கருவேல மரங்களை வைத்து நடக்கும் சாதிப் பிரச்னையை இந்தப் படம் பேசுது...



தமிழகத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய மிகச் சில படங்களின் வரிசையில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது. அப்படியான அதிர்வலைகள் கொடுத்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். இதோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியான இவரின் அடுத்த பட போஸ்டரே மீண்டும் ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘இராவணக் கோட்டம்’... கருவேலக் காட்டுக்குள் காளையுடன் தலைதெறிக்க ஓடி வரும் சாந்தனு. ஆர்வமும், கேள்விகளுமாக சந்தித்தபோது மனம் விட்டு பேசத் தொடங்கினார்.

‘இராவணக் கோட்டம்’... எதற்கு இந்தத் தலைப்பு..?

‘தமிழகம்’னுதான் தலைப்பு வெச்சிருக்கணும். ஒரு தமிழ் அரசனுடைய ஊரைப் பத்தி பேசக் கூடிய படம். இராவணன் ஒரு தமிழ் அரசன்தானே. சோழர், பாண்டியர்ன்னு வெச்சிருந்தா அந்த ஏரியா செழிப்பானதா இருக்கும். அதே பட்டியல்ல இராவணன் என்னும் தமிழ் அரசன்னு நினைச்சா வறண்ட பூமியைக் குறிக்கும். அதனால் ‘இராவணக் கோட்டம்’ தலைப்பா வெச்சாச்சு.

எது சார்ந்து படம் பேசப் போகிறது?

விக்ரம் சுகுமாரன் அப்படின்னாலே கிராமம், கிராமத்து களம் இப்படின்னு இருக்கும் அடையாளத்தை உடைக்கணும்னு நினைச்சுதான் ஐடி துறை, அங்கே நடக்கற கதைன்னு ஒரு படம் திட்டமிட்டிருந்தேன். ஆனா, ‘உன் கடையிலே கசாப்புதான் நல்லா இருக்கும், அதையே கொடு’ன்னு கேட்டாங்க. அதனால் ரெண்டாவது படமும் கிராமத்துக் கதைதான்.
காலம் காலமா இருக்கும் கருவேல மர அரசியல், அதற்குப் பின்னணியில் இருக்கற கார்ப்பரேட் யுகம், அதைச் சார்ந்த சாதிப் பிரச்னைகள்தான் ‘இராவணக் கோட்டம்’ படத்தின் அடிப்படைக் கதை.

கருவேல மரம் நம்ம நாட்டுக்குள் வந்ததற்கு வேணும்னா ஆங்கிலேயர்கள் காரணமா இருக்கலாம். ஆனா, அதை அழிக்க முடியாம இருக்க என்ன காரணம், யார் செய்யும் சதி... நிச்சயம் மேலே இருக்கவங்க நினைச்சா கருவேல மரங்களை அடியோடு அழிக்கலாம். ஆனா, அதைச் செய்யாம அதைக் கொண்டு சாதிப் பிரச்னையும், அரசியலும் நடக்குது. அதைத்தான் பிரதானமா இந்தப் படம் பேசும்.

இந்தக் கருவேல மரங்கள் ஏதோ நிலத்தை சுரண்டுது, நீரை உறிஞ்சிதுன்னு மட்டும் நினைக்கிறோம். ஆனா, எதிர்காலத்திலே ஒரு தட்டு சோறு இல்லாத நிலைக்கு நம்மை எல்லாம் கூட்டிக்கிட்டு போகுதுங்கற ஆபத்தை உணர மாட்டேங்கறாங்க. சொட்டுத் தண்ணீர் இல்லாத பூமியா தமிழகத்தின் ஒருபகுதி ஏற்கனவே மாறிடுச்சு. இதே நிலை நீடிச்சா நிச்சயம் உணவுக்கும், நீருக்கும் கையேந்தி நிற்கக் கூடிய அவல நிலை உண்டாகும்.

ஆனா, அதெல்லாம் எதுவும் தெரியாம சாதிச் சண்டையிலே கட்டுண்டு கிடக்கிறோம். எல்லா விவசாய நிலங்களும் போயி, அங்கே கருவேல மரம் வளர்த்து,  கரி உருவாக்கிக்கிட்டு இருக்காங்க. அந்தக் கரி கார்ப்பரேட் உலகத்திலே மிகப்பெரிய மூலப் பொருள். டெக்ஸ்டைல் பிஸினஸில் இந்தக் கரிக்கு அவ்வளவு தேவை இருக்கு. இதனாலேயே விளைநிலங்கள்ல கருவேல மரம் வளர்த்து கரி செய்கிற அளவுக்கு விவசாயிகள் மாறிட்டு வர்றாங்க.

இப்படியே போனா இப்போதைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலே மட்டுமே இருக்கற தண்ணி வண்டி பயன்பாடு தமிழகம் முழுக்கவே வந்திடும். பொண்ணக் கட்டிக் கொடுத்தா சீரா தண்ணி வண்டி கொடுக்கற அளவுக்கு அங்கே நிலமை மோசமாகிடுச்சு. அதாவது பல மைல்கள் தூரம் போயி தண்ணி கொண்டு வர்றதுக்குன்னே பிரத்யேகமா உருவாக்கப்பட்ட வண்டி அது.  அது மாறணும்ங்கற அரசியல்தான் ‘இராவணக் கோட்டம்’ படம் பேசும்.

சாதிச் சண்டை சார்ந்த படங்கள் எத்தனையோ நாம பார்த்திருக்கோம்... இந்தப் படம் சமகால சாதி அரசியலையும் பேசுமா?

முன்பை விட இன்னைக்கு சாதிப் பிரச்னை நவீனமயமாகியிருக்கு. முன்பெல்லாம் கிராமத்திலே படிக்காத, பாமர மக்கள் கிட்டே இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு கையில் இருக்கும் மொபைலில் சமூக வலைத்தளங்கள்ல சர்வ சாதாரணமா படித்த, நவீன யுக மக்கள் கிட்ட, கார்ப்பரேட் அலுவலகங்கள் தொடங்கி, பள்ளி, கல்லூரியிலே சாதிப் பிரச்னை நடக்குது.

எப்படி மண்ணுக்கு கருவேல மரம் விஷமோ, அப்படி மனுஷனுக்கு இந்த சாதி விஷம். குறிப்பா இளைஞர்கள் தங்களுக்குப் பின்னாடி சாதிப் பெயர்களை வெச்சிக்கிட்டுதான் சமூக வலைத்தள அக்கவுண்ட் பெயரையே பயன்படுத்துறாங்க. அந்த அளவுக்கு இன்னைக்கு சாதி அரசியல்ல நாம அடைஞ்சுகிடக்கிறோம்.

இதை எப்படி களையெடுக்கப் போகிறோம்னு தெரியலை. அப்படியான சமகால சாதிப் பிரச்னையும் இந்தப் படத்திலே இருக்கும்.

பெரும்பாலும் சாதியே வேண்டாம்னு சினிமாவிலே பேசினால் கூட அதுவும் இன்னொரு விதமான சாதிப் பிரச்னையை உருவாக்கிடுதே?

என்னுடைய அடுத்த படம் இவ்வளவு தாமதமானதுக்கு காரணம் கூட அதுதான் அடிப்படை பிரச்னை. ‘மதயானைக் கூட்டம்’ படத்திலே நான் சொன்ன கருத்து வேறு; ஆனா, இங்கே புரிதலானது வேறு. கடைசியிலே என்னை சாதி சார்பு இயக்குநரா குறியீடு போட்டு ஓரம் கட்டிட்டாங்க.

எப்படி ‘தேவர் மகன்’ படம் ஒரு சாதிப் பிரச்னைக்குள்ள இருக்கற அரசியலைப் பேசிச்சோ, அப்படியான படமாதான் நான் ‘மதயானைக் கூட்டம்’ படத்தை உருவாக்கினேன். ஆனா, நடந்தது வேறு.

சினிமாவிலே சாதியும் ஒரு பிஸினஸா மாறிடுச்சு. அதுதான் இதற்குக் காரணம். சினிமாவை சினிமாவா பாருங்கன்னு நான் சொல்லவே மாட்டேன்... எந்தப் படைப்பாளனும் ஏதோ சண்டை மூட்டிவிடவோ, அல்லது சாதியைத் தூக்கிப் பிடிக்கவோ படமெடுக்கறதில்லை. அவன் வாழ்ந்த சூழல்ல அவன் பட்ட கஷ்டத்தைத்தான் படமா எடுப்பான். அதைப் புரிஞ்சிக்கிட்டாலே, சினிமா சினிமாவாகவே இருந்து சமூகத்துக்கும் நல்லது செய்யும்.

இந்தக் கதைக்கான அடிப்படையை எங்கே இருந்து எடுத்தீர்கள்?

எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். அந்தக் களத்தில்தான் இந்த கருவேல மர விதை தூவப்பட்டுச்சு. அங்கே என்னைச் சுற்றி, என் வாழ்வியலில் என்ன நடந்துச்சோ அதைப் பார்த்து உருவாக்கின கதைதான் ‘இராவணக் கோட்டம்’.சாந்தனு மற்றும் மற்ற நடிகர்கள், நடிகைகள் எல்லாம் எப்படி நடிச்சிருக்காங்க..? டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க...

‘மதயானைக் கூட்டம்’ படம் பார்த்திட்டு நாம ஒரு படம் பண்ணலாம்ன்னு அப்போதே சாந்தனு கேட்டிருந்தார். நண்பர் ஆதவ் கண்ணதாசன் மூலமாதான் சாந்தனு எனக்கு பழக்கமானார். சாந்தனு மட்டுமில்ல, இந்தப் படத்திலே நடிச்ச அத்தனை பேரும் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க.

வறண்ட பூமி, சுற்றி கருவேல மரங்கள் காரணமா அங்கே இருக்கற மணலே காய்ஞ்சு கருப்பு நிறத்திலே இருக்கும். வெப்பம், புழுதி, அதிலே செருப்பில்லாம காட்சிகள்ன்னு நிறைய மெனக்கெட்டிருக்காங்க. பிரபு சார்லாம் ‘விக்ரம் தம்பி... என்னப்பா இப்படி இருக்கும்னு சொல்லாமலே கூட்டிட்டு வந்திட்டீங்க’ன்னு கேட்டார். அந்த அளவுக்கு தரிசு நிலம்.
சாந்தனுவுக்கு இந்தப் படம் அவர் கரியர்ல ரொம்ப முக்கியமான படமா இருக்கும். பிரபு சார், இளவரசன் அண்ணன், தீபா சங்கர், மலையாளத்திலிருந்து முருகன் என்கிற நடிகரை தமிழில் அறிமுகம் செய்திருக்கோம். சஞ்சய் ஷங்கருக்கு இந்தப் படத்திலே 2ம் நாயகர் போலவே கேரக்டர்.

ஹீரோயின் ஆனந்தி. ஸ்கிரீனில் எந்த மெனக்கெடலும் செய்யாம எதார்த்தமா, இயற்கையா அழகா தெரியக்கூடிய நாயகி அவங்க. மேலும் நல்ல நடிகை. இந்தப் படத்திலேயும் அவங்க கேரக்டர் பேசப்படும். ‘கயல்’ படம் செய்த வெற்றிவேல் மகேந்திரன் நீண்ட நாட்களாகவே சேர்ந்து வேலை செய்யணும்னு கேட்டுட்டிருந்தார். இந்தப் படத்துக்கு சினிமாட்டோகிராபி அவர்தான். ரொம்ப வேகமா ஷூட் முடிச்சுக் கொடுத்தார்.

ஊரடங்கு, கொரோனான்னு படம் நிறைய தடைகளை சந்திச்சது. அதற்கெல்லாம் வெற்றிவேல்தான் தாக்குப்பிடிச்சார். எடிட்டர் கிஷோர் இல்லன்னா ‘மதயானைக் கூட்டம்’ படமே கிடையாது. அவர் டேபிளில் உருவான படம் ‘மதயானைக் கூட்டம்’. அவர் இல்லாத வெற்றிடம் கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. அந்த சென்டிமென்டோ என்னவோ இந்தப் படத்தின் எடிட்டர் பெயர் லாரன்ஸ் கிஷோர். அதிலேயே அவரே கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு. என்னுடைய டார்ச்சர் எல்லாம் பொறுத்துக்கிட்டு ஹார்ட் ஒர்க் செய்துகொடுத்தார்.

‘இராவணக் கோட்டம்’ ஆடியன்ஸ்க்கு என்ன கொடுக்கும்?  

இராமநாதபுரம் மாவட்டம் பற்றி தெரிஞ்சுக்கலாம். உங்களுக்கு மத்தியிலே ஒரு மாவட்டம் எந்த அளவுக்கு பாதிப்பிலே இருக்கு, இப்படியே விட்டால் நாளைய தமிழகம் என்னவா ஆகும்னு ஒரு உண்மையான எதார்த்தத்தோடு எடுத்துக் காட்டக் கூடிய படமா இருக்கும். கார்ப்பரேட் அரசியல், அதன் காரணமாக தூண்டிவிடப்படுற சாதிப் பிரச்னைகள், நம்மை ஒண்ணு ரெண்டு பிரிவுகளாகவே வெச்சிருக்கற நோக்கம்... இதெல்லாம் பற்றி இந்தப் படம் பேசும்.

ஷாலினி நியூட்டன்