எதிர்காலத்தில் டெல்லி



இந்தியாவில் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்படும் நகரம், டெல்லி. கடந்த வருடத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் அரசு விடுமுறை கூட அளிக்கப்பட்டது. இப்போதும் காற்று மாசுபாடு குறைந்தபாடில்லை.
வீட்டைவிட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சும் சூழல் தான் அங்கே நிலவுகிறது. இந்நிலையில் மாதவ் கோலி என்ற கலைஞர் செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்காலத்தில் டெல்லி எப்படியிருக்கும் என்ற கோணத்தில் சில புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் காட்சி தரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காற்றை சுத்திகரிக்கும் நவீன கருவிகளை முகத்தில் அணிந்திருக்கின்றனர்.  திருமணத்தில் கூட மணப்பெண்ணும், மணமகனும் அந்தக் கருவியை அணிந்துள்ளனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட்டுடன் ஆக்சிஜன் மாஸ்க்கையும் அணிந்திருக்கின்றனர். தவிர, புகை மூட்டத்தால் தாஜ்மகால் சூழப்பட்டுள்ளது.

 ‘‘மாதவ் கோலியின் புகைப்படங்கள் டெல்லிவாசிகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும், அரசுக்கும் பெரிய எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது...’’ என்று நெட்டிசன்கள் பின்னூட்டம் அளித்துவருகின்றனர். வழக்கம்போல மாதவ் கோலியின் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகிவிட்டன.

த.சக்திவேல்