தமிழுக்கு வரும் உலக மொழி களும்... உலகுக்கு செல்லும் தமிழ் மொழியும்!46வது சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் கூடுதல் சிறப்பு இந்த ஆண்டு சென்னையின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் இடையில் மூன்று நாட்கள் நடந்திருப்பதுதான். இதை பள்ளிக்கல்வித் துறை மூலம் தமிழ்நாடு அரசே நேரடியாக நடத்தியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  சர்வதேச புத்தகக் கண்காட்சி என்றதும் வெளிநாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்த கடைவிரிப்பார்கள் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், பதிப்புரிமையை விற்பதும், வாங்குவதுமான ஒரு செயல்பாடு என்பது கண்காட்சி தொடங்கிய அன்றே அனைவருக்கும் தெரிய வந்தது.

இப்போது 365 நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் தமிழிலிருந்து 90 நூல்கள் உலக மொழிகளுக்கும், 60 நூல்கள் பிற இந்திய மொழிகளுக்கும், உலக மொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து 170 நூல்கள் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இது அருமையான தொடக்கம் என மெச்சுகின்றனர் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும். இந்நிலையில், சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. குறுகிய காலத்துல இந்தப் பணியை அரசுடன் இணைந்து செய்து முடித்தோம். சென்னையின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி சிறப்பாக முடிஞ்சிருக்கு. இது தற்புகழ்ச்சியானதல்ல. இங்கே வந்திருந்த வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டுட்டு வர்றாங்க. தமிழ்நாடு அரசின் முதல் முயற்சியே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு’’ என்கிறவரிடம் எப்படி தொடங்கியது இந்தப் பணி என்றோம்.  

‘‘மூன்றாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள தமிழ் மொழியினுடைய இலக்கியங்கள் உலக மொழிகளில் பெருவாரியாகப் போகல என்கிற வருத்தம் இங்க ரொம்ப நாட்களாக இருந்திட்டு வருது. இந்தக் குறையை முதல்ல தீர்க்கணும்னு தமிழ்நாடு அரசு நினைச்சாங்க. அதனால, தமிழ்நாடு அரசும் அதன் மூத்த அதிகாரிகளும் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்தணும்னு முயற்சி எடுத்தாங்க.

நான் பல சர்வதேச புத்தகக் கண்காட்சிகளை நேரில் சென்று பார்த்தவன். அந்த அனுபவத்திலும், இதை சென்னையில் நடத்தணும்னு கோரிக்கை வைத்ததில் ஒருவன் என்கிற அடிப்படையிலும் என்னை இதில் பங்களிக்க முடியுமானு கேட்டாங்க. நான் சர்வதேச பதிப்பகத் தொடர்புகள் பற்றின விஷயங்களில் பங்களிக்க முடியும்னு சொன்னேன். அதன்பிறகு தமிழ்நாடு அரசு உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு இங்கிருந்து ஒரு குழுவை அனுப்பினாங்க. அதனுடைய தலைவராக நூலகத் துறை இயக்குநர் இளம் பகவத் ஐஏஎஸ் இருந்தார். அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.

அங்க போய் அனைத்தையும் பார்த்தோம். பிறகு, இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கண்காட்சியை நம்மால் சென்னையில் நடத்தமுடியுமா, எவ்வளவு நாட்கள் நடத்த முடியும் உள்ளிட்ட விஷயங்களை ஆலோசித்தோம். கடைசியில் சின்ன அளவிலாவது தொடங்கிடணும்னு முடிவெடுத்தோம்.அப்போதிலிருந்து நான் உள்பட பலரும் ஒரு குழுவாக உருவானோம். இளம் பதிப்பாளர்கள், பதிப்புத்துறையில் புதிதாக வந்தவர்கள்னு எல்லோரையும் அழைத்து ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியாக அணிகளை அமைத்து கடந்த ரெண்டு மாதங்களாக உறக்கமில்லாமல் பணியாற்றினோம்.

எல்லோரையும் சென்னைக்கு வரவழைத்து வேலைகளை முடித்து அனுப்பி வைக்கணும்னு திட்டம் வகுத்து செயல்பட்டோம். குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் முழுமையான ஆதரவுடன் இந்தக் குறுகிய காலத்தில் இதை நம்மால் செய்ய முடிந்தது.இதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அடுத்த ஆண்டு நிச்சயமாக இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதலாக பதிப்பாளர்கள் வருவார்கள்னு எதிர்பார்க்கலாம்...’’ என உற்சாகமாகச் சொல்லும் ஆழிசெந்தில்நாதன், சில விஷயங்களைப் பகிர்ந்தார்.  

‘‘பொதுவா, சர்வதேச புத்தகக் கண்காட்சி என்பது ஒரு வழக்கமான கண்காட்சி கிடையாது. புத்தகக் கண்காட்சினா நாம் பெரும்பாலும் புத்தகம் வாங்குறதுனு நினைச்சிட்டு இருப்போம். இது புத்தகங்களை வாங்கும் கண்காட்சி கிடையாது. அதேமாதிரி ஃபர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சிகள் போல வெறும் பிசினஸ் நடக்கிற இடமும் கிடையாது. இது ஒரு பண்பாட்டு கண்காட்சி. தமிழ்நாட்டின் இலக்கியங்களை உலகம் முழுவதும் சென்று சேர்ப்பதற்கும், உலகம் முழுவதும் உள்ள புத்தகங்கள் தமிழில் வருவதற்கும் ஒரு பாலத்தை அமைக்கிற முயற்சிதான் இந்தக் கண்காட்சி.

தமிழ்ல நிறைய இலக்கியங்கள் அது நாவலாகவோ, கவிதையாகவோ, அல்லது மற்ற புத்தகங்களாகவோ இருக்கலாம். அது ஆங்கிலத்திற்கு போனது மிகக்குறைவு. மற்ற மொழிகளில் போனதை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அந்தக் குறையைத் தீர்க்கவே உலகம் முழுவதுமுள்ள பதிப்பாளர்களை இங்கே அழைத்து, அவர்களுக்கு நம் மொழியின் இலக்கியங்களை அறிமுகம் செய்து, உங்க மொழியில் இதனைக் கொண்டு போங்கனு சொல்ல வேண்டியிருக்கு. அதற்கு மொழிபெயர்ப்புக்கான உதவிகளும் நாங்கள் செய்கிறோம்னு சொல்லும்போது அவங்க உற்சாகமாக உள்ள வர்றாங்க. இதை மொழிபெயர்ப்பு நல்கை (Translation grants) திட்டம்னு சொல்றோம்.

இதேபோலவே இன்றைக்கு உலகில் உள்ள முக்கியமான நூல்களை சுடச்சுட தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கணும்னா தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் உலகப் பதிப்பாளர்களுடன் இணைந்து நிற்கணும். அப்பதான் என்னென்ன புத்தகங்கள் வருகின்றன... எதையெல்லாம் மொழிபெயர்க்கலாம்னு தெரியவரும்.

இந்த இரண்டையும் செய்வதற்கு, முன்னர் இங்கே வாய்ப்பு இல்லை. ஒரு சில பதிப்பகங்கள் வெளிநாடுகளில் நடக்கின்ற பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குப் போயிட்டு வருவாங்க. அது ஒரு சிலராலேயே முடியும். காரணம், ரொம்ப செலவு பிடிக்கும் வேலை அது.
அதனால, இங்கேயே ஒரு சர்வதேச கண்காட்சியை நடத்தினால் அனைத்து பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் பயன்பெறுவார்கள் இல்லையா? அதற்குதான் இந்தக் கண்காட்சி.

இந்தக் கண்காட்சி மூலம் இரண்டு பதிப்பாளர்களுக்கும் ஒரு மேடையை உருவாக்கித் தர்றோம். இது எதிர்காலத்துல பல புதிய நூல்கள் தமிழுக்கு வருவதற்கும் மற்ற மொழிகளுக்கு போவதற்குமான வழியை உருவாக்கும். தவிர தமிழ்நாட்டின் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்களின் தன்மையும் மாறும். இப்போது குடிசைத் தொழிலாக இருக்கக்கூடிய நம்முடைய பதிப்புத் துறையை ஒரு தொழில்துறை போல் மாற்றுவதற்கு இந்தக் கண்காட்சி மிக முக்கியமானது...’’ என்கிறவர் ஒப்பந்தங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

‘‘இந்தக் கண்காட்சிக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, இத்தாலி, ஃபிரான்ஸ், ஜார்ஜியா, அஜர்பைஜான், ஆர்மேனியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், தான்சானியா, உகாண்டா உள்ளிட்ட சுமார் 30 நாடுகள்ல இருந்து பதிப்பாளர்கள் வந்திருந்தாங்க. இவர்களுடன் சென்னையில் இருக்கக்கூடிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஃபிரான்ஸ், தாய்லாந்து துணைத் தூதரகங்களும் அரங்குகளை அமைச்சாங்க. தவிர, இந்தியாவின் முக்கியமான இந்திய பதிப்புத்துறை கூட்டமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், செயலாளர்களும் வந்திருந்தாங்க.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நூறு பதிப்பாளர்கள் இவர்களுடன் பேசி, 365 நூல்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இதுல சரி பாதி தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், இன்னொரு பாதி பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் கையெழுத்தாகி உள்ளன. இதில் கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதுக்கு முன்னாடி எல்லாமே தனித்தனியாக நடந்தன. இப்போது ஒரு சந்தையாகவே மாற்றி ஒரே இடத்தில் அனைத்தையும் நடத்தியிருக்கோம். அதுதான் முக்கியம்.

அப்புறம், எல்லா நாட்டு பதிப்பாளர்களும் இங்கு வரும்போது அவங்க நம்ம தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் அவங்க மீடியாவில் எழுதுவாங்க. இதனால், தமிழ்நாட்டு இலக்கியத்தின் மீதும், நூலாசிரியர்கள் மீதும் வெளிச்சம் பாயும்...’’ என மகிழ்ச்சியுடன் சொல்லும் ஆழி செந்தில்நாதன், ‘‘இந்த ஆண்டு சர்வதேச கண்காட்சியை வெற்றிகரமாக முடிச்சிருக்கோம். இனி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தகக் கண்காட்சி சிறப்புடன் சென்னையில் நடக்கும்.

உலக அளவில ஃப்ராங்க் ஃப்ர்ட், லண்டன், பாரிஸ், பெய்ஜிங், ஷார்ஜா, இஸ்தான்புல், ஜகார்த்தா, தில்லி உள்ளிட்ட இருபது இடங்களில்தான் சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடந்திட்டு வந்தது. இப்போது இதனுடன் சென்னையும் இணைஞ்சிருக்கு...’’ அத்தனை மனநிறைவுடன் சொல்கிறார் ஆழி செந்தில்நாதன்.

பேராச்சி கண்ணன்