்கும்போது சாந்தகுமார் சாந்தகுமார்னு அந்த வீட்டின் உரிமையாளரே தோள்ல கைபோட்டு ரொம்பப் பிரியமா பேசுவார். அவர் வீட்டு பெட்ரூம் வரை நம்மை அனுமதிப்பார்.

ஆனா, மறுநாள் பணம் வாங்கப் போகும்போது அவர் டிரைவர்கிட்ட சொல்லி அனுப்புவார். அதுவும் கேட்டில் நிற்க வச்சு. காரணம், மறுநாள் பிணம் தூக்கியா நான் மாறியிருப்பேன். உள்ளே வந்தா தீட்டு. 80கள்ல இதை ஈனத்தொழில்னு நினைச்சாங்க. ஆனா, இன்னைக்கு அப்படியில்ல. சாந்தகுமார் என் நண்பர்னு பலரும் சொல்ற அளவுக்கு நான் வளர்ந்திருக்கேன். அதுக்கு கடவுளின் அனுக்கிரகமும், ஆசீர்வாதமும்தான் காரணம்.

இப்ப இந்தியா முழுவதும் ஒன்றரைக் கோடிப் பேர் இந்தத் தொழில்ல இருக்காங்க. எனக்கு இந்த வாழ்க்கையை உருவாக்கித் தந்தது உயிரற்ற உடல்கள்தான்...’’ அத்தனை இயல்பாகவும் நெகிழ்வாகவும் சொல்கிறார் டாக்டர் சாந்தகுமார்.
இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர் எனப் பெயரெடுத்தவர்.இதுமட்டுமல்ல. உலகில் முதன்முதலாக இறந்த உடல்களை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸை கண்டுபிடித்தவர் இவர். 1981ம் ஆண்டு சென்னையில் முறைப்படுத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் தொடங்கியவர் இவர். அதில், நகர்த்தக்கூடிய தூக்குப் படுக்கையை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

இப்படி ஒன்று இரண்டல்ல... ‘தனியார் ஆம்புலன்ஸில் முதன்முதலில் இவர்...’ எனப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸினுள் பல்வேறு வசதிகளைத் தொழில்நுட்பத்துடன் புகுத்தி ஆம்புலன்ஸ் சேவையில் ‘ஃபிளையிங் ஸ்குவாடு’ என்ற பெயரில் தனித்துவமாகப் பிரகாசிப்பவர். தவிர, இறந்த உடல்களை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸிலும் நிறைய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, நடிகர் சிவாஜி கணேசன், நடிகைகள் பத்மினி, மனோரமா, பாடகர் எஸ்பிபி... என விவிஐபிக்கள் பலருக்கு ஃப்ரீசர் பாக்ஸ் மற்றும் இறுதி யாத்திரை வண்டியை அனுப்பி கவனம் ஈர்த்தவர். 43 ஆண்டுகளாக இந்தச் சேவையில் இருக்கும் சாந்தகுமாரின் வளர்ச்சிக் கதையைக் கேட்டால் நமக்கு ஆச்சரியம் விரிகின்றது. 

‘‘சொந்த ஊர் சென்னை. எம்ஏ படிச்சிருக்கேன். அப்பா மோகன் டாக்ஸி டிரைவர். அம்மா சரோஜா. எங்க பூர்வீகம் குடியாத்தம். அப்பாவும் அம்மாவும் பிழைப்புக்காக சென்னை வந்திருக்காங்க. மொத்தம் பத்து குழந்தைகள்ல நான்தான் மூத்தவன். எனக்கு ஐந்து தம்பி, நாலு தங்கச்சி.

ஆரம்பத்துல அயனாவரத்துல குடியிருந்தோம். எனக்கு நினைவு தெரிஞ்சு வீட்டுல ரொம்பக் கஷ்டம். 1975ல் வாடகைக் கார் ஓட்டும் பணி சிறப்பா இல்ல.அப்பா காலையில் நாலு மணிக்குப் போனால்தான் டாக்ஸி உரிமையாளர்களிடம் இருந்து கார் சாவியைப் பெறமுடியும். தாமதமாகப் போனால் டாக்ஸி கிடைக்காது. அப்பா தினமும் பத்து ரூபாய் வீட்டுக்குக் கொடுப்பார். ஆனா, வீட்டுல 12 பேர் சாப்பிடணும். ரொம்ப சிரமம்.

என் பதினாறு வயசுலயே காலையில் மூன்றரை மணிக்கு எழும் பழக்கம் வந்திடுச்சு. டாக்ஸியைப் பெற அப்பாவை சைக்கிள்ல வேகமாய் கொண்டு போய் விட்டுட்டு வருவேன். அப்புறம், ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து பக்கத்துல உள்ள சோப் கம்பெனியில் வேலைக்குப் போவேன். இரவில் ஆட்டோ ஓட்டுவேன். பிறகு, அப்பாவுக்கு உதவியா போவேன். அப்படியே கார் ஓட்டக் கத்துக்கிட்டேன்.

குடும்ப வறுமையைப் போக்க அப்பா உயிரற்ற உடல்களை டாக்ஸியில் ஏற்றிச் செல்லும் வேலையைச் செய்யத் தொடங்கினார். அதற்கு இருமடங்கு பணம் கிடைக்கும்னு செய்தார். இப்ப மாதிரி அன்னைக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் வாசல்ல அப்பா டாக்ஸில காத்துக்கிடப்பார். சொந்த ஊருக்கு இறந்தவர்களை கொண்டு போகணும்னு அழும் குரல்களைக் கவனித்து, தன்னுடைய கார் டிக்கியில் உடலை வைத்து கொண்டு போவார். அப்பாவுடன் சேர்ந்து நானும் அந்த வேலையைச் செய்தேன்.

1978ல் ஹஸ்திமல் நகார் என்கிற மார்வாடியிடம் ஆட்டோவிற்கு கடன் வாங்கினேன். அதை வேகமாகத் திருப்பிச் செலுத்தினதால அவரிடம் அம்பாசிடர் கார் வேணும்னு கேட்டேன். அப்ப அவரிடம் கடன் கட்டமுடியாதவர்களின் கார்கள் நிறைய இருந்தன. அதுல இருந்து ஒரு வண்டியைத் தந்தார். அங்கிருந்து என் பயணமும் தொடங்குச்சு.

பிறகு மடாேடார் வண்டி வாங்கினேன். அதையே ஆம்புலன்ஸ் ஆகவும், உயிரற்ற உடல்களைக் கொண்டு போகிற வண்டியாகவும் பயன்படுத்தினேன். முதன்முதலில் தனியார் ஆம்புலன்ஸ் சேவையை ‘ஜெயதேவ்’ என்கிற பெயர்ல சென்னையில் தொடங்கினேன். பிறகு அதுவே ‘ஃபிளையிங் ஸ்குவாடு’னு மாறுச்சு. அப்புறம், வங்கிகள்ல கடன் பெற்று வெவ்வேறு வண்டிகள் வாங்கி ஆம்புலன்ஸ் சேவையை விரிவாக்கினேன். இந்த ஆம்புலன்ஸ்ல பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தினேன். 1983ல் Movable Stretcherஐ அறிமுகப்படுத்தினேன். இன்னைக்கு ஸ்டெச்சர்ல மட்டும் ஐந்து வகைகள் கொண்டு வந்திருக்கேன்.  

அதேமாதிரி ஆம்புலன்ஸிலும் ஏர் சஸ்பென்சர், ஏசி, மருத்துவம் சார்ந்த உதவியாளர்கள், கேமி ராக்கள்னு பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்திட்டேன். இப்ப ஒரு நோயாளியை மருத்துவமனையில் எந்த நிலையில் வீட்டுக்கு அனுப்புகிறார்களோ அதே நிலையில் அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போகும் அளவுக்கு நாங்க டெக்னாலஜியில் முன்னேறியிருக்கோம்...’’ என தம்ப்ஸ்அப் காட்டும் சாந்தகுமார், இந்தியா முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை செய்கிறார். இதுதவிர, பக்கத்து நாடுகளுக்கும் இவரின் ஆம்புலன்ஸ் சென்று வருகிறது.

‘‘இன்னைக்கு இந்தியாவின் மருத்துவ ஹப் சென்னை. அந்தளவுக்கு மருத்துவத்தில் சிறந்த மாநிலமா தமிழ்நாடு இருக்கு. அதனால, இந்தியாவின் பல பகுதிகள்ல இருந்து மருத்துவம் பார்க்க இங்க வருவாங்க. அவங்கள மறுபடியும் சொந்த ஊர்களுக்கு எங்க ஆம்புலன்ஸில் அழைச்சிட்டு போறோம். கொல்கத்தா, அசாம், திரிபுரா, நாகலாந்துனு பல மாநிலங்களுக்கு மாசம் மூணு முறையாவது ஷண்டிங் அடிக்கிறோம். நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு போன வாரம் ஒரு நோயாளியைக் கொண்டுபோய்விட்டோம்.

இதேமாதிரி பங்களாதேஷ், காஷ்மீர், லடாக் எல்லாம் சாதாரணமா போயிட்டு வருவோம். கொல்கத்தாவிற்கு 32 மணி நேரம்தான். அந்தளவுக்கு வசதியான ஆம்புலன்ஸ் வண்டிகள் எங்ககிட்ட இருக்கு. இதுக்காக ரெண்டு டிரைவர்கள், ஒரு மருத்துவ உதவியாளரை அனுப்புவோம். தவிர, உறவினர்கள் மூணு பேர் உடன் பயணிக்கலாம்.

ஐந்து படுக்கை கொண்ட, ஏசி வசதி செய்யப்பட்ட ஐசியு ஆம்புலன்ஸ் இருக்கு. இதனுள்ளேயே பயோ டாய்லெட், சின்ன ஃப்ரிட்ஜ், பேன்ட்ரி, நோயாளி ரிலாக்ஸா இருக்க டிவி, கேமரா மூலம் மருத்துவருடன் தொடர்பு கொண்டு பேசும் வசதினு பல தொழில்நுட்பங்கள் இருக்கும். அதனால, எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவங்களா பயணிக்க முடியும்.

இப்ப எங்ககிட்ட 36 ஆம்புலன்ஸ்கள் இருக்கு. இதுல, ஐசியு பிளஸ்னு ஒரு ஆம்புலன்ஸ் இந்தியாவிலேயே முதல்முறையா எங்களுக்கு தனி அரசாணையுடன் தமிழக அரசு அனுமதி தந்திருக்காங்க. அதை மேம்பட்ட உயிர்காக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைச்சிருக்கோம்...’’ என்கிறவரிடம் ஃப்ரீசர் பாக்ஸ் உருவாக்கம் பற்றி கேட்டோம். ‘‘முன்னாடி இறந்த உடல்களை வீட்டுல வைக்க ஐஸ்கட்டி பயன்படுத்துவாங்க. அது உருக உருக ஒருவர் துடைச்சிட்டே இருப்பார்.

வெளிநாடுகள்ல இருந்து உறவினர்கள் வரத் தாமதமானால் உடலை பராமரிக்கிறது கஷ்டம். தவிர, உடலை எடுத்துச் சென்றபிறகும் வீட்டில் உடல் நாற்றம் இருந்திட்டே இருக்கும். இதையெல்லாம் நான் நேரடியா பார்த்தேன். அப்புறம், உடல்களை வெளிமாநிலங்களுக்கும் ஏற்றிச் செல்வோம். அப்ப ஐஸ், உப்பு, மிளகு எல்லாம் கொட்டி கொண்டு போவோம். ஐஸ் கரைந்ததும் துர்நாற்றம் வீசும். என் கண்முன்னாடி உடல் அழுகிப் போவதைப் பார்க்கமுடியல.

இதுக்குத் ஒரு தீர்வை கண்டுபிடிக்கணும்ங்கிற எண்ணம் எனக்குள்ள வேரூன்றியது. கண்ணாடிகளை வாங்கி பாக்ஸ் தயாரிச்சேன். ஏசி மெஷினை அதுக்குள்ள இணைச்சு குளிரூட்டினேன். ஆனா, 24 மணிநேரம்தான் தாக்குப்பிடிச்சது. பிறகு, விடாமுயற்சியுடன் நவீன தொழில்நுட்பத்துல முதலிலிருந்த குறைபாடுகளைச் சரிசெய்து ஃப்ரீசர் பாக்ஸை உருவாக்கினேன்.  

நான் கண்டுபிடிப்பதற்கு முன்னாடி உலகில் இதுபோன்ற பாக்ஸ் வடிவமைக்கப்படல. காரணம், பரவலாக உலகநாடுகள்ல ஒருவர் இறந்திட்டால் அந்நாட்டு அரசே மார்ச்சுவரியில் வச்சு பராமரிப்பாங்க. ஆனா, இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற சில நாடுகளுக்குதான் இந்தப் பாக்ஸ் தேவைப்பட்டது. அங்கும் யாரும் கண்டுபிடிக்கல. அதனால, இதுக்கு காப்புரிமை பெற விண்ணப்பிச்சு 1999ல் வாங்கினேன். இதுக்காக நான் ராயல்டி யார்கிட்டயும் வாங்கல. ஏன்னா, எல்லோருக்கும் பயன்படணும்னு நினைச்சேன்.

பிறகு, 2001ல் சிவாஜி சாருக்கு இந்த ஃப்ரீசர் பாக்ஸ் வச்சப்பதான் நிறைய பேருக்கு தெரிய வந்தது. அதன்பிறகு நிறைய விவிஐபிக்களுக்குப் பண்ணினேன். 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கும், 2018ல் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் என் ஃப்ளையிங் ஸ்குவாடு வண்டியில் ஃப்ரீசர் பாக்ஸ் வச்சு ஓட்டினேன். அப்ப நிறைய பேர் அவங்க முகத்தை பார்க்க முடியலனு வருத்தமா சொன்னாங்க. அதனால, என் மகள்கள் ஐடியாவில் சுற்றிலும் கண்ணாடிகள் இருக்கிறமாதிரி இறுதி யாத்திரை வண்டியை நாங்களே உருவாக்கினோம்.

எஸ்பிபி சாருக்கு இந்த வண்டியைத்தான் பயன்படுத்தினோம். அவரை எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிகிறமாதிரி செய்தோம்...’’ என்றவர், கொரோனா காலத்தில் செய்த பணிகள் அளப்பரியது. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.  ‘‘கொரோனா நேரத்துல ஹெச்எஃப்என்சிங்கிற கருவி ஆம்புலன்ஸ்ல இருந்தா நல்லாயிருக்கும்னு டாக்டர்கள் சிலர் சொன்னாங்க. அதாவது High-flow nasal cannulaனு பெயர்.

90 லிட்டர் வரை ஆக்ஸிஜன் கொன்டது. இந்த வெண்டிலேட்டர் கருவியை வச்சு கொரோனா டைம்ல 1500 பேருக்கு மேல் காப்பாற்றினோம். இந்தக் கருவியின் விலை பத்து லட்சத்திற்கும் மேல். ஆனா, இப்ப கொரோனா பெரிசா இல்லாததால இந்தக் கருவிக்கு வேலையில்லாமல் போயிடுச்சு. ஆனா, இத்தனை உயிரைக் காப்பாத்தியிருக்கோம் என்கிற சந்தோஷம் எங்களுக்கு இருக்கு...’’ என்கிற சாந்தகுமார் தன் குடும்பம் பற்றி சில வார்த்தைகளைப் பகிர்ந்தார்.  

‘‘என் மனைவி பெயர் லலிதா. முன்னாடி இதை ஒரு மோசமான தொழிலாகப் பார்த்ததால யாரும் பொண்ணு தரமாட்டாங்க. இவங்க ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளரா இருந்தாங்க. என் தொழில் பற்றி தெரியும். அப்படி பழக்கமாகி திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க.

மூத்தவள் சந்தியா. எம்சிஏ படிச்சிருக்கா. சின்னவள் ஜோதி, பிஇ முடிச்சிருக்கா. ரெண்டு பேருமே லவ் மேரேஜ்தான். மருமகன்கள் சாய்ஹரிஷ், கௌதம். இப்ப மனைவி, மகள்கள், மருமகன்கள், நாங்க ஆறுபேரும் சேர்ந்து குடும்பமா பணிகள் செய்றோம்...’’ என்கிறவர் இப்போது தனியார் மார்ச்சுவரி தொடங்க அரசிடம் விண்ணப்பித்திருக்கிறார்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்