ரா புதிய மொசாட்டா?



அதிரடி நடவடிக்கைகளால்  உலகைக் கவனிக்கச் செய்த ‘ரா’

நமக்கெல்லாம் உளவாளி, உளவுத்துறை உள்ளிட்ட விஷயங்களை அறிமுகப்படுத்தியது ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான். ஒரு நாட்டிற்குப் போய் துப்பறிவதும், அங்குள்ள எதிரிகளைக் கொன்றுவிட்டு வெற்றிகரமாகத் திரும்பவதுமாக ஜொலிப்பார் ஜேம்ஸ்பாண்ட். இது பிரிட்டிஷ் எழுத்தாளர் இயான் ஃபிளமிங் உருவாக்கிய கதாபாத்திரம் என்பதையே மறந்து நாம் 007-னை அவ்வளவு நேசித்தோம். ஆனால், இதேபோலவேதான் பலநாடுகளின் உளவு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது நாம் அறியாதது.

உலகின் சக்திவாய்ந்த புலனாய்வு அமைப்பென அமெரிக்காவின் ‘சிஐஏ’ புலனாய்வு அமைப்பைச் சொல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக பலரும் குறிப்பிடும் பெயர் இஸ்ரேலின், ‘மொசாட்’. ஏனெனில், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது ‘மொசாட்’ அமைப்பு.

ஆனால், சமீபமாக உலகம் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’.ஏற்கனவே, உலகின் மிக சக்திவாய்ந்த புலனாய்வு அமைப்புகளின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது ‘ரா’ அமைப்பு. இப்போது புதிய ‘மொசாட்’ என்றழைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  இதற்குக் காரணம், ஜேம்ஸ்பாண்ட் படங்களையே விஞ்சிவிடும் அளவுக்கு அதன் சமீபத்திய செயல்பாடுகள் அதிரடியாக உள்ளதெனத் தெரிவிக்கின்றன செய்திகள்.

கடந்த 1968ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியாவின் உளவு அமைப்பான Research and Analysis Wing எனப்படும் ‘ரா’ அமைப்பு உருவானது.

குறிப்பாக, வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அதற்கு முன்புவரை ‘ஐபி’ எனப்படும் இன்டெலிஜன்ஸ் பீரோதான் வெளிநாட்டு விவகாரங்களுக்கான புலனாய்வைச் செய்து வந்தது.

ஆனால், 1962ம் ஆண்டு நடந்த சீன - இந்தியப் போரின்போது ஐபியின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் தோல்வியால் இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவிற்கென ஒரு பிரத்யேக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு தேவையென நினைத்தார். உடனே அதனை உருவாக்கவும் உத்தரவிட்டார்.
ஆனால், இது இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றபிறகே புது வடிவம் பெற்றது.

அப்போது ஐபியின் துணை இயக்குநராக இருந்த ரமேஷ்வர் நாத் காவ் தலைமையில் ‘ரா’ உருவானது. ஆரம்பத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானை உளவு பார்ப்பதையே மையமாகக் கொண்டு நிறுவப்பட்டாலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அதன் ஆணையை விரிவுபடுத்தி இந்தியாவின் செல்வாக்கை அதிகரித்தது.

சரி அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?

இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ‘ரா’ அமைப்பு இவ்வளவு அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இப்போது அப்படியில்லை. உலகை உற்றுநோக்க வைத்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம், இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் எனக் கோரி பிரிவினைப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் இயக்கத் தலைவர்கள் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மற்றும் அவதார் சிங் கந்தா இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

இதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கனடாவின் சர்ரே நகரில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டுக் கொன்றாகத் தகவல் தெரிவிக்கின்றன. அவதார் சிங் கந்தா, லண்டன் மருத்துவமனையில் இறந்துபோனார். அவர் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், சில அறிக்கைகள் ஃபுட் பாய்ஸனிங் என்றும், வேறு சில அவர் இரத்தப் புற்றுநோயால் இறந்ததாகவும் கூறுகின்றன.கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷன் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது ஹை கமிஷனில் பறந்த இந்திய தேசியக் கொடியைக்  கீழிறக்கினர். இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் அவதார் சிங்.

இதேபோல, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கிய காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வார் கடந்த மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மூவரின் இறப்பிற்குப் பின்னாலும் ‘ரா’ இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

‘‘எதிரிகளை ஒழிக்க இந்தியா கமாண்டோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை; எப்பொழுதும் எங்களுக்காக வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் ஏற்கனவே உள்ளனர்...’’ என ‘ரா’ அமைப்பில் நீண்டகாலமாகப் பணியாற்றிய ஒரு முன்னாள் உளவாளி தில்லியிலிருந்து வரும் ‘யூரேசியன் டைம்ஸ்’ டிஜிட்டல் செய்தித்தளத்தில் கூறியுள்ளார். அந்தளவுக்கு உலகம் முழுவதும் ஏஜென்ட்களை வைத்து வேலைகளைச் செய்கிறது, ‘ரா’ அமைப்பு.

இந்த ஹிட் லிஸ்ட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மட்டும் இல்லை. இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களும் அமைதியின்மைக்குக் காரணமானவர்களும் உள்ளனர்.

கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814யை காந்தகாருக்குக் கடத்திச் சென்றவர்களில் ஒருவரான ஜாகூர் மிஸ்திரி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல, இந்தியாவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பஷீர் அகமத் பீரும் ராவல்பிண்டியில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுமட்டுமல்ல. கடந்த பிப்ரவரியில், கராச்சியில் முன்னாள் அல்-பத்ர் முஜாஹிதீன் கமாண்டர் சையத் காலித் ராசாவும், கடந்த வாரம் இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ரியாஸ் அகமதும் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் பின்னணியில் ‘ரா’ இருக்கலாம் எனத் தகவல்கள் கசிகின்றன. 

நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அல்லது ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அமைதியின்மைக்குக் காரணமான பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் எதிரிகளின் தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் கொலைகளுக்குப் பின்னால் ‘ரா’ இருக்கலாம் என்பதாலேயே இப்போது அது உலகின் பயங்கரமான புலனாய்வு அமைப்பாகக் கருதப்படுகிறது.

இதுமட்டுமல்ல. ‘ரா’ அமைப்பை அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர்போன மொசாட் அமைப்புடன் இப்போது ஒப்பிட்டும் பேசுகின்றனர்.‘‘இப்போது நாம் பிரிட்டன் மற்றும் கனடாவை விடவும் உலகில் அதிக அதிகாரத்தைப் பெற்றிருப்பதால், இதுபோன்ற இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் இந்தியா ஆணையிட்டால் போதும்; அதன் எதிரிகளை அழிக்க ஒரு தோட்டாவைக் கூட பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை...’’ என ‘யூரேசியன் டைம்ஸ்’ தளத்தில் ‘ரா’ அமைப்பு எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது பற்றி புகழ்ந்துள்ளார் முன்னாள் ‘ரா’ அதிகாரியான என்.கே.சூட்.

பேராச்சி கண்ணன்