ஏஞ்சல் - சாத்தான் ரெண்டும் சேர்ந்தவன்தான் இந்த மைக்கேல்



‘பசியோட தொரத்துற மிருகத்துக்கு வேட்ட தெரியணும்னு அவசியம் இல்ல மாஸ்டர்!’ ‘மன்னிக்கும்போது நாம கடவுள் ஆகுறோம் மைக்கேல்!’
‘நான் மனுஷனாவே இருக்கேன் மாஸ்டர்!’இப்படி ஆக்‌ஷனும் ஆக்‌ஷன் நிமித்தமுமாக வசனங்கள் தெறிக்க, சந்தீப் கிஷான், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் என ‘எப்போ படத்தை ரிலீஸ் செய்வீங்க’ என்னும் ஆர்வத்தை தூண்டுகிறது ‘மைக்கேல்’ படத்தின் டீசர்.
‘புரியாத புதிர்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இப்போது ஐந்து மொழிகளில் ‘மைக்கேல்’ படம் கொடுக்க தயாராக இருக்கிறார்.

‘‘சந்தீப் கிஷான் எனக்கு நல்ல நண்பர். லாக் டவுன் டைம்ல கால் செய்தப்ப ‘அடுத்து என்ன கதை செய்யப் போறீங்க’ அப்படின்னு கேட்டார். ‘முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையாதான் எழுதிட்டு இருக்கேன்’ அப்படின்னு சொன்னேன்.‘நானும் ஆக்‌ஷன் கதைதான் தேடிக்கிட்டு இருக்கேன்’ அப்படின்னு அவர் சொன்னார். அப்படி உருவானதுதான் ‘மைக்கேல்’ படம்...’’ ரிலீஸ் வேலைகளுக்கு இடையே புன்னகையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. மைக்கேல்..?

பொதுவாகவே மைக்கேல் அப்படிங்கிற பெயர் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு. தமிழ் சினிமாவுல மைக்கேல் பெயருக்கு ஒரு தனித்துவம் உண்டு. ‘மைக்கேல் மதன காமராஜன்’ ஆகட்டும், ‘ஆயுத எழுத்து’ மைக்கேல் வசந்த் கேரக்டர் ஆகட்டும், இப்பவும் மனசிலே நிற்கும். மேலும் படம் ஐந்து மொழிகள்ல வர்றதால அத்தனை மொழிகளுக்கும் பொதுவான பெயரா இந்த மைக்கேல் இருக்கும். படத்தின் கதைக்களம் என்ன?

ஒரு மனுஷனுக்குள்ள தேவதை, சாத்தான்னு ரெண்டு கேரக்டரும் இருக்கும். சிலருக்கு தேவதையா இருக்கற மனுஷன், ஒண்ணு ரெண்டு பேருக்கு சாத்தானாக இருக்கத்தான் செய்வான். எல்லாரும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது இல்லையா..? அதை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன்தான் ‘மைக்கேல்’.

இது என்ன மாதிரி கதை அப்படிங்கறதை விட என்ன மாதிரி படம் அப்படின்னு சொல்லலாம். எப்படி முழு நீள நகைச்சுவைப் படம், குடும்பப் படம், ஹாரர் திரைப்படம் அப்படின்னு சொல்றோமோ அப்படி இந்தப் படம் முழு நீள ஆக்‌ஷன் திரைப்படம். ஆனால், அந்த ஆக்‌ஷன் வன்முறை ஏன் என்பதுதான் படத்தினுடைய கதை.

நாயகன் சந்தீப் கிஷான் கேரக்டர் எப்படி வந்திருக்கு? ரொம்ப டெடிகேஷனான ஒரு பர்சன். கதைப்படி ஹீரோ எப்படி இருக்கணும்ன்னு கேட்டார். ஒருவேளை புரூஸ்லீ உயிரோடு இருந்திருந்தால் என்னால அவரை ஹீரோவா நடிக்க வைக்க முடிஞ்சிருந்தா நிச்சயமா அவர்தான் ஹீரோ... அப்படியான ஒரு ஹீரோதான் இந்தப் படத்துக்கு தேவை அப்படின்னு சொன்னேன்.

எனக்கு ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க அப்படின்னு கேட்டார். நானும் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருந்தேன். நெனச்சுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு
அவ்வளவு டெடிக்கேஷனா பாடி லாங்குவேஜ், ஃபிட்னஸ், டயட் இப்படி எல்லாத்தையும் மாத்தி சாக்லேட் பாய் மாதிரி இருந்தவர் சட்டுனு ரக்கெட் பாய் லுக்குக்கு மாறிட்டார் .
 
நாயகன் வேறொருவர் என்றாலும் விஜய் சேதுபதி படத்தில் இருக்கிறார் என்றால் கடைசியில் அவர் கேரக்டர்தான் பளிச்சுன்னு இருக்கும்... இந்தப் படத்தில் எப்படி?

ஆரம்பத்தில் நட்பின் ரீதியாதான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார். அப்புறம் கதை கேட்ட பிறகு இன்னும் ஆர்வம் அதிகமாகி நிச்சயம் செய்யலாம் அப்படின்னு சொன்னார். அப்படித்தான் மாஸ் சிறப்பு தோற்றமா இருந்த அவருடைய கேரக்டர் இன்னும் கொஞ்சம் நீளமான மாஸ் கெஸ்ட் ரோலா மாறிடுச்சு. நிச்சயம் அவர் வர்ற காட்சிக்கு அரங்கம் அதிரும். நடிச்சா ஹீரோதான்னு அடம்பிடிக்காம கதைக்குத் தேவைன்னா என்ன கேரக்டரா இருந்தாலும் சிறப்பா நடிக்கக் கூடிய கலைஞர் அவர்.

படத்தின் மற்ற கேரக்டர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பத்தி சொல்லுங்க?

கௌதம் மேனன் சார் கிட்ட இயல்பாகவே ஒரு கம்பீரமும் ஸ்டைலும் இருக்கும். அந்த கம்பீரமும் ஸ்டைலும் இந்த கேரக்டருக்கு அதிகம் தேவைப்பட்டுச்சு. ஒரு இயக்குநராக இன்னொரு இயக்குநருடைய தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டதாலோ என்னவோ எங்கேயும் எதிலேயும் ஏன் எதுக்கு அப்படின்னு கேள்வியே கேட்கல. அவர் கேரக்டர் நல்லா வந்திருக்கு.
படத்தின் நாயகியாக திவ்யன்ஷா கௌஷிக். ரொமான்டிக் காட்சிகள், ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்னு போல்டா நடிச்சிருக்காங்க.

பெரும்பாலும் என்னுடைய ஹீரோயின் கேரக்டர் மோனாலிசா ஓவியம் மாதிரி எங்கே இருந்து பார்த்தாலும் தனித்துவமா தெரியும். அப்படி இந்த கேரக்டரும் இருக்கும். தவிர அவங்க கேரக்டர்ல ஒரு சின்ன மர்மம் இருக்கு. இவங்க இல்லாம வரலட்சுமி, ஐயப்பா சர்மா, வருண் சந்தேஷ், அனுசுயா பரத்வாஜ்னு எல்லாருக்கும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். எல்லாருக்குள்ளேயும் ஒரு கிரே ஷேட் பார்க்கலாம்.

சின்ன வயதில் இருந்து இளையராஜா சார், ஏ.ஆர்.ரகுமான் சார் இவர்களுடைய இசையையும் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவன். அதனாலேயே என்னுடைய படங்களில் பாடல்கள் காலம் தாண்டி நிக்கணும்னு ஆசைப்படுவேன். அதுக்கு ஏத்த மாதிரியே எனக்கு அமைந்தவர்தான் சாம் சி.எஸ். அதிலும் ஆக்‌ஷன் கதைனு சொல்லிட்டா அவருடைய பின்னணி இன்னொரு கேரக்டராகவே மாறிடும்.

வழக்கம்போல எல்லா படங்களிலும் அறிமுகப்படுத்துற மாதிரி இந்தப் படத்திலும் ஒருத்தரை அறிமுகப்படுத்தறேன். அவர், சினிமாட்டோகிராபர் கிரண் கவுசிக். ரொம்ப சின்ன பையன்தான். அவருடைய வேலை படத்துல பளிச்சுன்னு தெரியும். டீசர், டிரெய்லரிலேயே அவருடைய லைட்டிங், கலரிங் இதெல்லாம் அதிகளவில் பேசப்பட்டிருக்கு. ரவிவர்மன் சாருடைய அசிஸ்டெண்ட். எடிட்டரும் அறிமுகம்தான். ஆண்டனி சார் கூட வேலை செய்திருக்கிறார். சதீஷ் ராதாகிருஷ்ணன், திறமையானவர்.

படத்துக்கு பிளஸ் ஆக்‌ஷன் காட்சிகள்தான். எனக்கு அடிச்சா பத்து பேர் பறக்கற ஸ்டன்ட் எல்லாம் வேண்டாம். ரியலிஸ்டிக்கா வேணும்னு நினைச்சேன். அதுக்கேற்ப சிறப்பா ஸ்டன்ட் அமைச்சிருக்கார் தினேஷ் கார்த்திக் மாஸ்டர். ‘மைக்கேல்’ ஆடியன்ஸ்க்கு என்ன கொடுக்கும்?

இது ரொம்ப புதுவிதமான கதை... யாருமே சொல்லாத திரைக்கதை... இப்படி எல்லாம் நான் சொல்லமாட்டேன். எல்லாமே போலச் செய்தல்தான். ஆனா, நிச்சயமா ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நேரடி திரைப்படமாகவும்; இந்தி, மலையாளம், கன்னட மொழிகள்ல டப்பிங் திரைப்படமாகவும் அஞ்சு மொழிகளில் பான் இந்தியா படமாகவும்  வெளியாகுது.

இந்த கடைசி நாலஞ்சு வருஷங்கள்ல உருவான டாக் லைன்தான் இந்த பான் இந்தியா. ஆனா, என்னைக்கோ மணி சார்,  கமல் சார் உட்பட ‘இதுதாண்டா போலீஸ்’ ராஜசேகர் சார் வரைக்கும் டப்பிங் படங்களும் பிறமொழி படங்களும் மத்த மொழிகளுக்கு வர்றது புதுசு இல்ல.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

அடுத்த படம் பெரிய ஹீரோ... பெரிய ப்ராஜெக்ட். ஆனா, அதற்குனு முறையா அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரவரைக்கும் நாம வாயைத் திறக்க முடியாது. அதற்கு முன்பு  ‘மைக்கேல்’ வெளியீட்டுக்காக நானும் காத்திருக்கேன்.

ஷாலினி நியூட்டன்