மாடலிங்... சினிமா... சீரியல்... லைஃப் கிராஃபை சொல்கிறார் கண்ணான கண்ணே யுவா
‘கண்ணான கண்ணே’ தொடரில் யுவாவாக, சிறந்த மருமகன் எனப் பெயரெடுத்து மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் ராகுல் ரவி. ஏற்கனவே, ‘நந்தினி’ தொடர் மூலம் அருணாக பிரகாசித்தவர்.
மாடலிங், சீரியல், சினிமா என ஒவ்வொரு அடியாக கவனமாக முன்னேறி வருகிறார் ராகுல் ரவி. ‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது சன் டிவிதான். அடுத்தடுத்து சீரியல் தந்து என்னை எடுத்திட்டு வந்தாங்க...’’ என உற்சாகமாகப் பேசும் ராகுல் ரவியின் பூர்வீகம் கேரளா.
 ‘‘சொந்த ஊர் திருச்சூர் பக்கம் உள்ள த்ரிப்ராயர். அப்பா ரவீந்திரன் கத்தார்ல வேலை செய்தார். அம்மா சியாமாதான் என்னையும் தங்கச்சி வர்ஷாவையும் பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க. பள்ளிப் படிப்பெல்லாம் ஊர்லயே முடிச்சேன். பிறகு, பி.டெக் ஐ.டி எர்ணாகுளத்துல படிச்சேன். அப்புறம், கரஸ்ல எம்பிஏ பண்ணினேன். அடுத்து ஹோட்டல் இண்டஸ்ட்ரில கொஞ்ச நாட்கள் வேலை செய்தேன். அப்புறம், ஷேர் மார்க்கெட்ல ஃபைனான்சியல் அட்வைசரா இருந்தேன். இந்த ஃபீல்டு எதுவும் எனக்கு செட்டாகல. பிறகு, மாடலிங் பண்ணினேன்.

ஆனா, சினி ஃபீல்டுக்குள்ள திட்டமிட்டு வரல. அதை நினைச்சும் பார்க்கல. எனக்கு பி.டெக் படிக்கிறப்ப அரியர்ஸ் இருந்துச்சு. அதை கிளியர் பண்ண ஓராண்டு தேவைப்பட்டுச்சு. அப்ப கிடைக்கிற நேரத்துல ஏதாவது பண்ணலாமேனு நினைச்சேன். நண்பர்கள் மாடலிங் முயற்சி செய்னு சொன்னாங்க.
 அப்படிதான் மாடலிங் உள்ள வந்தேன். டிவியில் வந்த ஒரு விளம்பரம் பார்த்து ஹேரோமேக்ஸ் பியூட்டி ஹேர் கான்டெஸ்ட் போனேன். அதுல வெற்றி பெற்றேன். அங்கதான் எனக்கு ஒரு மோட்டிவேஷன் கிடைச்சது. சரி, நம்மாலும் பண்ண முடியுதுனு மனசுல தோணுச்சு. இதுலயே போலாம்னு பயணிக்க ஆரம்பிச்சேன்...’’ என மெலிதாகப் புன்னகைக்கிறார் ராகுல். அவரின் மாடலிங் புகைப்படங்கள் அவருக்கு மலையாள சினிமா வாய்ப்பை அளித்திருக்கிறது. ‘‘என் போட்டோஸைப் பார்த்திட்டு சிலர் மலையாளப் படங்கள்ல நடிக்க கூப்பிட்டாங்க. நடிகர்கள் துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில் நடிச்ச படங்கள்ல சின்னச் சின்ன கேரக்டர்ஸ் பண்ணினேன். அவை பிரபல இயக்குநர் சத்தியன் அந்திக்காடு சாரின் படங்கள். ஆனா, நான் அவ்வளவு சக்சஸ்ஃபுல் ஆகல.அதனால, இந்த ஃபீல்டை விட்டுட்டு போகலாம்னு இருந்தேன். ஏன்னா, பட வாய்ப்பு எப்பவாவதுதான் வரும். அதனால, இது ரிஸ்க்னு தோணுச்சு. குடும்பத்தைப் பார்க்க முடியாதுனு பயம் வந்துச்சு. அப்பா கத்தார்ல இருந்ததால அங்கே வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்தேன்.
அப்பதான் மழவில் மனோரமா சேனல்ல இருந்து சீரியல்ல நடிக்க அழைப்பு வந்தது. சரி, கடைசியா இதுல கொஞ்சம் முயற்சி செய்வோம். சரிவரலனா வெளிநாடே போயிடலாம்னு நினைச்சு உள்ளே வந்தேன். என் நம்பிக்கை வீண் போகல. அந்த சீரியல் பெயர் ‘பொன்னம்பிலி’. செமயா ரீச்சானது. நானும் நடிகை மாளவிகா வேல்ஸும் சேர்ந்து நடிச்சோம். எங்க ஜோடி அங்க ஹிட்டாச்சு. ஏன்னா, மாளவிகா வேல்ஸ் படங்கள்ல எல்லாம் நடிச்சிருந்தாங்க. எல்லோருக்கும் தெரிஞ்ச ஸ்டார். அதனால, எங்க ஜோடி வொர்க்அவுட் ஆச்சு. அந்த சீரியல் ஓராண்டு போச்சு. நிறைய டாக் தந்தது.
அடுத்து ‘நந்தினி’ சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ, இவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட் எல்லாம் வரும்னு நான் நினைக்கல. மூவி மாதிரியான ப்ரொஜெக்ட். சீரியல்ல இவ்வளவு வாய்ப்புகள் இருக்கு என்கிற விஷயமே எனக்கு அன்னைக்குத்தான் தெரிய வந்துச்சு. அதுக்கு முன்னாடி வரை சீரியல்லாம் யார் பார்ப்பாங்கனு சாதாரணமா இருந்தேன். ஆனா, அப்படியில்லனு பின்னாடி புரிஞ்சுகிட்டேன். என் திறமையை நிரூபிக்க வச்சது சீரியல். அப்படியே நான் சீரியல்ல செட்டிலாகிட்டேன்.
‘நந்தினி’க்குப் பிறகு சன் டிவி ‘சாக்லேட்’னு இன்னொரு சீரியல் கொடுத்தாங்க. அதுவும் நல்ல ரீச். அது கோவிட் நேரத்துல முடிஞ்சது. அதுக்குப்பிறகு, ‘கண்ணான கண்ணே’ சீரியல். இதுவும் சன் டிவிதான் தந்தாங்க. எனக்கு அடுத்தடுத்து சீரியல் தந்து என்னை ஊக்கப்படுத்தினாங்க. அதனால, சன் டிவிக்குதான் நான் தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப ஹேப்பியா இருக்கு. சிலர் என்னை ‘நந்தினி’யில் நடிச்ச அருணாகவே இன்னமும் பார்க்கிறாங்க. இப்ப ‘கண்ணான கண்ணே’ யுவா கேரக்டரும் மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல பையன். நல்ல மருமகன்னு ஒரு முத்திரை கொடுத்திருக்காங்க. எங்க போனாலும் அந்தப் பாசம் எனக்குக் கிடைக்குது.
சமீபத்துல ‘சன் நட்சத்திர கொண்டாட்டம்’ போனப்ப பெரிய ரெஸ்பான்ஸை பார்த்தேன். எனக்கு சமூக ஊடகங்கள்ல நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அது தெரியும். ஆனா, தெரியாத ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை அன்னைக்கு பார்த்து ஆச்சரியமானேன். கேரளாவுல இப்படியெல்லாம் இருக்கமாட்டாங்க. ஆனா, இங்குள்ள மக்கள் அவ்வளவு சப்போர்ட் பண்றாங்க. அந்த கேரக்டரை அவங்க வீட்டுல ஒரு ஆளா நினைக்கிறாங்க. வெளியே போகும்போது யுவா… யுவானுதான் கூப்பிடுறாங்க. அந்த அன்புக்கு எந்த கைமாறும் செய்யமுடியாது.
‘நந்தினி’ பண்ணும்போதும் சிறந்த ஜோடினு ‘சன் குடும்ப விருது’ வாங்கினேன். இப்ப ‘கண்ணானகண்ணே’ சீரியலுக்கு சிறந்த ஜோடி என்கிற விருதுடன் சிறந்த மருமகன் என்கிற விருதும் கிடைச்சிருக்கு...’’ என மனம் நெகிழ்ந்தவர், தொடர்ந்து பேசினார். ‘‘ஆரம்பத்துல நடிப்புனு முடிவெடுத்ததும் அப்பாகிட்ட சொன்னேன். அவர், ‘உனக்கு பிடிச்சா பண்ணு. இல்லனா பிறகு பார்த்துக்கலாம்’னு நம்பிக்கை தந்தார். அப்பா எப்படினா ரொம்ப கூல் கேரக்டர்.
எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வாகவே கையாளுவார். எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார். அம்மாவும் அப்படிதான். என் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு ஊக்கப்படுத்திட்டே இருப்பாங்க. ரெண்டு பேரும் ரொம்ப சப்போர்ட் செய்தாங்க. கடவுள் புண்ணியத்துல தொடர்ந்து வேலையில் கமிட்டாகிட்டே இருக்கிறதால பயமில்லாமல் பயணிக்கிறேன். இப்ப எனக்கு என் மனைவி லட்சுமியும் நிறைய சப்போர்ட் செய்றாங்க.
என் ஃப்ரண் ட்ஸ் மூலம் லட்சுமி பழக்கமானாங்க. 2020ல் கோவிட் டைம்ல நிறைய பேசினோம். அதே ஆண்டு திருமணம் பண்ணிக்கிட்டோம். லவ் கம் அரேஞ்ஜ்டு மேரேஜ். அன்னைக்கு நான் சீரியல்னு முடிவு எடுக்கிறப்ப ரொம்ப கடினமா இருந்தது. இப்ப அந்த முடிவு கரெக்ட்டா இருக்கு. எனக்கு பிடிச்ச வேலை இது. இதை நான் கஷ்டப்பட்டு பண்ணல. என்ஜாய் பண்ணியே பண்றேன். அதனால எனக்கு இது வேலையாகவே தெரியல...’’ என உற்சாகமாகச் சொல்லும் ராகுல் ரவி, மலையாள சினிமாவிலும் கோலோச்சுகிறார். ‘‘முன்னாடி மலையாள சினிமா செய்ததால அதுல இருந்து வாய்ப்புகள் வருது. இப்ப ‘கய்பக்க’னு ஒரு படம் ரிலீசாகியிருக்கு.
அப்புறம், இன்னொரு படம் கமிட்டாகி இருக்கேன். தமிழ் சினிமாவிற்கு இன்னும் முயற்சி செய்யல. ஏன்னா, சீரியல் போறதால டைம் இல்ல. இப்ப தெலுங்குல ஒரு சீரியல் ஜெமினி டிவிக்காக பண்ணப் போறேன்.இன்னும் நிறைய பண்ணணும்னு ஆசை இருக்கு. குறிப்பா, பெஸ்ட் கேரக்டர்கள் செய்யணும். வெவ்வேறு ஜானர்ல நடிக்கணும். அதுக்காக காத்திருக்கேன். எங்க போய் நாம் ரீச்ஆவோம்னு தெரியாது. ஆனா, பண்றதை சிறப்பா பண்ணணும்னு நினைக்கிறேன்...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ராகுல் ரவி.
பிடிச்சது...
பிடிச்ச உணவு: மட்டன் பிரியாணி. அப்புறம், டெஸர்ட்ஸ். ஆனா, டயட்ல இருக்கிறதால சாப்பிட முடியாது. பிடிச்ச உடை: கருப்புகலர் ரொம்பப் பிடிக்கும். அதுல என்ன உடைனாலும் ஓகேதான். பிடிச்ச ஊர்: சென்னைதான். வாழவைக்கும் ஊர் இல்லையா! பிடிச்ச நடிகர்: விஜய். பிடிச்ச நடிகை: ஆலியா பட். பிடிச்ச சீரியல்: சாக்லேட். பிடிச்ச சினிமா: சமீபத்துல தனுஷ் சார் நடிச்ச ‘திருச்சிற்றம்பலம்’ செமயா இருந்தது. இசையமைப்பாளர்: அனிருத். அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்: அன்னைக்கு காலையில் கேட்கிற பாடல். தெய்வம்: கடவுள் நம்பிக்கை உண்டு. எல்லா தெய்வமும் கும்பிடுவேன். பிடிக்காத விஷயம்: நம்மைப் பற்றி பின்னாடி போய் பேசுறது… சமையல்: அம்மா செய்கிற நான்- வெஜ் ஐட்டங்கள் எல்லாமே பிடிக்கும்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|