அரண்மனை குடும்பம் -36



மலைச்சரிவில் நடப்பதென்பதே மிகக்கடினமான நிலையில், ஓட முற்பட்டதில் ஓரிடத்தில் மண் சரிந்து பெரும் பள்ளத்தில் சாமிக்கண்ணு விழ நேர்ந்தது. தலை குப்புற விழுந்ததில் உடம்பெல்லாம் காயம். குறிப்பாக கால்பகுதியை அசைக்கக் கூட முடியவில்லை. வாய்விட்டே அலறத் தொடங்கினார் சாமிக்கண்ணு.ஆனால், “அம்மாாா...” என்கிற அலறல் அந்த பள்ளத்துக்குள்ளேயே முட்டி மோதி அடங்கிப் போனது. எழுந்து அமர முயன்றபோது பாக்கெட்டில் இருந்து செல்போன் நழுவி விழுந்து திரை பளிச்சிட்டது.

அதைப்பார்க்கவும் வேகமாய் எழுந்து கான்ஸ்டபிள் மாணிக்கத்தை அழைக்கத் தொடங்கினார்.
“மாணிக்கம்...”“சார் எங்க இருக்கீங்க... அவங்கள பிடிச்சிட்டீங்களா?” “அடப்போய்யா... நான் இப்ப ஒரு பள்ளத்துல கிடக்கேன். வேகமா வா... கிட்டத்தட்ட 20 அடி பள்ளம். கால்ல எலும்பு வேற முறிஞ்சிடிச்சாட்டம் இருக்கு. வலி உயிர் போகுது...”“நான்தான் சொன்னேனே சார்... வேண்டாம்னு...”“என்னய்யா நீ... அக்யூஸ்ட் ஓட்றான். வேடிக்கை பாத்துட்டு நிக்க சொல்றியா?”
“அது இல்ல சார்... அவன் உசுரை வெறுத்து ஓட்றவன்.

நாம அப்படியா சார்..?”“பேசினது போதும் மாணிக்கம்... சீக்கிரமா வா...”“சார்... செல்லுல சினிமாபாட்டு இருந்தா போட்டு விடுங்க... நான் தேடி வரையில இடத்தை கண்டுபிடிக்க உதவியா இருக்கும்...” என்ற மாணிக்கம் ஜீப்பில் இருந்து தண்ணீர் பாட்டிலுடன் சாமிக்கண்ணு ஓடிய பக்கமாய் ஜாக்ரதையாக அவரைத் தேடிக் கொண்டே நடக்கத் தொடங்க, சாமிக்கண்ணுவும் அவர் எப்போதும் மிக விரும்பிக் கேட்கும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ என்கிற ரஜினி பாட்டை ஒலிக்கச் செய்ய அதுவே மாணிக்கத்துக்கும் அவர் கிடக்கும் பள்ளத்தை காட்டிக் கொடுத்து விட்டது.

மாரப்ப வாத்தியுடன் ஜல்லியும் போதிமுத்துவும் வெகுதூரம் ஓடி ஓரிடத்தில் இனி முடியாது என்பது போல  அமர்ந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தொடங்கினர்.
ஒரு நெடிய ஆசுவாசத்துக்குப் பிறகு ஜல்லி வாய் திறந்தான்.“என்ன ஆசானே, ஆரம்பமே இப்படி ஓட்டமும் நடையுமா இருக்கு..?”‘‘பயந்தாலே இப்படித்தான்... நின்னு அவனை என்னான்னு கேட்ருக்கணும். ஆனா, நீங்க கேக்க உடாம ஓடத் தொடங்கிட்டீங்க...”“என்ன ஆசானே நீங்க... அவன் போலீசு! நான் வேற அவனை சொக்குப்பொடியால கட்டிவேற போட்டவன். நாம சிக்குனா மாவுக்கட்டு போடாம உடமாட்டான். கேட்டா கக்கூஸ்ல வழுக்கி விழுந்துட்டதா சொல்லிருவான். இப்ப அதான் போலீசு வழக்கம்.  அதான் ஓட்னோம்...”

“எலேய்... நீ தனியா இருக்கும்போது ஓடியிருந்தா சரிடா. நான் இருக்கும் போது என்னாடா பயம்..? இவனை எல்லாம் ஊறல்லயே கட்டிப்  போட்ருவேன். அப்புறம் எப்ப பாரு உடம்புல புழு நெளியற மாதிரியே இருக்குன்னு சொல்லிக் கிட்டே இருப்பான்...”“அப்படி எல்லாம்கூட பண்ண முடியுமா ஆசானே..?”“பீதாம்பர ஐயர் 1008 வித்தையை ஓலைல எழுதி, அப்பவே அதை புத்தகமாவே போட்ருக்காங்க. அந்த 1008ல் ஒண்ணுதான் ஊறல்..! இப்ப அவன் இங்க வந்தா கூட என்கிட்ட மாட்டிடுவான்...”மாரப்பவாத்தி உறுதிபட சொல்ல, போதிமுத்துவுக்குள் அது யார் பீதாம்பர ஐயர் என்கிற கேள்வி எழும்பி கேட்கவும் செய்தான்.

“ஆசானே... அது யாரு பீதாம்பர ஐயர்..?”
“எங்க மோடிக்கும், சித்துக்கும் அவருதான் குரு...”
“இப்படி எல்லாம் கூட வித்தைங்க பண்ணுவாங்களா?”
“பண்ணாமதான் அவர்பேர்ல புத்தகம் இருக்குதா?”
“அப்ப அதைப் படிச்சுதான் நீங்க வித்தைய கத்துக்கிட்டீங்களா?”

“அதை படிச்சால்லாம் கத்துக்க முடியாது. ஏன்னா வித்தைக்கு தேவைப்பட்ற பொருள்ளதான் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் ஒருத்தன் அவ்வளவு சுலபத்துல கண்டு பிடிக்க முடியாது. குறைஞ்சது நாப்பது அம்பது வருசமாவது இந்த வித்தைக்காக உசுரை பணயம் வெச்சு உழைக்கணும்.

இதுல இறங்க ஒரு விதி இருக்கு. எல்லாரும் எப்படி சனாதிபதியாக முடியாதோ அப்படிதான் இதுவும்...”“ஆசானே பொழுது கருத்துடிச்சி பாருங்க... நடந்துகிட்டே போசுவோம்...”  ஜல்லி எழுந்து சரிந்த அந்தியைப் பார்த்தான். யாரோ தாம்பூலம் போட்டு காறி உமிழ்ந்தாற் போல் சிகப்பும், மஞ்சளும் கலந்து கட்டி தெரிந்தது மேற்கு அடிவானம்.ஓரளவு ஆசுவாசமும் அடங்கியிருந்தது. கோலை ஊன்றிக் கொண்டு மூவரும் இறங்கத் தொடங்கினர்.

எப்படியோ பள்ளத்தில் இருந்து மேலேறி தட்டுத்தடுமாறி நடந்து ஜீப்பை நெருங்கிய சாமிக்கண்ணுவுக்கு வலி உயிரைக் கிள்ளியது. முகத்து சுருக்கங்களிலும் முனகல்களிலும் அது நன்கு தெரிந்தது.

“சார்... நேரா டாக்டர்கிட்ட போயிடட்டுமா சார்?”“ஆமா மாணிக்கம்... ஆர்த்தோ டாக்டர் கிட்ட  போ... வேகமா போ... கால் பார் புசுபுசுன்னு வீங்கிடிச்சு...” என்று பூரி போல புடைத்த விரல் மேட்டை காட்டினார்.“எனக்கென்னவோ நீங்க ஒரு மாசமாச்சும் மெடிக்கல் லீவு போடும்படி இருக்கும்னு தோணுது. அந்த பாம்பாட்டி பேர்ல எஃப்ஐஆரும் கிடையாது... கம்ப்ளைண்டும் கிடையாது. இன்ஸ்பெக்டர் கேட்டா என்ன சார் சொல்வீங்க..?”ஜீப்பைக் கிளப்பியபடியே கேட்டார் மாணிக்கம்.

“நீ சொல்றதும் வாஸ்தவம்தான்... கள்ளச் சாராய பார்ட்டிங்கள பாத்துட்டு துரத்தும்போது உழுந்துட்டேன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்...”
முனகல்களோடு சாமிக்கண்ணு சொல்ல ஜீப்பிடம் சீற்றம்!வழுக்குப்பாறை பொங்கல் மந்தை பகுதிக்குள் மூவரும் நுழைந்தபோது மணி 7.40. முனியப்பன் சன்னதி முன் ஒரு ட்யூப்லைட் எரிந்தபடி இருக்க அதன் வெளிச்சத்தில் பொட்டுப்பூச்சிகள் பறந்தபடியே இருந்தன. மற்றபடி ஆளரவமே இல்லை. சில்வண்டுகளின் ரீங்காரம் காதைத் திருகியதில் தலைப்பாகையைத் தழைத்து காதைச் சேர்த்து மூடிக் கட்டிக்கொண்டு ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார் மாரப்ப வாத்தி.

“ஆசானே... எப்படியோ டயத்துக்கு வந்துட்டோம்... பார்ட்டி வந்த பொறவு நீங்கதான் பேசணும். நீங்க இருக்கைல நான் பேசுனால்லாம் நல்லாவும் இருக்காதுதானே ஆசானே?”
ஜல்லி சிஷ்ய பாவனையோடு சொன்னான். “உட்றா... முதல்ல அவன் வரட்டும். குறி யாருக்கு... எதுக்குன்னுல்லாம் தெரியட்டும். பொறவு பேசுவோம்...” எனும்போதே தொலைவில் டார்ச் லைட்டின் வட்டமான வெளிச்சத்தோடு இரண்டு பேர் வரும் அரவம் கேட்டது.

“வரான் ஆசானே... வரான்...”“வரட்டும்... இந்தா இந்த மையை புருவத்துல லேசா ரெண்டு பேரும் பூசிக்குங்க...”மாரப்ப வாத்தி ஒரு மை டப்பியை நீட்ட பணிவாக வாங்கி தானும் பூசிக்கொண்டு போதிமுத்துவுக்கும் பூசிவிட்டவனாய், “இது என்னா மை ஆசானே?” என்று அதை திருப்பித்தந்தபடியே கேட்டான் ஜல்லி.

“கலங்கிடா... கலங்கி...”“இது எதுக்கு ஆசானே?”
“இதை பூசிக்கிட்டா உன் முகத்தை அவனால பெருசா ஞாபகம் வெச்சுக்க முடியாது. ஒரு தீஞ்ச வாசனை அடிக்குதா?”
“ஆமா ஆசானே...”“அப்ப அது வேலைய தொடங்கிடிச்சின்னு அர்த்தம். வேடிக்கைய பாரு...”மாரப்ப வாத்தி சொல்லி முடிக்க, மந்தைக்குள் குலசேகர ராஜாவும், அவரின் கைத்தடியான மூர்த்தியும் நுழைந்து நடந்துவர, பீடிக்கான சிகார் லைட்டை பிடித்து தங்கள் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தான் ஜல்லி.குலசேகர ராஜாவும், மூர்த்தியும் அங்கே போய் சரியாக நின்றனர்.

குலசேகர ராஜா மஃப்ளரால் தலையை  மூடி முகம் மட்டும் தெரிய நின்றார். மூர்த்தி பேண்ட் சட்டை என்கிற சகஜ உடையில் இருக்க, சட்டையில் அரண்மனை குடும்பத்தின் சின்னமான கிரீடம் பொறிக்கப்பட்டு அதை அணிந்தவர்கள் அரண்மனை குடும்ப ஊழியர்கள் என்று சொல்லாமல் சொல்லிற்று.

இருவர் உருவமும் சிகார் லைட் ஒளியில் ஓரளவு தெரிய ஜல்லி இருவரையும் வரவேற்கத் தொடங்கினான்.“வணக்கம் சாமிங்களா... சொன்ன மாதிரியே வந்துட்டீங்க... சந்தோசம்... கணப்பு போட்டு வட்டமா குந்தி பேசலாங்களா?”அவன் கேட்டது குலசேகர ராஜாவுக்கு புரியவில்லை. மூர்த்தியைப் பார்த்தார்.“நீ என்னய்யா சொல்றே... ஆமா நீதான் போதிமுத்தா?”“என் பேரு ஜல்லிங்க... தா இவன்தான் போதிமுத்து. இவரு எங்க குருநாதர்... குரு பேரை நாங்க சொல்ல மாட்டோம்...” “நீதான் போன்ல பேசினவனா?”“ஆமாங்கய்யா...” என்றான் போதிமுத்து.

“நீ பாம்பாட்டிதானே... ஆனா, சித்து வேலைல்லாமும் தெரிஞ்சி வெச்சிருக்க போல இருக்கே?”
குலசேகரர் சகஜமாக பேச்சைத் தொடங்கிட ஜல்லி மளமளவென்று அருகில் முனியப்பனுக்கு பொங்கல் வைத்த நிலையில் எரிந்து அடங்கிப் போய் கிடக்கும் விறகுத் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்து அங்கே தீயிட்டு கணப்பை உருவாக்கினான்.வெளிச்சம் வரவும் எல்லோர் முகமும் எல்லோருக்கும் தெரிந்தது. தீயை பெரிதாக்கியபடியே ஜல்லி, குலசேகர ராஜா கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினான்.

“ஐயா... போதி பிடாரனுங்க... அவனுக்கு இந்த சித்து, மோடி எல்லாம் தெரியாது. எனக்கே கொஞ்சம்தான் தெரியும். எங்க குரு... தா இவருதாங்க அதுல வாத்யாரு...”
“அந்த கொஞ்ச வித்தைலயே போலீசு கிட்ட இருந்து தப்பிச்சிருக்கீங்களே... கில்லாடிய்யா...”“அப்ப தப்பிட்டோம்... ஆனா, இப்ப கொஞ்சம் முந்தி கூட வர்ற வழில ஏற்காடு போலீசு பாத்துடுச்சி... துரத்திக்கிட்டும் வந்தாங்க. தப்பிப் பொழச்சி வந்துருக்கோம்...”“எலேய்... நடந்ததை விடுடா... நடக்கப் போறத பேசுடா. வந்த விசயத்த சொல்லு...’’ மாரப்ப வாத்தி இடை புகுந்து அதட்டியதோடு ஒரு பீடியைப் பற்ற வைத்தார்.

குலசேகர ராஜாவை நேருக்கு நேர் பார்க்காத ஒரு அலட்சியத்தை அவரும் உணர்ந்தவராக, “இப்படி எல்லாம் நான் என் வாழ்க்கைல எங்கேயும் எவனையும் தேடி வந்ததில்ல... என்னைத் தேடித்தான் எல்லாரும் வந்திருக்காங்க...” என்று சற்று கித்தாய்த்தார். ஏனோ சிரிப்பு வந்தது மாரப்ப வாத்திக்கு. “ஐயா அதான் வந்துட்டீங்கல்ல... வந்த விசயத்த சொல்லுங்க...”  என்று நிமிண்டினான் ஜல்லி.“சொல்றேன்... அதுக்கு முந்தி உங்க வித்தைய கொஞ்சம் நாங்க பாக்கணுமே?” மூர்த்தி ஆரம்பித்தான்.

“என்னய்யா சொல்றீங்க... நாங்க ஒரிஜினலா டம்மி பீஸான்னு டெஸ்ட்டு பண்ணப் போறீங்களா?”

“அப்படி இல்ல... எங்க பாசுக்கு உங்க வித்தைங்க பத்தி பெருசா தெரியாது. அதான்...” மூர்த்தி தன்மையாகச் சொல்ல, ஜல்லி மாரப்ப வாத்தியைப்பார்த்தான்.வாத்தி புகை விட்டபடியே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த நிலையில், பீடியை எறிந்து விட்டு தலைப்பாகையை சற்று அசைத்து தளர்த்தி விட்டுக் கொண்டார்.

பின் எழுந்து மூட்டம் போட்ட நெருப்பை ஒரு சுற்று சுற்றியவர் உடம்பை முறுக்கி சோம்பல் முறித்தார்.‘உஸ்ஸ்...’ என்று பெரிதாக காற்றை ஊதி என்னென்னவோ செய்தவர், “எலே சங்கிலி... பேச்சி மடை மோகினி... காக்காயா... கர்ணபூதா...” என்று உக்ரமாய் முணுமுணுத்தார்.பின், “எலே காசுக்காரா... கேட்டுக்கடா... இப்ப உன் சட்டப்பாக்கட்டுல பத்து ரெண்டாயிர ரூவா நோட்டு இருக்குது. அம்புட்டும் சலவை நோட்டு... அதோட நம்பர சொல்றேன் பாத்துக்க... உம்... நோட்ட கைல எடு...” என்றார் அதட்டல் குரலில்.

அரண்டுபோன குலசேகர ராஜா அதேபோல தன்பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கணப்பருகே சென்று எண்களைப் பார்க்கத் தயாரானார். வாத்தியும் எண்களை கடகடவென்று சொல்லத் தொடங்கினார். இது எந்த வகை வித்தை என்றும் தெரியாத, ஆனால், தெரிந்த வகையில் ஒரு பிரமிப்பு அவரிடம்.“என்ன... எல்லாம் சரியா இருக்கா?”“இருக்க்க்கு!”

“கூட்டவிட்டு கிளம்பைல உன் பொஞ்சாதி மாதுளம்பழ ஜூஸ் கொடுத்தாளா?”
“அ... ஆமாம்...”“சூதகம் பிடிச்ச உன் மவ கருப்பு உடை உடுத்தியிருந்தாளா?”
“ஆமாம்... ஆமாம்...”“இன்னும் சொல்லவா... இல்ல இது போதுமா?”

என்று மாரப்ப வாத்தி உடம்பை முறுக்கியபடி ஸ்பிரிங்போல குதிக்கத் தொடங்கினார். குலசேகரரிடம் ஸ்தம்பிப்பு!

(தொடரும்)

மணிமொழியனார் பெயர் திரையில் தெரியவுமே ஒரு உற்சாகம் அசோகமித்திரனிடம்...“வணக்கம்யா... சரியான நேரத்துலதான் கூப்பிட்டிருக்கீங்க...” என்று அவரோடு பேசத் தொடங்கினார்.“என்ன அசோகமித்திரன்... உங்க ஆராய்ச்சிக்கு தோதா எதாவது நடந்ததா... இல்லை இன்னும் குழப்பத்துலயேதான் இருக்கீங்களா? என்னாலயும் ஆர்வத்தை அடக்க முடியல, அதான் போன் செய்தேன்...”

“ஐயா... எதுக்காக இந்த நாகேந்திர நல்லூர் வந்தேனோ அந்த விஷயத்துல ஏமாற்றம்தான். ஆனா, அதுக்கு நிகரான ஒரு சம்பவத்தை மிகச்சரியா கிரகண நேரத்துல கண்டேன்...” என்ற அசோகமித்திரன் கண்மாய் கரை மரத்தடியில் ஒரு காவி உடுத்திய பிராமணக் கிழவி வந்து செய்த பூைஜயை, தான் பார்த்த விதத்தில் அப்படியே சொல்லி முடித்தார்.
“நிச்சயமா இது அமானுஷ்யமான சம்பவம்தான் அசோகமித்திரன். கேரளாவுல நாகரகாவுங்கற பேர்ல நாகர் சிலைகளுக்கு கோயில்கள் உண்டு. அங்க நாயர் இனப் பெண்கள் இந்த மாதிரி பூஜை செய்வாங்க. அப்போ இதே போல நாகம் வந்து அந்த பூஜையை ஏத்துக்குமாம்.

கடுமையா விரதம் இருந்து இந்த பூஜையை செய்வாங்க. நாகம் வரலைன்னா விரதத்துல ஏதோ தவறுன்னு எடுத்துப்பாங்களாம். நீங்க சொல்றத பார்க்கும்போது எனக்கு இந்த கேரள பூஜைதான் ஞாபகத்துக்கு வருது...”“எப்படிய்யா... இதை எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க?”“வாசிப்புங்கறது என் வரைல சுவாசிப்பு மாதிரியே நிக்காத ஒரு விஷயம். இதுவரை ஒரு பத்தாயிரம் புத்தகமாவது படிச்சிருப்பேன்! அதுல பிடிச்சது, பிடிக்காததுன்னு எல்லாம் உண்டு. சில நேரங்கள்ல கட்டுரைகளுக்காக தேடிப்பிடிச்சு படிக்கறதும் உண்டு. அப்படி படிக்கப்போய் தெரிய வந்ததைத்தான் நான் இப்ப சொன்னேன்...”

“ஐயா... இங்க நாடிஜோதிடர் சொன்னது போலவே கோயில் குருக்களும் 10.30க்கெல்லாம் இறந்துட்டாரு. அதை வெச்சு பாக்கும் போது அவர் என் முகத்தை பார்த்து சொன்ன பிரசன்ன ஜோதிடமும் பலிச்சிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்குய்யா...”“பயப்படாதீங்க... நான் முன்பே சொன்னது போல திறந்த மனசோட இருங்க. வெற்றிகரமான மிகச்சிறந்த வாழ்க்கைங்கறது எதுன்னா அம்பானி, அதானி மாதிரி பணக்காரராவோ, இல்லை ஜனாதிபதியா, பிரதமரா அதிகாரத்துல இருக்கறதெல்லாம் கிடையவே கிடையாது!

துளி கூட எந்த விஷயத்துலயும் பயமில்லாமலும், குழப்பமில்லாமல் தெளிவோடயும் இருக்கறதுதான் மிகச்சிறந்த மனித வாழ்வு. பிறகு எந்த நோயும் இல்லாம இருப்பது... இது புத்தருக்கு சாத்தியப்பட்டது. அதுக்குப் பிறகு மகாகவி பாரதிக்கும் சாத்தியப்பட்டதா நான் நினைக்கறேன். இன்னும் பலர் இருக்கலாம்.

எனக்கு இப்ப சட்டுன்னு ஞாபகம் வரலை...”
“உங்க பேச்சு நம்பிக்கை தருதுய்யா... அதே சமயம் நடக்கற சம்பவங்கள், அதோட நிதர்சனங்கள், இதுதான் நிஜம்கற ஒரு தெளிவை தரமாட்டேங்குதுய்யா...”“பல நிதர்சனமான உண்மைகள் பாலுக்குள்ள இருக்கற நெய் மாதிரி அசோகமித்திரன். பாலைக் காச்சி, குளிரவெச்சி உறையச் செய்து தயிராக்கி, அப்புறம் அதை மோராக்கி, பிறகு அதை கடைஞ்சு வெண்ணெயை எடுத்து அதை உருக்கினாதான் நெய் கண்ணுக்கு தெரிய வரும்.

நடுவுல எத்தனை பிராசஸ் இருக்கு பார்த்தீங்களா? அப்படித்தான் நம் வாழ்க்கை சார்ந்த பல விஷயங்களும். நீங்க இப்ப சரியான திசைலதான் போய்க்கிட்டிருக்கீங்க... பயப்படாம போய்க்கிட்டே இருங்க. அந்த பாட்டியம்மா செய்த பூஜை நிச்சயம் வழக்கமான பூஜை கிடையாது. அப்ப அதுக்கு பின்னால ஒரு விஷயம் இருக்கு. அத தெரிஞ்சிக்க பாருங்க...”
“அதுதான் இப்ப என் அடுத்த டார்கெட். ஆனா, நாளைக்கே ஊர் திரும்பறதுதான் முன்ன போட்ட பிளான்...”“அப்ப அதன்படியே நீங்க நடங்க...”“என்னய்யா இப்படியும் சொல்றீங்க... இங்க இருந்தாதானே மற்ற விஷயங்கள் எல்லாம் நடக்குதா இல்லையாங்கறது தெரியும்?”

“இதுவரை உங்களைச் சுற்றி நடந்த எந்த விஷயம் அசோகமித்திரன் நீங்க நினைச்சமாதிரி, இல்ல, எதி்ர்பார்த்தமாதிரி நடந்தது... இதுவும் அதே மாதிரி நடக்கறதுக்கு..?”
“அப்படின்னா..?”“நீங்க எப்பவும் போல உங்க எண்ணப்படியே நடங்க. அந்த ஊர்ல பல ஆயிரம் பேர் இருந்தும், ஒரு அபூர்வ கனவு உங்களுக்கு மட்டும்தான் வந்தது... இறந்துட்டதா ஊர் நினைக்கற ஒருத்தரை நேர்ல பாக்கற அனுபவத்தோட, ஒரு கிரகண பூஜையைப் பாக்கற சந்தர்ப்பமும் உங்களுக்குத்தான் கிடைச்சிருக்கு.

இதுக்கெல்லாம் பின்னால நிச்சயமா தற்செயல்னு ஒண்ணு இருக்கற மாதிரி தெரியல... இதெல்லாமே பிரத்யேக அமானுஷ்ய அனுபவங்கள்தான். இந்த அனுபவங்கள் உங்களை அவ்வளவு சுலபத்துல அந்த ஊரைவிட்டு வெளியேற அனுமதிக்காதுன்னு நான் நினைக்கறேன்...”மணிமொழியனார் சரியான கணிப்புகளுடன் பேசிக் கொண்டிருந்த அவ்வேளை ஈர உடையோடு கனபாடிகள் பின் கொல்லைப்புரம் வழியாக வந்தபடி இருந்தார்.

துல்லியமான அதே வேளை வாயில்புரம் ஒரு குதிரை வண்டி.சில மணி நேரம் முன்பாக கண்மாய் கரை மேல் காவிப்புடவை உடுத்திய கிழவியோடு வந்த அதே குதிரை வண்டி.  
வண்டியில் இருந்து பட்டுப் பாவாடையும், தாவணியுமாய் தலையில் நெற்றிச் சுட்டி, கழுத்தில் தங்க நகைகளுடன் இடுப்பில் ஒரு வெள்ளிக் குடத்துடன் ஒரு பெண் இறங்கி வீட்டு வாசலில் நின்று கால்களால் தரையை மிதித்து சப்தம் எழுப்பினாள். அவள் கால்களில் சதங்கை கட்டியிருந்ததால் அதன் சப்தம் நன்றாகக் கேட்டது! அவள் தொடர்ந்து சப்தம் எழுப்பினாள்.

- இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி