சாகப் போறேன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லாதீங்க!6 வயது சிறுவனின் வேண்டுகோள் இது...

அந்த சிறுவனுடனான சந்திப்பு குறித்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்போலோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர், மருத்துவர் சுதீர்குமார் பகிர்ந்த டுவிட்டர் பதிவுதான் சென்ற வார வைரல்.
‘‘வழக்கம்போல நோயாளிகளைப் பார்த்து சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு 6 வயதுச் சிறுவனின் பெற்றோர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்கள் என்னிடம், வெளியில் எங்கள் மகன் மனு காத்திருக்கிறான். அவனுக்கு புற்றுநோய் இருக்கிறது. நாங்கள் அதை அவனிடம் இன்னும் கூறவில்லை. நீங்கள் அவனுக்கு சிகிச்சையளிக்கவேண்டும். ஆனால், அவனிடம் இந்த விஷயத்தை மட்டும் கூறவேண்டாம்... என்றார்கள்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்றேன். சக்கர நாற்காலியில் மனு உள்ளே வந்தான். அவனது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அவன் நம்பிக்கையுடனும், புத்திசாலியாகவும் தோன்றினான். அவனது ரிப்போர்ட்டைப் பார்த்தேன். மனுவுக்கு glioblastoma multiforme grade 4 புற்றுநோய் இருப்பதை அறிந்தேன். இதனால் மனுவின் இடது மூளை பாதிக்கப்பட்டு, வலது கை மற்றும் காலில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. தவிர மூளைப் புற்றுநோய் காரணமாக அவனுக்கு வலிப்பும் இருந்துள்ளது.

என்னென்ன சிகிச்சைகள் அளிக்கவேண்டும் என்பதை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் புறப்படும்போது என்னிடம் தனியாகப் பேச மனு விரும்பினான்.உடனே அவன் பெற்றோர் அறையை விட்டு வெளியேறினர். மனு என்னிடம், ‘எனது நோய் குறித்து இணையத்தில் படித்துத் தெரிந்துகொண்டேன்.

நான் இன்னும் 6 மாத காலம்தான் உயிருடன் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும்,ஆனால், நான் அம்மா அப்பாவிடம் கூறவில்லை. தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னை அளவுகடந்து நேசிக்கின்றனர். நீங்களும் இந்த உண்மையை தயவு செய்து அவர்களிடம் கூறவேண்டாம்...’ என்றான்.

வாயடைத்து அமர்ந்தேன். மகனின் நோய் குறித்து அவனிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பெற்றோர்... தனது நோய் குறித்து பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என கையெடுத்துக்கும்பிடும் சிறுவன்... உணர்ச்சிக் குவியலில் தத்தளித்தேன்.9 மாதங்களுக்குப் பிறகு, மனுவின் பெற்றோர் என்னைக் காண வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சந்தித்துவிட்டுச் சென்றபிறகு மனுவுடன் சந்தோஷமாக இருந்தோம். அவன் டிஸ்னி லேண்டிற்குச் செல்ல ஆசைப்பட்டான்.

சென்று வந்தோம். தற்காலிகமாக எங்கள் வேலையை விட்டுவிட்டு அவனுடன் நேரம் செலவிட்டோம். கடந்த மாதம் அவன் எங்களை விட்டுப் பிரிந்தான். எங்கள் வாழ்நாளின் சிறந்த 8 மாதங்கள் இதுதான். அதைக் கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவித்துப் போகலாம் என்று இங்கு வந்தோம்...’ என்றனர்.எனக்கு மனு உயர்ந்த மனிதனாகத் தெரிந்தான்...’’மருத்துவர் சுதீர் பகிர்ந்திருந்த இந்த நிகழ்ச்சி இணையவாசிகளைக் கண்கலங்க வைத்துள்ளது.  

ஜான்சி