பயோடேட்டா - காய்ச்சல்
பெயர் : காய்ச்சல்.
 காய்ச்சல்: காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல; அது ஒரு அறிகுறி. நோய் எதிர்ப்பு சக்தி இயக்கத்தில் மாற்றங்கள் நிகழும்போது காய்ச்சல் வரும். நம் உடலை வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்கும்போது, உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடும். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் காய்ச்சல் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.
 ஃபெப்ரைல் ஃபிட்ஸ் : சில நேரங்களில் ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது, வலிப்பும் சேர்ந்து வரலாம். இதற்குப் பெயர்தான் ஃபெப்ரைல் ஃபிட்ஸ். பொதுவாக ஐந்து வயதுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வலுப்பெற ஆரம்பிக்கும். அதனால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்பாக ஃபெப்ரைல் ஃபிட்ஸ் வந்த குழந்தைகளைக் கூடுதலாக கவனிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 வெப்பநிலை : உடலின் சராசரி வெப்பநிலையின் அளவு, 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். அதாவது 37 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பநிலை சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பது இயல்பு. உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதைத்தான் காய்ச்சல் என்கின்றனர். இந்தக் காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. சாதாரண காய்ச்சல் என்றால் ஆன்டிபயாடிக் மருந்துகளாலேயே சரியாகிவிடும்.

ருமாட்டிக் காய்ச்சல் : ரொம்பவே அரிதான காய்ச்சல் இது. குழந்தைகள் மற்றும் இள வயதினரைத் தாக்குகிறது. இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே இக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
இது கீல்வாதக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. பீட்டா ஹீமோலிட்டிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்கிற பாக்டீரியாவால் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா அசுத்தமான தண்ணீர், உணவு, காற்று மூலம் தொண்டையில் வந்து ஒளிந்துகொண்டு புண்ணை ஏற்படுத்துகிறது. நாளடைவில் காய்ச்சலாக மாறுகிறது. பலருக்கு மூட்டு வலியோடு இந்தக் காய்ச்சல் சரியாகிவிடும். கொஞ்சம் அலட்சியமாக விட்டால் இதய வால்வைத் தொற்றும். இதயத்தின் செயல்பாட்டில் பிரச்னைகள் வருவதற்கான அளவுக்கு கொண்டுபோய் நிறுத்திவிடும் காய்ச்சல் இது. வெப்பநிலை : உடலின் சராசரி வெப்பநிலையின் அளவு, 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். அதாவது 37 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பநிலை சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பது இயல்பு. உடலின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதைத்தான் காய்ச்சல் என்கின்றனர். இந்தக் காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. சாதாரண காய்ச்சல் என்றால் ஆன்டிபயாடிக் மருந்துகளாலேயே சரியாகிவிடும்.
அறிகுறி: சில நேரங்களில் புற்றுநோயின் அறிகுறியாகக் கூட காய்ச்சல் இருக்கும்.
பரிசோதனை : காய்ச்சல் குணமாகாமல் தொடரும்போது மருத்துவரின் ஆலோசனைப்படி இரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப்பரிசோதனை, எக்ஸ்ரே எடுப்பது போன்றவற்றைச் செய்துகொள்வது நல்லது.
டிரக் ஃபீவர் : சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்ற பலவித நோய்களுக்காக தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு டிரக் ஃபீவர் வரலாம். அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உடலுக்குச் சேராததன் விளைவு இது. மிதமான காய்ச்சல் என்பதால் விரைவில் குணமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
தடுப்பு மருந்துகள்: மலேரியா, டைபாய்டு, கொரோனா உட்பட தீவிரமான காய்ச்சல்களுக்கு தடுப்பூசிகள் உள்ளன. இப்படியான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் நோய்கள் தாக்காது. அப்படியே தாக்கினாலும் அதன் தீவிரம் குறைவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவு முறைகள் : சரியான உணவுப் பழக்கத்தையும், சுகாதாரத்தையும் கடைப்பிடித்தாலே போதும். பல்வேறு விதமான காய்ச்சல்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக விதவிதமான காய்ச்சல் பரவும் காலங்களில் கொதிக்கவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது. காய்கறி, கீரை, பழங்களை நன்றாகக் கழுவியபிறகே பயன்படுத்த வேண்டும். அத்துடன் தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஃபாஸ்ட் புட் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வைரஸ் காய்ச்சல் : சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவின் மூலம் பரவக்கூடியது வைரஸ் காய்ச்சல். சாதாரண காய்ச்சலாக ஆரம்பித்து, மூன்று நாட்களுக்குப் பிறகு அதிகமாகி, பிறகு குறையத் தொடங்கும். ஒரு வாரம் வரை நீடிக்கும். பொதுவாக வைரஸ் காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைந்துவிடும்.
டைபாய்டு : சல்மோனல்லா டைபை என்ற பாக்டீரியாவால் டைபாய்டு காய்ச்சல் வருகிறது. மழைக்காலத்தில் ஆரம்பித்து குளிர்காலம் முடியும் வரை டைபாய்டு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம்தான் சல்மோனல்லா பாக்டீரியாவும் நம் உடலுக்குள் பரவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுகுடலை அடைந்தவுடனே இரத்தத்தில் கலந்துவிடும். தலைவலியுடன் விட்டு விட்டு காய்ச்சல் அடிப்பது இதன் முக்கிய அறிகுறி. காய்ச்சல் ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் காய்ச்சல் அதிகரிக்கும். சரியாக பசிக்காது. உடற்சோர்வு, வாந்தி, வயிற்றுவலி ஏற்படும். இந்தக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சைகள் உள்ளன.
மலேரியா : கொசுக்கடியால் உண்டாகும் ஒரு நோய் இது. காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறி. வாந்தி, உடல் சோர்வு, தலைவலியும் இருக்கும். கொசு கடித்த பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் இதன் அறிகுறி தெரிய வரும். சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் மரணம் கூட ஏற்படலாம். அதிகமாக வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்களைத்தான் மலேரியா தாக்குகிறது. 2020ம் வருடம் சுமார் 24 கோடிப்பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 6.27 லட்சம் பேர் மரணமடைந்தனர்.
டெங்கு: ரொம்பவே ஆபத்தான காய்ச்சல் இது. சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் சுமார் 39 கோடிப்பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பாதிப்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றனர். வருடந்தோறும் டெங்குவால் 40 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.
டெங்கு என்கிற வைரஸால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமி ஏடிஸ் எனும் கொசுவின் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், உடல் வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, உடல் சோர்வு, வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.
பன்றிக்காய்ச்சல் : ஹெச் 1 என் 1 என்கிற இன்புளூயன்சா வகை வைரஸால் ஏற்படுகிறது. அதிகமான காய்ச்சல், கல்லீரல் அழற்சி, தொண்டையில் நோய்த் தொற்று ஏற்படும். இதற்காக டாமிப்ளூ என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து இருந்தாலும் சரியான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிக்கன்குன்யா : சிக்கன்குன்யா என்ற வைரஸ் மூலம் உண்டாகிறது இந்நோய். இந்த வைரஸை கொசுக்கள்தான் பரப்புகின்றன. காய்ச்சலும், கடுமையான மூட்டு வலியும்தான் இதன் அறிகுறிகள். மலேரியாவைவிட வீரியம் குறைந்தது. சிக்கன்குன்யாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டும் இறப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது.
த.சக்திவேல்
|