அஜித்திடம் அடி வாங்கிய கின்னஸ் மாடல்!



‘‘இது தமிழ்நாடு... உங்க அதிகாரத்தை இங்கே காட்டாதீங்க...’’ ‘துணிவு’ படத்தில் சமுத்திரக்கனி பேசும் இந்த ஒற்றை வசனத்திற்கு திரையரங்கே அதிரும் அளவுக்கு அப்ளாஸ்.
இந்தக் காட்சியில் சமுத்திரக்கனியின் முன்னால் நிற்பாரே கமாண்டோ ரவீந்தர்... அவர்தான் இன்று டிரெண்டில் இருக்கிறார்.ஒரிஜினல் பெயர், விஷ்வநாத். கின்னஸ் சாதனை படைத்த ரேம்ப் வாக் மாடல், ‘அச்சம் என்பது மடமையடா’, ‘முகமூடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்... என பலமுகங்கள் இவருக்கு உண்டு.

‘‘எனக்கு சொந்த ஊர் கர்நாடகா. பெங்களூர்வாசி. ‘காந்தாரா’ படத்திலே வருகிற தெய்வ வழிபாடுகள், குலதெய்வத் திருவிழா எல்லாமே எங்க குடும்பத்தில் உண்டு. சின்ன வயசிலே அதெல்லாம் பார்த்து வளர்ந்தவன்தான் நான்...’’ உற்சாகமும், சந்தோஷமும் கண்களில் மின்ன பேசத் தொடங்கினார். ‘‘அடிப்படையிலே நான் ஒரு மாடல். கடந்த 20 வருஷங்களா மாடலிங்கில் இருக்கேன். இப்ப சென்னையிலே செட்டில் ஆகிட்டேன். நிறைய விளம்பரங்கள், நிறைய ஃபேஷன் ஷோ... இடையிலே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிப்பும் கத்துக்க ஆரம்பிச்சேன், சில மேடை நாடகங்கள்ல கூட நடிச்சேன்.

அப்பா ஆர்மி மேன். அதனாலேயே சின்ன வயதில் எல்லாம் ஆர்மி ஸ்கூலில்தான் படிப்பு. அப்போதே என்.சி.சி, துப்பாக்கி சுடுதல் எல்லாமே பரிச்சயம் ஆகிடுச்சு. தொடர்ந்து விமான கேபின் க்ரூவாக 14 வருடங்களுக்கு மேலே வேலை செய்தேன். பிரிட்டிஷ், மலேசியா, துபாய் ஏர்லைன்ஸ்ல எல்லாம் வேலை செய்திருக்கேன்.   

அஜித் சாருடைய ‘மங்காத்தா’ படத்துல ஒரு பெட்டிங் சீன் வரும். அதிலே தலை காண்பிச்சிருப்பேன். அங்கே ஆரம்பிச்ச பயணம்... ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் அமலாபாலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பையனா, வில்லனா நடிச்சிருப்பேன். மிஷ்கின் சார் இயக்கத்தில் ‘முகமூடி’ படத்திலே 2வது வில்லனா கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலே குங்ஃபூ சண்டை எல்லாம் டிரெயினிங் எடுத்துக்கிட்டு நடிச்சேன்.

‘நான் சிவனாகிறேன்’ படத்திலே பிளே பாய், அடுத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலே மஞ்சிமா மோகனுக்கு அப்பா, தெலுங்கிலும் அந்த கேரக்டர்ல நான்தான் நடிச்சேன். அதோடு சிம்புவுக்கும், நாக சைதன்யாவுக்கும் குடைச்சல் கொடுக்கற வட இந்திய அரசியல்வாதி... இப்ப அஜித் சாருடன் ஹெச்.வினோத் சார் இயக்கத்திலே ‘துணிவு’ படம் மூலம் பிரேக் கிடைச்சிருக்கு...’’ என்னும் விஷ்வநாத், சினிமா நடிப்பு ஆர்வம் காரணமாகவே தனது வேலையை விட்டுவிட்டாராம்.

‘‘எனக்கு விமானத்திலே வேலை. பெரும்பாலும் டிராவல்லயே இருப்பேன். ஆடிஷன்னு கூப்பிட்டா கூட என்னால் அதிலே கவனம் செலுத்த முடியலை. அதனாலேயே 2018ல் என்னுடைய ஏர்லைன் வேலையை விட்டுட்டேன். தொடர்ந்து மாடலிங்கிலேயே நிறைய வாய்ப்புகள். உலகிலேயே நீண்ட நாட்கள் நடந்த ஃபேஷன் ஷோவிலே நடந்த மாடல் என்கிறதுக்காக கின்னஸ் புத்தகத்திலேயும் இடம் கிடைச்சது. 7 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் தொடர்ந்து 7 நாட்கள் நான் ரேம்ப் வாக் செய்தேன். அதிலே 362 டிசைனர்கள் கலந்துக்கிட்டாங்க...’’ புன்னகைக்கும் விஷ்வநாத், ‘துணிவு’ பட வாய்ப்பு கிடைத்தது குறித்து பகிர்ந்தார்.

‘‘நடிகை பூஜா மூலமா ‘துணிவு’ படத்திலே ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு ஹெச்.வினோத் சார் அஸிஸ்டென்ட் ராம்குமார் மூலமா ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன்.

லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. 22 நாட்கள் ஷூட். தொடர்ந்து ஃபாரின் ஷூட். இதெல்லாம் கைகூடும்போதே எனக்கு ஹர்ஷத் மேத்தாவின் பயோபிக்
வெப் சீரிஸான ‘ஸ்கேம் 1992’ல வாய்ப்பு கிடைச்சது.

ஆனா, அதை மறுத்துட்டு ‘துணிவு’ல நடிச்சேன். அஜித் சார், ஹெச்.வினோத் சார் மேல வைச்ச நம்பிக்கை வீண் போகலை. ‘துணிவு’ எனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்திருக்கு.
நான்தான் கடைசி சீன்ல அஜித் சாரை சுடப் போறேன்... எனக்கும் அஜித் சாருக்கும் இடையிலே அவ்ளோ பெரிய கிளைமாக்ஸ் இருக்கு... இதெல்லாம் இருந்தும் ‘யாரு இவரு? ஏன் இவருக்கு இவ்வளவு பெரிய ரோல்...’னு எல்லாம் அஜித் சார் கேட்கவேயில்ல. நல்லா நடிக்கறீங்கனு உற்சாகப்படுத்தினார்...’’ பூரிப்புடன் சொல்லும் விஷ்வநாத், தொடர்ந்து அஜித்துடன் தனது பயணம் குறித்து விவரித்தார்.

‘‘அவ்ளோ பெரிய ஸ்டார்... ஒரு தெரியாத ஊர்ல இறங்கின அடுத்த நிமிஷம் தன் நம்பரைக் கொடுத்து ‘எதாவது பிரச்னை, தேவைன்னா என்னைக் கூப்பிடுங்க’ன்னு சொன்னார். வாட் ஏ மேன்! ஒரு சின்ன பேப்பர் குப்பையக் கூட கீழே போடாம குப்பைத் தொட்டிய தேடுறாரு. அவர் வேலையை அவர்தான் செய்வார். நோ அஸிஸ்டென்ட். இதெல்லாம் பார்த்தா நிச்சயம் செட்டில் இருக்கும் மத்த ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்கள் இன்னொருத்தர் உதவியைத் தேடமாட்டாங்க. ஒரு மனுஷனாவும் அஜித் சார் உயர்ந்திட்டார். தானா வந்து ‘ஹலோ... நான் அஜித் குமார்...’னு எல்லார் கிட்டேயும் அறிமுகப்படுத்திக்கிட்டார்.

இவர் இப்படின்னா வினோத் சார்... ஓ மை காட்! என்ன ஒரு டெடிகேஷன்... மானிட்டர் விட்டு அவர் கண்ணு அசையவே அசையாது. அவ்ளோ டீடெய்லிங், அவ்ளோ மெனக்கெடல். அதே சமயம் ‘தொடர்ந்து நீங்க பல மணி நேரம் ஹெலிகாப்டரில் ரிஸ்க் எடுத்தாலும் படத்திலே இந்த சீன் வெறும் அஞ்சு நிமிஷம்தான் விஷ்வா’னு அதையும் சொல்லிட்டார்.
கிட்டத்தட்ட சம்பளம் வாங்கிட்டு ஒரு துணிச்சலான டிரிப் போன ஃபீல். ஹெலிகாப்டர்ல தொங்கிக்கிட்டே பலமணிநேரம் ரிஸ்க் எடுத்து அந்த சீன்ல நடிச்சேன்.

இப்ப நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். அஜித் சார், சமுத்திரக்கனி சார், வினோத் சார்னு மொத்த ‘துணிவு’ டீமுக்கும் என்னுடைய நன்றி.அடுத்து ‘டக்கர்’ படத்திலே ஒரு கேரக்டர், ‘அகிலன்’ படத்திலே மைம் கோபியுடன் ஒரு முக்கியமான ரோல்னு நடிச்சுட்டு இருக்கேன்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் விஷ்வநாத்.

ஷாலினி நியூட்டன்