காவல்துறை அதிகாரியாக மாறிய... திருமணத்துக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுமி!



பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அதுவும் சாதாரணமாக அல்ல! தில்லி போலீசில் பயிற்சி பெற்று வரும் இளம் பெண்ணாக! இந்த சுவாரஸ்யம் வெளிச்சத்துக்கு வந்தது எதேச்சையாக! ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்தபோது லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது இந்த மேட்டர்!

வழக்கின் விவரம் இதுதான்: ஜூன் 12, 2018 அன்று மஹ்பூர் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி, உள்ளூர் சந்தைக்குச் சென்றார். அப்போது அவர் கடத்தப்பட்டார்... இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவாகி இன்வெஸ்டிகேஷன் நடந்தது. புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது ஆள் கடத்தல் வழக்கை பதிவு செய்த போலீசார், அவர்களை விசாரித்தனர்.

போலீசாருக்கு கடத்தல் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். குழந்தைத் திருமணம்! சிறுமிக்கு இதில் உடன்பாடில்லை. படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது கனவு. குறிப்பாக காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது லட்சியம்!

வீட்டில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கட்டாயப்படுத்தி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். பொறுத்துப் பார்த்த சிறுமி, சட்டென வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
பீகாரில் இருந்து தில்லி சென்றவர், அங்கு தங்கிப் படித்து பல போட்டித் தேர்வுகளை எழுதி, கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலர் பணிக்கு பயிற்சி எடுக்கத் தொடங்கிவிட்டார்.
இவையெல்லாம், நிலுவையில் உள்ள வழக்குகளை பரிசீலித்தபோது கிடைத்த தகவல்கள்; உண்மைகள்.காவலர் பயிற்சி பெறும் அந்தச் சிறுமியை... தவறு பெண்ணை... சந்தித்து பீகார் போலீசார் விசாரித்துள்ளனர்.

தன்னை யாரும் கடத்தவில்லை... படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் வீட்டை விட்டு, தானே ஓடி வந்ததாக அந்தப் பெண்... தவறு காவலர் பயிற்சி பெறும் வருங்கால போலீஸ் அதிகாரி... விளக்கம் அளிக்க, வழக்கு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுமியின் பெயரை பீகார் காவல்துறை வெளியிடவில்லை. அதனால் என்ன..? பெயரா முக்கியம்..? படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் அந்தச் சிறுமியின் செயல்தானே முக்கியம்..?

ஜான்சி