Must Watch



முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

‘ஹாட்ஸ்டாரி’ல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. முப்பது வயதுக்குள் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தவர் வழக்கறிஞர் முகுந்தன் உன்னி. வயது முப்பதைக் கடந்த பிறகும் கூட வழக்கறிஞர் தொழிலில் கூட ஒரு நிலையான இடத்தை முகுந்தனால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவரது அம்மாவுக்கு எதிர்பாராதவிதமாக காலில் அடிபடுகிறது. சிகிச்சைக்காக அம்மாவை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார் முகுந்தன். அங்கே ஒரு வழக்கறிஞர் மருத்துவக் காப்பீட்டில் மோசடி செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதைக் காண்கிறான் முகுந்தன். அவனும் அதே போல மோசடியில் இறங்க, அதிர வைக்கிறது மீதிக்கதை.

சாலை  விபத்துகளில் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடு வாங்கித் தருவதற்காக நடக்கும் வழக்குகளில் நீதித்துறை, மருத்துவம், காப்பீடு, காவல்துறையைச் சேர்ந்த சிலர்  நடத்தும் ஒரு நெட்வொர்க் மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த துணிச்சலுக்காகவே இந்தப் படத்தைப் பாராட்ட வேண்டும். முகுந்தன் உன்னியாக கலக்கியிருக்கிறார் வினீத் சீனிவாசன். இப்படத்தின் இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக்.

10

கடந்த வாரம் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் கன்னடப் படம், ‘10’. வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீரன், விஜய். தான், பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் எதிராளியை அடித்து நொறுக்கி ஏராளமான ரசிகர்களைப் பெறுகிறான். அவனுக்கு ஒரு நல்ல பயிற்சியாளர் கிடைக்கிறார். வங்கியில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். இந்தியாவிலே ஒரு முக்கியமான குத்துச்சண்டை வீரனாக உருவெடுக்கிறான்.

பணம், காதல், வெற்றி என அவன் வாழ்க்கையே மகிழ்ச்சியில் சுழல்கிறது. குத்துச்சண்டை விளையாட்டில் உச்சத்தில் இருக்கும்போது போதைப்பொருள் சோதனையில் சிக்குகிறான் . அவன் விளையாட தடை விதிக்கப்படுகிறது. அவனது வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இதிலிருந்து அவன் மீண்டு வந்தானா... உண்மையில் விஜய் போதைப் பொருளைப் பயன்படுத்தினானா... என்பதே திரைக்கதை.  எங்கேயும் சலிப்புத் தட்டாமல் வேகமாகச் செல்கிறது திரைக்கதை. குத்துச்சண்டைக் காட்சிகளைப் படமாக்கிய விதம் சிறப்பு.  விஜய்யாக பொருந்திப் போகிறார் வினய் ராஜ்குமார். படத்தின் இயக்குநர் கார்ம் சாவ்லா.

த பேல் ப்ளூ ஐ

மனதை அதிர வைக்கும் ஒரு திரில்லிங் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘த பேல் ப்ளூ ஐ’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.
1830களில் படத்தின் கதை நிகழ்கிறது. நியூயார்க்கில் உள்ள ஒரு இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வரும் இராணுவ வீரன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுகிறான். அத்துடன் அவனது உடம்பைக் கிழித்து இதயத்தை நீக்கியிருக்கிறான் கொலைகாரன்.

இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை உண்டாக்குகிறது. கொலைகாரனைக் குறித்த சிறு தடயம் கூடக் கிடைப்பதில்லை. இந்நிலையில் கொலைகாரனைக் கண்டுபிடிப்பதற்காக ஓய்வுபெற்ற துப்பறிவாளரான லண்டோரின் உதவியை நாடுகிறது இராணுவம். அவரும் கொலைகாரனைக் கண்டுபிடிக்க சம்மதிக்கிறார்.

லண்டோர் களத்தில் இருக்கும்போதே அதே மாதிரி இன்னொரு கொலை நடக்கிறது. இச்சூழலில் இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுவரும் எழுத்தாளரான எட்கர் ஆலன் போ லண்டோருக்குக் கொலையாளியைப் பிடிக்க உதவுகிறார். இருவரும் சேர்ந்து கொலைகாரனைப் பிடித்தார்களா என்பதே மீதிக்கதை. லண்டோராக கிறிஸ்டியன் பேலும், எட்கராக ஹாரி மெல்லிங்கும் கலக்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஸ்காட் கூப்பர்.