யானைகளுக்காக ஒரு சுடுகாடு!
‘‘மனுசன் செத்தா ஊருக்கு ஊர் சுடுகாடு, இடுகாடு எல்லாம் இருக்கு. ஒண்ணு புதைச்சுடுவாங்க. இல்ல எரிச்சுடுவாங்க. மிருகங்கள் செத்தால்? ப்பூ அதில் என்ன சந்தேகம்! அங்கங்கே காலியிடம் எங்கே இருக்கோ அங்கே புதைச்சுடுவாங்க. சரி, பெரிய யானைகள் செத்தால்? அது மட்டும் என்னவாம். அங்கங்கே எங்கே இடம் இருக்கோ அதுக்கு ஏற்ற மாதிரி குழி தோண்டி, உறுப்புகளை வெட்டிப் புதைச்சுடுவாங்க. இல்லே, அங்கேயே டன் கணக்கில் விறகுகளை அடுக்கி எரிச்சுடுவாங்க!’’ இப்படி சொல்பவர்களுக்கெல்லாம் அப்படி இல்லை என்று தெரிவிக்கிறது இந்த ஒளியங்கடவு காட்டுப்பகுதியில் கிடக்கும் சாம்பல்.
அடர்ந்த வனப் பகுதியான இதற்கு சற்றுத் தள்ளி இருக்கிற நடுப்பதி என்கிற ஊர் மலைமக்கள் இதை யானைகளின் சுடுகாடு என்றுதான் சொல்லுகிறார்கள்.அதுவும் கேரள மாநிலத்தில் எங்கே யானைகள் செத்தாலும் அவை பெரும்பாலும் இங்கேதான் கொண்டு வரப்படுகிறது. விறகுக்கட்டைகள், எரு மற்றும் டயர்கள் அடுக்கி எரிக்கப்படுகிறது. கேரள - தமிழக எல்லையான வாளையாறு மலபார் சிமெண்ட் ஆலையைக் கடந்து இரண்டு கிலோமீட்டர் கடந்தால் எட்டுவது நடுப்பதி. பழங்குடி கிராமம். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஒளியங்கடவு.
நடுப்பதியிலிருந்து செல்லும் பாதையே கொஞ்சம் அச்சமூட்டுவதாய் இருந்தது. அந்தளவுக்கு காடு. ‘‘இதற்குள் யானை, சிறுத்தை, கரடி, மான் எல்லாம் உண்டு...’’ என்று சொல்லிக் கொண்டே வந்தார் நம்மை அழைத்துச் சென்றவர். குறிப்பிட்ட இடம் சென்றதும் சாலையை விட்டு சற்றே தள்ளி முப்பது அடி விட்டத்தில் வட்டமாய் குவிந்து கிடந்தது சாம்பல். அதில் சிறு, சிறு கம்பிகள், சாம்பல்பூத்த நிலையில் சில எலும்புகள்.
‘‘சுருள் சுருளாய் இத்தனை கம்பிகள் இருக்கிறதே. இது செத்த யானையைக் கொண்டு வரும்போது கட்டியிழுத்து வந்ததா?’’ என்று கேட்டால், ‘‘மரங்களை அடுக்கி யானையை எரிக்கும்போது எளிதில் தீப்பற்ற டயர்களைப் பயன்படுத்துவார்கள். அதுவே டன் கணக்கில் இருக்கும். அதில் இருந்த கம்பிகள்தான் இவை!’’ என்றார் நம்முடன் வந்த சோமசுந்தரம்.
‘‘இது கேரளப் பகுதி. இங்கே யானைகளைக் கொண்டு வந்து எரிக்கிறதுக்குப் பின்னால ஒரு வரலாறும் உண்டு. வடசேரி மன்னாடியார் காலத்தில், அதுக்கு முந்தைய ராஜா காலத்தில் எல்லாம் இங்கே யானைகள் நிறைய இருந்திருக்கு. அதைப் புடிச்சு நிறைய விற்றிருப்பதாகச் சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் அகழி வெட்டி பிடிக்கற ஆள்காரங்க அந்தக் காலத்தில் இங்கேதான் இருந்திருக்காங்க. அப்ப இங்கே யானைகள் எரிக்கறதும் உண்டுன்னு எங்க தாத்தா காலத்துல சொன்னதுண்டு.
அதையெல்லாம் உத்தேசித்துத்தான் ஒரு முப்பது நாற்பது வருஷமா கேரளத்தில் எங்கே யானை செத்தாலும் அதை எரிக்கிறதுக்கு இங்கே கொண்டு வந்துடறதா ஃபாரஸ்ட்காரங்க பேசிக் கேட்டிருக்கேன். போன மாசம் கூட இறந்த ஒரு யானையை இங்கே வச்சுதான் எரிச்சாங்க.
அதோட சாம்பல்தான் இது. பொதுவாக அந்தக் காலத்திலேயே யானை எரிக்கிறதுன்னா லாரி, லாரியா. கட்டை, டீசல், டயர் எல்லாம் கொண்டு வருவாங்க. செத்த யானையை ஆளுகதான் கயிறு கட்டி லாரியிலிருந்து இறக்குவாங்க. அதுக்கு எல்லாம் எங்க ஊர்க்காரங்கதான் வருவாங்க.
இப்ப அப்படியில்லை. கிரேன் கொண்டு வந்துடறாங்க. அது அப்படியே அலேக்கா தூக்கி வச்சுடுது. இந்த வேலையை செய்யறதுக்குன்னு அறுபது பேரை ஊருக்குள்ளே ஒரு குழுவா பிரிச்சிருக்காங்க. அவங்க இருபது இருபது பேரா மூணு பிரிவா செயல்படறாங்க.
ஒரு செத்த யானை வந்துட்டா முதல் இருபது பேர் இந்த யானை எரிக்கும் வேலையை கையில் எடுத்துக்குவாங்க. அடுத்தது ஒரு யானையின் உடல் வந்தா அடுத்த 20 பேருக்கு வேலை. அதுக்கடுத்து வர்ற யானைக்கு கடைசி 20 பேர். இப்படி சில சமயம் மாசம் மூணு யானைகள் கூட வந்தது உண்டு!’’ என்றவர், யானைகளை எரிக்கும் முறையையும் விளக்கினார். ‘‘யானை வரும்போதே அது கூட லாரிகளில் மரம், கட்டை எல்லாம் கொண்டு வந்துடுவாங்க. கோயில் யானை, முதலாளிமார்க வளர்த்த யானை, ஃபாரஸ்ட் யானைன்னு எது செத்தாலும் இங்கேதான். யானைக்கு சேர்ந்தவங்களும் அதோட வந்துடுவாங்க.
இங்கே கொண்டு வரப்படுகிற யானையை இறக்குவது, அதை வெட்டி அடுக்குவது, கட்டையை அடுக்குவது எல்லாம்தான் இங்குள்ளவங்க வேலை. கொம்பு மட்டும் ஃபாரஸ்ட்ல வெட்டி எடுத்துக்குவாங்க. முதலாளிமாருகளா இருந்தா இறந்த யானைக்கு நிறைய சடங்குகள் செய்வாங்க. ஒரு யானையை இறக்கி விறகுக்கட்டையெல்லாம் அடுக்கி ஒழுங்கு பண்றதுக்கே ஒரு நாள் ஆயிரும். அப்புறம் நெருப்பு வச்சு எரிஞ்சு முடிய மூணு நாள் ஆகும்.
சில சமயம், மழைக்காலத்தில் ஒரு வாரம் கூட எரிஞ்சுட்டே இருக்கும். அதுக்கு மாறி மாறி காவல் இருப்பாங்க. எலும்பு கூட தெரியாத அளவு எரிச்சு முடிச்சுட்டுத்தான் ஆள்காரங்க ஓய்வாங்க!’’ என்கிறார் சோமசுந்தரம். இங்கே யானை எரிக்கப்படுவதால் நடுப்பதியில் உள்ளவர்கள் சில பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் இங்கே யானைகளைக் கொண்டு வந்து எரிப்பதற்கு இப்பகுதி மக்களே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஏனென்றால் இங்கே எழும் புகைமூட்டம் ஊருக்குள் வரும். அதன் மூலம் உடம்பெல்லாம் அரிப்பு, எரிச்சல் வருவதாக ஒரு சிலர் புகார் தெரிவித்து நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்கு மருத்துவ முகாம் எல்லாம் ஏற்படுத்தி உள்ளனர் அதிகாரிகள். அந்த சொறி நமைச்சல் வருவது எல்லாம் எப்போதாவது எரிக்கப்படும் யானை உடல்களால் ஏற்படுவது அல்ல என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இறந்த யானைகளைக் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு பெறும் இளைஞர்கள் இதற்கு ஆதரவாய் நின்றிருக்கிறார்கள். அதற்குப் பின்பு அந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.
இறந்த யானை எரியூட்டப்படும் இடமே யானைகள் உலாவும் பிரதேசம். அதனால் யானை எரியும்போது கூட காட்டு யானைகள் இங்கே வந்து விடுவது உண்டு. அவற்றை விரட்டி விட்ட அனுபவமும் எரியூட்டுபவர்களுக்கு இருந்திருக்கிறது. நாம் பேசிய சோமசுந்தரத்தின் மகனே யானை எரிக்கும் குழுவில் இடம் பெற்றவர்தான். ‘‘யானைகளுக்கு என்று இப்படியொரு சுடுகாடு தமிழ்நாடு உட்பட வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. கேரளாவைப் பொறுத்தவரை யானை என்பது வசதி படைத்தவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணி. தவிர திருச்சூர் பூரம் திருவிழா முதல் சபரி மலை மகரவிளக்கு வரைக்கும் கோயில் விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
யானைகளுக்கு வைத்தியம் பார்ப்பதிலும் கெட்டிக்கார மருத்துவர்கள் கேரளத்தில்தான் உண்டு. கேரள அரசின் சின்னமே யானைகள்தான். எனவே இப்படி யானைகளுக்கு என்று ஒரு சுடுகாடு வைத்து அவை சாகும்போது நல்லடக்கம் செய்வது பெரிய ஆச்சர்யமில்லை. இதிலும் யானைகளின் முன்மாதிரியாக கேரளா விளங்குவது ஆச்சர்யமாக இருக்கிறது. இதைப் பார்த்து நம் தமிழ்நாடு மட்டுமல்ல, இதர மாநிலங்களும் யானை இறந்தால் வெட்டி, குளத்திலோ, குட்டையிலோ புதைப்பதற்கு பதில் இந்த மாதிரி முறையைப் பின்பற்றலாம்!’’ என்கிறார் இந்த யானை சுடுகாட்டைப் பார்க்க வந்திருந்த சண்முகம்.
இதுவரை இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் எரிக்கப்பட்டுள்ளனவாம். அப்படி யானைகள் எரிக்கப்படும்போது ஏதாவது நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நடை பெறுவதுண்டு. ஒரு முறை கேரள பிரபல நடிகர் ஜெயராம் வளர்த்த யானை இறந்து விட்டது. அதை எரியூட்ட இங்கேதான் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனுடன் ஜெயராமும் வந்திருந்தாராம். அது எரியூட்டப்படும்போது அவர் சிறு பிள்ளை போல் கதறி அழுதாராம். ‘‘மணிக்கணக்கில் அவர் தேம்பிக் கொண்டே இருந்ததும், அழுதுகொண்டே அவர் காரில் ஏறியதும் இன்றும் எங்கள் கண்களுக்குள் நிற்கும் சம்பவம்!’’ என்றார்கள் நம்மிடம் பேசிய நடுப்பதி மக்கள்.
கா.சு.வேலாயுதன்
|