பெட் ஷாப் தெரியும்... இந்தியாவின் முதல் பெட்டிங் ஸோன் தெரியுமா?



‘‘கோஸ்ட் கழுத்தைச் சுத்தி ஏதும் இறுக்கிடாதே புரோ..?
இக்வானா கடிக்க மாட்டான்ல..?’’
பயந்துகொண்டே கேட்டார் மாடல் வீணா ஜெஸ்ஸி.

‘‘அவன் குழந்தை மாதிரி... நீங்க சும்மா கையை நீட்டிப் பிடிங்க... அப்படியே அழகா ரெண்டு பேரும் ஏறிக்குவாங்க...’’ வீணாவின் கையிலிருந்த இக்வானாவும், கோஸ்ட்டும் அப்பாவைத் தேடும் குழந்தைகள் போல் தேடிப் பிடித்து விஜய் கைக்குச் சென்றதும் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டன. இக்வானா - பேரோந்தி எனப்படும் பெரிய வகை பல்லி!
கோஸ்ட் - பால் மலைப்பாம்பு!

சென்னை ஈசிஆர் சாலையில் இருக்கும் ‘ஜங்கிளி’ பெட்டிங் ஸோன் மற்றும் பெட் ஷாப்பில்தான் இக்வானா மற்றும் கோஸ்ட் நம்மைக் கட்டிக் கொண்டு கொஞ்சக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, விதவிதமான பறவைகள் அடங்கிய பெரிய கண்ணாடி அறை, பூனைகள், குட்டி நாய்கள், ஆடு, புறாக்கள், முயல்... வெயிட், இன்னும் இருக்கு பாஸ்! பெரிய சிலந்தி, வகை வகையான பல அளவுகளில் ஆமைகள், அழகிய வண்ணங்களில் தவளைகள், மலைப்பாம்புகளில் பல வகைகள், ஓணான், பல்லிகளில் இன்னும் சில வெரைட்டிகள்... என எங்கும் விதவிதமான செல்லப்பிராணிகள்.

செல்லப்பிராணிகளா?! ஆம். செல்லப் பிராணிகள்தான். ஹாலிவுட் படங்களின் தாக்கம், தாங்கள் யாரென தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வாயிலாக வெளிப்படுத்துவது அல்லது வித்யாசமான செல்லப்பிராணிகளின் மேல் உள்ள ஆர்வம்... என இந்த டிரெண்ட் இப்போது அதிகரித்து வருகிறது. 90களின் ஹாலிவுட் படங்களில் சிறுவர்கள் வீட்டில் சிலந்தி, ஓணான், பல்லி, ஹேம்ஸ்டர் (வெள்ளெலி), தவளை... என வளர்ப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்த டிரெண்ட் இப்போது நம் இந்திய இளைஞர்கள், சிறுவர்களிடமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாய், பூனை, கிளி... வளர்க்கவே நாம் தயாராக வெகு நாட்களாகும். எனில் இம்மாதிரியான வழக்கத்துக்கு மாறான பிராணிகளை எப்படி செல்லக் குழந்தைகளாக வளர்ப்பது?

‘‘நீங்கள் சொன்னது சரி. பூனை, நாய் ரெண்டுமே கூட வளர்க்கறது அவ்வளவு சுலபம் இல்லை, குறைஞ்சது 13 முதல் 15 வருஷங்கள் கமிட்மெண்ட்.
அதுக்கு தயாரா இருக்கீங்களா? அப்படின்னா வாங்கிக்கோங்க, இல்லை இன்னமும் தயக்கம் இருந்தா இங்கே இருக்கும் பூனைகள், நாய்கள் கூட கொஞ்ச நேரம் செலவிட்டு அப்பறம் முடிவு செய்யுங்க. இதுதான் நாங்க இங்கே வருகிற கஸ்டமர்களுக்கு சொல்லும் முதல் அட்வைஸ்...’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்கள் விஜய் மற்றும் ராதிகா தம்பதியினர்.

‘‘எங்களுக்கு சொந்த ஊர் கேரளா. ஆனா, வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். எங்க ரெண்டு பேருக்கும் செல்லப் பிராணிகள்னா அவ்வளவு இஷ்டம். சொல்லப் போனா நாங்க கல்லூரி நாட்கள்ல காதலர்களா பார்க், பீச் , தியேட்டர் போனதை விட பெட் ஷாப், அனிமல் கேம்ப்னு சுத்தினதுதான் அதிகம்!ஐடில வேலை செய்திட்டு இருந்தோம். ரெண்டு பேருக்கும் இந்த விலங்குகள் மேலே அதீத ஆர்வம். நிறைய செல்லப் பிராணிகளை வளர்க்க நினைச்சோம். அதுக்காகவே ஐடி வேலையை விட்டுட்டு ‘டேம்டு பெட் ஷாப்’ என்கிற செல்லப் பிராணிகள் விற்பனை ஷாப் ஆரம்பிச்சோம்.

அப்பதான் இந்த செல்லப் பிராணிகள் வளர்ப்புல நிறைய பிரச்னைகளை மக்கள் சந்திக்கிறாங்களோ இல்லையோ அந்த பிராணிகள் சந்திப்பது தெரிஞ்சுது. ஏதோ ஒரு ஆசைல ஒரு பூனையோ, நாயோ வாங்கிட்டுப் போயிடுவாங்க. ஆனா, ஆறு மாசம் கழிச்சுதான் அதுல இருக்கற கமிட்மெண்ட், மெனக்கெடல் எல்லாம் தெரியும்.

செல்லப் பிராணிகளைப் பொறுத்தவரை அந்த ஆறு மாசத்திலே வாங்கிட்டு போன உரிமையாளர்களை பெற்றோர்களா பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, கஸ்டமர்களுக்கு அவங்க சுமையா மாறியிருப்பாங்க. நம்ம வாழ்க்கை இனிமே இவங்க கூடதான்னு செல்லப் பிராணிகள் செட்டாகி, அன்பைக் காட்டுற நேரத்திலே இவங்க அதைத் திருப்பிக் கொடுக்க நினைப்பாங்க.

2வது ஓனர் அப்படின்னு கை மாத்தினாலே வாழ்க்கை முழுக்க அந்த செல்லப் பிராணி ஒருவித ஏக்கமும், மன உளைச்சலுமா இவங்க எத்தனை நாளைக்குன்னுதான் வாழும்.
இதையெல்லாம் செல்லப் பிராணிகளை வாங்குறதுக்கு முன்பே புரிய வைக்கிறதுதான் ‘ஜங்கிளி’யின் வேலை...’’ விஜய் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாடலான வீணா கைகளை நீட்ட வண்ணமயமான பறவைகள் அவர் கைகள், தலை முடி என சுற்றி அமர்ந்துகொண்டு நம்மையும் சேர்த்து சூழ்ந்து கொண்டிருந்தன.

‘‘இவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நளினமா டான்ஸ் ஆடும் அழகிகள்!’’ ராதிகா சொல்லிக்கொண்டிருக்கும்போதே தலையைச் சுழற்றி அசைத்து நம் கை அசைவுகளுக்கு தலையைத் திருப்பின இரண்டு பெரிய சைஸ் மக்காவ் கிளிகள். அப்படியே கைகளில் ஏறி மெல்ல அமர்ந்துகொண்டு முடி, நம் மொபைல் போன்கள், உடையில் இருக்கும் பட்டன்கள்... என தன் அழகிய அலகுகளால் செல்லமாக தொட்டுப் பார்த்தன படா சைஸ் மஞ்சள், சிவப்பு நிற மக்காவ்ஸ். முயல், அன்னப்பறவை, ஆடு... என கையில் இரையுடன் செட்டிலானார் மாடலான வீணா.  

‘‘பூனையோ, நாயோ, மலைப்பாம்போ... எதை வளர்க்கணும்னாலும் போதிய கமிட்மெண்ட் கொடுக்கணும். குறிப்பா வீட்ல ஒருத்தருக்கு விலங்குகள் அலர்ஜினாலும் செல்லப்பிராணிகள் தத்தெடுக்கறது, வாங்கறதுன்னு ரிஸ்க் எடுக்காதிங்க...’’ அழுத்தத்துடன் பேச ஆரம்பித்தார் ராதிகா. ‘‘சின்னதா இருக்கும் போது ‘ச்சோ... கியூட்’னு வாங்கிட்டு போயிடுறாங்க.

ஆனா, பராமரிப்பு, வாக்கிங், கிளீனிங், பழக்கவழக்கங்கள் எல்லாமே அவங்களுக்கு ஒரு கட்டத்திலே பிரச்னையா மாறிடுது. குழந்தைகளுக்குக் கூட நீங்க திட்டினாதான் புரியும். ஆனா, உங்க செய்கையும், காட்டுற ரியாக்‌ஷன்ஸையுமே வெச்சு அனிமல்ஸ் உங்களுக்கு அவங்களைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு கண்டுபிடிச்சிடுவாங்க.

குழந்தைங்க சிங்கம் வளர்க்கக் கூட ஆசைப்பட்டு, அடம் பிடிச்சு வாங்கி வீட்ல வெச்சிட்டு ஸ்கூலுக்குப் போயிடுவாங்க. ஆனா, பராமரிக்கிறது நம்ம வேலை
தானே! குழந்தைகள் கூட சேர்ந்து நீங்களும் தயாரா இருந்தீங்கனா செல்லப்பிராணியை வளர்க்க முடிவு செய்யுங்க.

இங்க வந்து எந்த செல்லப் பிராணியை வளர்க்க விரும்பறீங்களோ அதனுடன் நேரம் செலவிடுங்க; சாப்பாடு கொடுங்க. அவங்க என்னல்லாம் செய்யறாங்க, அதையெல்லாம் நீங்க ரசிக்கிறீங்களா இல்லை இடைஞ்சலா நினைக்கிறீங்களான்னு உங்களை நீங்களே சோதனை செய்துக்கோங்க.

இதையெல்லாம் செய்யத்தான் இப்படி ஒன்றைத் தொடங்கியிருக்கோம்! இந்தியாவிலேயே முதல் முறை என்கிறதால் இதுக்கு சரியான ரெஜிஸ்ட்ரேஷன், அனிமல் வெல்ஃபேர் ஆய்வுகள், அவ்வப்போது விலங்குகள் நல ஆர்வலர்களின் விசிட்னு அத்தனையும் சந்திக்கிறோம். இந்த முயற்சியை அவங்களே பாராட்டிட்டு இருக்காங்க...’’ என்று ராதிகா முடித்ததும், ‘‘இவனை எப்பவும் உயரமா தூக்கி வெச்சுக்கக் கூடாது. அவன் பயந்து மேலே இருந்து குதிச்சிட்டா அப்பறம் நம்மை ஆபத்தானவங்களா பார்த்து பயந்து ஓடிடுவான்...’’ என விஜய் ஹேம்ஸ்டர் பற்றி கைட் செய்தபடியே தொடர்ந்தார்.

‘‘பொதுவாகவே பெட் ஷாப்களில், எங்கே வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுவாங்களோன்னு நினைச்சு முடிஞ்ச வரை கஸ்டமர்களை வாங்க வைக்கத்தான் முயற்சி செய்வாங்க. ஆனா, நாங்க இதுக்கு எதிரானவங்க. கஸ்டமர்கள் கொஞ்சம் தயங்கினாலும் வாங்க விடாம செய்யத்தான் முயற்சிப்போம்!

அதிலும் இந்த கேர்ள்ஃபிரண்ட், பாய்ஃபிரண்டுக்கு கிஃப்ட், பர்த்டே சர்ப்ரைஸ்னு செல்லப்பிராணிகளைத் தேர்வு செய்தா கறாரா நோ சொல்லிடுவோம். அவங்களையும் கூட்டிட்டு வாங்க, அவங்களுக்கும் இதிலே விருப்பம் இருக்கான்னு கேட்டு செய்யுங்கன்னுதான் சொல்வோம்...’’ புன்னகையுடன் விஜய் சொல்ல, ‘‘அங்கே பெர்ஷியன் பூனைகள் இருக்கு பார்க்கலாமா?!’’ என வீணா அழைத்தார்.சென்றோம்... பார்த்தோம்... கொஞ்சினோம்... விடை
பெற்றோம்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்