போஸ்டர்லயே கதை இருக்கு... கண்டுபிடிங்க!
‘காக்கா முட்டை’ படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது வென்ற சூட்டோடு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டில் வைக்குமளவுக்கு ‘கரகாட்டக்காரன்’ சொப்பனசுந்தரி மீது அப்படி என்ன காதல்..?
 காதல் கீதல் எல்லாம் இல்ல சார். கதைக்கு ரொம்ப முக்கியமா இந்த டைட்டில் தேவைப்பட்டது. கதையின் மையமா ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்கினோம். அந்த கதாபாத்திரம் என்ன செய்யும் என்று அவருக்கே தெரியாது. அப்படி இருக்கும் ஒரு பெண் யாராக இருப்பார் என்ற கேள்வி வந்தது. பொதுவா ஒரு கதையில் இவங்க டாக்டர், அவங்க வக்கீல்னு சொல்லி அவரவர் குணாதிசயம் பற்றி சொல்லிவிடுவோம். இதுவரை பார்க்காத கேரக்டர் யார், அவங்க எப்படிப்பட்டவங்கன்னு யோசிச்ச வேளையில் மனசுக்குள் வந்து உட்கார்ந்தவர்தான் ‘சொப்பன சுந்தரி’.
 ஏன்னா, அவங்களைத்தான் இதுவரை யாரும் பார்த்ததில்ல. யார் இந்த சொப்பன சுந்தரி என்ற கேள்வி சினிமா ரசிகர்களிடையே இருந்தது. அந்த வகையில் இப்படியொரு டைட்டில் கதைக்கு முக்கியமா தேவைப்பட்டுச்சு. டைட்டிலை சொன்னதும் எல்லா தரப்பிலும் ஓகே சொன்னதால் டைட்டில் முடிவாயிடுச்சு. சொல்லப்போனா இந்த ஒரு டைட்டிலைத்தான் நாங்க யோசிச்சு வெச்சோம். இயக்குநர் வெங்கட் பிரபு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார். இண்டஸ்ட்ரியிலிருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது.
 ‘சொப்பன சுந்தரி’ காமெடி படமா? இது பிளாக் ஹியூமர். இதுவரை பிளாக் ஹியூமர் நிறைய பார்த்து இருப்போம். அதுல சில படங்கள் புரியாது. சில படங்கள் படிச்சவங்களுக்கு மட்டுமே புரியும். இல்லன்னா, ஓ... இவ்வளவு புத்திசாலித்தனமான காமெடியானு புரியவே ரொம்ப டைம் எடுக்கும். சில பிளாக் ஹியூமர் படங்கள் நம்மை ரொம்பவே வெறுப்பேத்தும். பிளாக் ஹியூமர் படங்களில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும். வெற்றி பெற்ற பிளாக் ஹியூமர் படம் என்றால் ‘சூது கவ்வும்’, ‘டாக்டர்’ போன்ற படங்கள் மட்டுமே பேசப்படுது. ‘சொப்பன சுந்தரி’யும் அந்த ஜானர்ல இருக்கிற படமா இருக்கும். சினிமா ரசிகர்கள், சினிமாவில் இருக்கிறவர்கள் எல்லோருமே இந்தப் படத்தை வரவேற்பாங்க.

படத்தோட லைன் சொல்லிட்டா படம் பார்க்கும் ஆர்வம் குறைஞ்சுடும். ஆனா, இந்தக் கதையை ஆடியன்ஸ் ஈஸியா கனெக்ட் பண்ணிடுவாங்க. அக்கம் பக்க வீடுகளில் நடக்கிற மாதிரியான கதை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே முழுக் கதையை சொல்லியிருக்கிறேன். யார் கண்டுபிடிக்கிறாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஏ சென்டர் ஆடியன்ஸுக்கு எப்பவுமே பிளாக் ஹியூமர் படம் புரியும். இது பி அண்ட் சி ஆடியன்ஸுக்கு புரியணும்னு பண்ணிய படம். கை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன சொல்கிறார்?
 ஹேப்பியா இருக்கிறார். இது சென்னையில் நடக்கும் கதை. அதனால் சென்னைக்கு ஏத்த முகம் தேவைப்பட்டது. ஐஸ்வர்யா மேடம் ஏற்கனவே சென்னையை மையமா வெச்சு ‘காக்கா முட்டை’ பண்ணாங்க. அதுல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா வந்தாங்க. இதுல அம்மாவா இல்லாம யூத் லுக் தேவைப்பட்டது. அந்த ஃபீல் வேணும் என்பதால் ஐஸ்வர்யா மேடம் கதைக்கு பொருத்தமா இருந்தார்.
 அகல்யா என்ற வேலைக்கு செல்லும் பெண்ணா வர்றார். அகல்யா எப்படிப்பட்டவர்னு யூகிக்க முடியாது. ஹியூமர் பண்ணுவாங்கனு எதிர்பார்த்தா ஹியூமர் பண்ணமாட்டாங்க. சீரியஸா இருக்க வேண்டிய நேரத்துல ஹியூமர் பண்ணுவாங்க. யூகிக்க முடியாதவர். அதனாலதான் யாருமே பார்க்காத சொப்பன சுந்தரி கேரக்டரை வெச்சோம். அடுத்து என்ன பண்ணப் போறாங்கனு எதுவுமே சொல்ல முடியாத கேரக்டர்.
ஐஸ்வர்யா மேடம் எந்த நிபந்தனையும் இல்லாம நடிச்சுக் கொடுத்தாங்க. நாங்களும் அவங்க கால்ஷீட்டை வீணடிக்காம அழகா முடிச்சோம். கேரக்டருக்காக அவருடைய மெனக்கெடல் அதிகம். படத்துல வித்தியாசமான ஃபைட் இருக்கிறது. குழாயடி சண்டை. சினிமாவுல வர்ற மாதிரி இல்லாம நிஜத்துல என்ன மாதிரி நடக்குமோ அந்த மாதிரி காட்டியிருப்போம். சண்டை பண்ணும் கேரக்டர்கள் நிஜத்துல என்ன மாதிரி மேனரிசங்களை வெளிப்படுத்துவாங்களோ அதை ஐஸ்வர்யா மேடம் ஸ்டடி செய்து பண்ணினார்.
முக்கியமான வேடத்துல தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், சுனில் ரெட்டி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, அகஸ்டின், பிஜான், தென்றல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவங்க எல்லாருக்கும் நடிப்புக்கான ஸ்பேஸ் சமநிலையில் இருக்கும். எல்லாரும் எல்லா காட்சிகளிலும் இருப்பாங்க. படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் ஆல் ஆர்ட்டிஸ்ட்ஸும் இருந்தாங்க.
‘சூது கவ்வும்’ படத்துல விஜய் சேதுபதி ஹீரோனு சொல்ல முடியாது. எல்லாரும் குரூப்பா இருந்து பண்ணியிருப்பாங்க. அந்த மாதிரி இதுல பண்ணியிருக்காங்க. கிங்ஸ்லி காட்சிகள் அல்டிமேட்டா வந்திருக்கு. எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு இருக்கிறார். கதையில் இன்வால்வாகி எக்ஸ்ட்ரா டேட்ஸ் தரேன்னு சொன்னார். டேட்ஸ் தர்றார் என்பதற்காகவோ, பிசினஸுக்கு உதவும் என்றோ கதை பண்ணாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பண்ணினேன்.
ஒளிப்பதிவு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன். அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். ஐந்து பாடல்கள். மெலடி, ராப் என கதைக்குள் இருக்கிற மாதிரி இருக்கும். ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.ஒரு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில் அடுத்த படத்தை பெரிய ஹீரோவை வைத்து பண்ணுவதற்கு இயக்குநர்கள் ஆர்வம் காண்பிப்பாங்க. நீங்க வேற ரூட்ல வர்றீங்களே?
‘லாக்கப்’ படத்துக்குப் பிறகு நான் நினைப்பது மாதிரி படங்கள் அமையவில்லை. என்னை மாதிரி இயக்குநர்கள் படம் பண்ணலைனாலும் பிரச்னை, அவுட் டேட் ஆனாலும் பிரச்னை. நான் எழுதிவெச்ச கதையை பெரிய ஹீரோக்களுக்கு சொல்லும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. சினிமாவில் டிராவல் பண்ணணும் என்பதற்காக தொடர்ந்து இயங்கி வருகிறேன். யதார்த்தமான கதைகள் என்னுடையது. ஒன்லைன் கவரும்போது ஹீரோ, ஹீரோயின் பார்க்கமாட்டேன்.
மிஷ்கினை வைத்து படம் பண்ணணும் என்ற உங்கள் ஆசை எந்தளவில் உள்ளது?
என்னுடைய மிகப் பெரிய குரு மிஷ்கின். ‘லாக்கப்’ படம் பார்த்தவங்க அவருடைய சாயலில் இருந்துச்சுனு சொன்னாங்க. மிஷ்கின் சாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். அவருடன் ஒர்க் பண்ணணும் என்ற ஆர்வம் இன்னும் குறையவில்லை. இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் எப்படி சினிமாவுக்கு வந்தார்?
நான், பெரிய ஆள் இல்ல. மந்தவெளியில் உள்ள சாதாரண ஹவுசிங் போர்ட்ல பிறந்து வளர்ந்தவன். பெரிய படிப்பு இல்ல. நான் படிச்ச ஸ்கூலில் கே.எஸ்.ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவா படிச்சாங்க. ஆண்டு விழாக்களுக்கு அவர்கள் வரும்போது கலை மீது ஆர்வம் வந்துச்சு. புத்தக வாசிப்பு, நாடகம் போடுவது என இளம் பருவம் கலை சார்ந்ததாகவே இருந்தது. சினிமாவை முறைப்படி படிச்சேன். இயக்குநரா வரணும் என்ற லட்சியத்துக்காக பல இழப்புகளை சந்தித்தேன். ஒரே சப்போர்ட், ஃபேமிலி சப்போர்ட்.
இப்போது புதிய படங்களை விளம்பரப்படுத்த படக்குழு மக்களை சந்திக்கிறார்கள். ‘லாக்கப்’ அப்படி இல்லாமலேயே மக்கள் கவனம் ஈர்த்ததே?
‘லாக்கப்’ எனக்கு பேர் வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துக்கு சிங்கிள் போஸ்டர் ஒட்டவில்லை. மவுத் டாக் மூலம் மக்களின் கவனம் பெற்றது. அதுதான் நான் அடுத்து படம் பண்ண காரணம். ஒரு படத்தோட வெற்றிக்கு நல்ல கதை முக்கியம். அது அவங்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும். ஆக்ஷன் பண்ணா முழுதும் ஆக்ஷனா இருக்கணும். ‘கேஜிஎஃப்’ அப்படிதான் ஹிட்டானது. த்ரில்லர் படம் என்றால் த்ரில்லர் படமா இருக்கணும். காமெடி படம் என்றால் காமெடி இருக்கணும். ஒரே கதையில் பல அம்சங்களைச் சேர்ப்பது ரிஸ்க்.
எஸ்.ராஜா
|