எனக்கு 53... உனக்கு 3...ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) சமீபத்திய அறிக்கை ஒன்று ‘சிறார் பாலியல் குற்றங்களில் தமிழ்நாடு இந்தியாவில் 4 வது இடத்தில்’ இருப்பதாக ஒரு பீதியைக் கிளப்பியிருக்கிறது.
அதில் 2021ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 6064 குற்றங்கள் சிறாருக்கு எதிராக நடந்திருப்பதாகவும், அதில் 4338 வழக்குகள் போக்சோ (Pocso) எனும் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டப் பிரிவில்  பதியப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இது 2020ல் பதிந்த வழக்குகளைவிட சுமார் 40 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் ஒப்பிட்டிருக்கிறது.

சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, கல்வி என பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே ஒரு மாடல் மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் ஏன் இந்த இழிவு நிலை எனும் கவலையில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான தன்னார்வ அமைப்பான தோழமையின் இயக்குநர் தேவநேயனிடம் பேசினோம்.‘‘இந்த புள்ளிவிபரத்தைக் கொண்டு தமிழ்நாட்டை வெறும் நெகட்டிவாக மட்டும் பார்ப்பது தவறானது; அக்கறைப்பட நிறைய உள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் இது தொடர்பான குற்றங்களை மறைக்காமல், ஒளிக்காமல் சொல்ல வருகிறார்களே என்பது  ஒருவகையில் மகிழ்ச்சியான செய்திதான். ஏனென்றால் ஒருகாலத்தில் இதுபோன்ற குற்றங்களை பெற்றோர்களும் உற்றார் உறவினரும் எப்படியெல்லாம் மறைக்க முடியுமோ அப்படியெல்லாம் மறைத்த சம்பவங்கள்தான் நடந்தன.
காரணம், இதுமாதிரியான குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்தால் அது அந்தக் குழந்தையை மட்டுமல்லாமல் அந்த மொத்த குடும்பத்தினரையுமே வாழ்நாள் முழுக்க பாதிக்கக்கூடியதாக ஒருகாலத்தில் இருந்தது.

இந்த உண்மையின் அடிப்படையில் மற்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டை விட அதிகளவில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களாக இருக்கலாம்; வழக்கு பதியப்படாமல் இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்...’’ என்று சொல்லும் தேவநேயன், போக்சோ சட்டம் இந்தியாவில் அறிமுகமாகிய ஆரம்பக் காலத்தையும் விளக்கினார்.

‘‘2007ம் ஆண்டு ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சகங்களில் ஒன்றான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஒரு ஆய்வை இந்தியா முழுவதும் செய்தது. அந்த ஆய்வில், குழந்தைகளில் சுமார் 53 விழுக்காடு - அதாவது பாதி குழந்தைகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற பீதியூட்டும் நிஜத்தை கண்டுபிடித்தது.

இந்த ஆய்வை அடிப்படையாகக்கொண்டுதான், அந்த குற்றங்களைக் களையவேண்டும் என்ற ஒரு முடிவில்தான், போக்சோ எனும் சிறந்ததொரு சட்டம் 2012ல் இந்தியாவில் அமலுக்கு வந்தது.

அடிப்படையில் இது சிறப்பான ஒரு சட்டம்தான். ஆனால், சட்டத்தால் மட்டுமே ஒரு குற்றத்தை ஒரு சமூகம் முழுவதுமாக தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி. உதாரணமாக, 18 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து இந்த சட்டம் அந்த சிறார்களைப் பாதுகாக்கிறது.

அதிலும் 12 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கையில் அந்த சிறுமி இறக்க நேரிட்டால் அந்தக் குற்றவாளியைத் தூக்கிடலாம். அந்தளவுக்கு கடுமையான சட்டப் பிரிவு உண்டு. ஆனாலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. 2007ல் மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் செய்த அதே ஆய்வில், இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் அறிமுகமானவர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரு குண்டைப் போட்டது.

அதாவது இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் பொதுவாக அந்தக் குழந்தைகளிடம் சில பல வருடங்களாக நன்றாகப் பழகி வருபவர்கள்; அந்தக் குழந்தைகளின் பின்புலம், சில குறைபாடுகள், வசதி வாய்புகளை அறிந்தவர்கள்; அவற்றைப் பயன்படுத்திக்கொண்டுதான் இதுமாதிரியான செய்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று கண்டுபிடித்தது.

பொதுவாக இதுபோன்ற பாலியல் குற்றங்களை வன்புணர்வு என்று மட்டுமே பொதுச் சமூகம் பார்க்கிறது. வன்புணர்வு என்பது இந்த குற்றங்களில் உச்சம் என்றால் தொடுதல், பேச்சு, சில செய்கைகளும் பாலியல் வன்முறைக்குள் அடக்கம் என்பதை இந்த சட்டம் வரையறுக்கிறது.

 எனவே, இதுபோன்ற சூட்சுமமான ஆரம்ப பாலியல் வன்முறைகளைப் பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால்தான் பாலியல் குற்றங்களின் பல தன்மைகளை நாம் தடுக்கமுடியும்...’’ என்று சொல்லும் தேவநேயன் அண்மைக் காலமாக போக்சோ சட்டத்தைப் பற்றி அரசும் பொதுச் சமூகமும் கவலைப்படவேண்டிய இன்னொரு பரிமாணத்தைப் பற்றியும் விவரித்தார்.

‘‘சிறார் திருமணங்கள் பற்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்திகள் வந்தாலும் 18 வயதுக்குக் குறைந்த பெண் குழந்தைகளும், 21 வயதுக்குக் குறைந்த ஆண் குழந்தைகளும் வீட்டை விட்டு ஓடும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. இது எல்லாமே காதல் வயப்பட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இதுமாதிரியான சம்பவங்களில் அந்த சிறார் ஆண்களை குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் மட்டுமல்லாமல் போக்சோ சட்டத்தையும் சேர்த்து வழக்காக மாற்றிவிடுகின்றனர். இதனால் பல ஆண் சிறார்கள் எதிர்காலத்தை தொலைத்து அல்லாடுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் இதுபோன்ற காதல் வயப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் ஆண் சிறார்களை கரிசனத்துடன் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளது...’’ என்று சொல்லும் தேவநேயன் சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த குற்றங்களை எப்படி அணுகலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

‘‘அண்மையில் ஒரு 53 வயது பெரியவர் 3 வயது பெண் குழந்தையை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்ற செய்தியை பலரும் அறிந்திருக்கக்கூடும். சிறாருக்கு எதிரான பாலியல் குற்றம் என்பது உடல் மட்டுமல்லாமல் மன ரீதியில் பல பிரச்னைகளை ஏற்படுத்துவது. அது காலத்துக்கும் அந்த குழந்தைகளிடம் ஒரு வடுவாக மிஞ்சக்கூடியது.

பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே பாலியல் கல்வி என்பதற்கு மாறாக எல்லோருக்குமான பாலியல் கல்வி என்பதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதாவது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்யும் ஆண்களுக்கும் பாலியல் தொடர்பான கல்வி அவசியமானது. பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் இந்த விஷயத்தில் முன்னெடுப்பு செய்யும்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் தேவநேயன்.

டி.ரஞ்சித்