தமிழ்ப் படத்தை இயக்கும் மலையாள இசையமைப்பாளர்!



மலையாளத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா. இவர் தமிழில் ‘டி3’, ‘மியாவ்’ போன்ற படங்களுக்கும்; இந்தியில் ‘காமசூத்ரா’ உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 
இப்போது இவர் இயக்குநராக ‘சிகாடா’ படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படத்துக்காக 24 பாடல்களை உருவாக்கியிருப்பதுதான் சினிமா உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்ட நிலையில் இயக்குநர் ஸ்ரீஜித் எடவானாவிடம் பேசினோம்.

இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எதுவும் கிடையாது. சின்ன வயதிலேயே கிளாசிக் மியூசிக் கத்துக்கிட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ போன்ற ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் இசைத் துறைக்கு வர வேண்டும் என்ற பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சென்னையில் ஆடியோ என்ஜினியரிங் முடித்துவிட்டு கீரவாணி, தேவா, தமன் போன்ற இசையமைப்பாளர்களிடம் ரிக்கார்டிஸ்ட்டாக வேலை பார்த்தேன். 
அந்த சமயத்தில் நான் ஒரு தனி ஆல்பம் உருவாக்கியிருந்தேன். பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரிடம் பாடலைக் கொடுத்ததும் விஷுவல்ஸ் ஷூட் பண்ணிக் கொடுத்தார். அந்த ஆல்பத்தில் நிவின் பாலி, நஸ்‌ரியா நடித்தார்கள். சொல்லப் போனால் எங்க நாலு பேருக்கும் அந்தப் பாடல்தான் முதல் ப்ரொஃபஷனல் அனுபவமா இருந்துச்சு.

அந்தப் பாடல் ஹிட்டுக்குப் பிறகு மலையாளத்தில் சினிமா வாய்ப்பு கிடைச்சது. குஞ்சாக்கோ போபன், நிவின்பாலி, பிஜுமேனன் உட்பட பிரபல நடிகர்களின் படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது.தொடர்ந்து தமிழில் ‘மியாவ்’, ‘டி3’, விஜய் ஜேசுதாஸ் நடித்த ‘சல்மான்’, இந்தி - ஆங்கிலத்தில் உருவான ‘காமசூத்ரா’ என பல மொழிகளில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ‘காமசூத்ரா’ ஆஸ்கர் விருதுப் பட்டியலில் அதிகாரபூர்வமாக இடம் பெற்றது.   

மியூசிக் டைரக்டரான உங்களுக்கு டைரக்‌ஷன் மீது ஆர்வம் வரக் காரணம் என்ன?

இசையமைப்பாளராக இருப்பதால் இயக்குநர்கள் கதை சொல்லும்போதே அதை விஷுவல் பண்ணிப் பார்ப்பேன். அப்படி ஒருசில படங்களின் காட்சிகள் நான் நினைத்த மாதிரியே இருக்கும். அது எனக்குள் விஷுவல்ஸ் மீது ஒருவித ஈர்ப்பைக் கொடுத்துச்சு. அதன் பிறகு சில ஆல்பங்களை நானே ஷூட் பண்ண ஆரம்பித்தேன்.அந்த ஆர்வத்தில் உருவாக்கிய கதைதான் ‘சிகாடா’. ஈசல் மாதிரி இருக்கக்கூடிய பூச்சிதான் சிகாடா. இது சர்வைவல் த்ரில்லர். கர்மா எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வேலை செய்கிறது என்பதுதான் கதைக்கரு.

அதை காடுகளை பின்புலமாக வைத்துச் சொல்லியுள்ளேன். ஹீரோ சில கெட்ட விஷயங்கள் பண்ணுகிறார். அவருக்கு கர்மா எப்படி வேலை செய்கிறது என்பதை விறு விறு திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

இது முழுக்க முழுக்க காடுகளில் நடக்கும் கதை. காடுகளில் படப்பிடிப்பு என்பதால் படப்பிடிப்புத் தளத்துக்கு நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு டெக்னீஷியன் மாதிரி வேலை பார்க்கக் கூடிய நடிகர் தேவைப்பட்டார். 

படத்தில் ஹீரோவுக்கு டூப் கிடையாது.  அருவியிலிருந்து  குதிப்பது, மலைச் சரிவுகளில் உருள்வது என பல ரிஸ்க் காட்சிகள் உள்ளது.நடிகர் ரஜத் என்னுடைய நண்பர். அவர் எல்லா ரிஸ்க்கையும் சந்திக்க முன்வந்தார். மலையாளத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் ரஜத். இதுவரை பண்ணிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்தார்.

சர்வைவல் படம் என்றாலே ரியலிஸ்டிக்கை எதிர்பார்ப்பாங்க. மலையிலிருந்து குதிக்கிற காட்சிகளை டூப் இல்லாமல் பண்ணினார். படத்துல நரி, செந்நாய் என சில வனவிலங்குகள் இருக்கிறது. பயிற்சி கொடுக்கப்பட்ட விலங்குகளாக இருந்தாலும் எப்போது மூடு மாறி தாக்கும் என்பது தெரியாது. அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவே ரஜத் விலங்குகளுடன் பல நாட்கள் பழகினார். 

நாயகியாக காயத்ரி மயூரா நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். படத்துல பக்கத்துவீட்டு பெண் கேரக்டர். சிறப்பாக பண்ணினார். வில்லனாக ஜெய்ஸ் ஜோஸ் பண்ணியுள்ளார். ‘தலைநகரம் 2’ படத்துல வில்லனாக  பண்ணியவர்.

ஒரே படத்துக்காக 24 பாடல்களை உருவாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

இந்தக் கதையை தமிழுக்காகத்தான் எழுதினேன். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற மாதிரிதான் பாப், ராப் என 6 ஸ்டைலில் டியூன் போட்டேன். மற்ற மொழிகளில் நாங்கள் டப் பண்ணவில்லை. ஒவ்வொரு மொழிக்காகவும் காட்சிகளை ஃப்ரெஷ்ஷாக எடுத்தேன்.  தமிழில் கானா பாடல் புகழ் பெற்றவை. அதே கானா பாடல்களை மலையாளத்துக்கு பயன்படுத்தினால் அந்நியமாகத் தோன்றும். மலையாளத்தில் நாடோடிப் பாடல் எல்லோருக்கும் தெரியும். அப்படி ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் நேட்டிவிட்டியுடன் பாடல்களை உருவாக்கியுள்ளேன்.

அதனபடி ஒவ்வொரு மொழிக்கும் புது டியூனாக 24 டியூன்களை உருவாக்கினேன். பாடல்களை உருவாக்குவதற்காகவே 6 மாதங்கள் தேவைப்பட்டன. மகாலிங்கம், விஜய் பிரகாஷ் உட்பட கிட்டத்தட்ட 30 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.கதை காட்டுக்குள் நடப்பதால் எலக்ட்ரானிக் சவுண்டைத் தவிர்த்துவிட்டு காடுகளில் எதிரொலிக்கும் மரத்திலிருந்து வரக்கூடிய ஒலி, காற்றின் ஒலி என கதையோடு கலந்த மாதிரி பின்னணி இசை இருக்கும்.

டைரக்‌ஷன் அனுபவம் எப்படி இருந்தது?

சினிமாவில் மிகவும் கடினமான வேலை டைரக்‌ஷன். எந்தஒரு வேலைக்கும் டைரக்டர் ஓகே சொன்னால்தான் அடுத்த கட்டத்துக்கு வேலையைக் கொண்டு போக முடியும்.
எந்த இடத்தில் எடிட்டிங்கை நிறுத்தணும், காட்சிகளின் நீளம் எவ்வளவு இருக்கணும் என எல்லாமே டைரக்டரின் பொறுப்பு. என்னுடைய முதல் டைரக்‌ஷன் அனுபவம் திருப்தியாக அமைய தயாரிப்பாளர்கள் வந்தனா மேனன், கோபகுமார் சிறந்த ஒத்துழைப்பை கொடுத்தார்கள்.

பாடல்களை எப்படி உருவாக்குவீர்கள்?

பின்னணி இசையைவிட பாடல்கள் உருவாக்குவது எனக்கு பிடிக்கும். ஒரு பாடல் உருவாக்குவதற்கு இயக்குநர்கள் சொல்லும் சிச்சுவேஷன் போதும். ஏனெனில், சிச்சுவேஷனை மையமாக வைத்துதான் பாடல்களை உருவாக்க முடியும். 

நான் நம்புவது, ஒருவருக்கு மியூசிக் தெரிந்தாலும் அவருக்குள்  பொறி உருவாக வேண்டும். அப்போது நம்முடைய வாழ்க்கை அனுபவம், காதல், எமோஷனல், மகிழ்ச்சி, துக்கம் என எல்லாம்  கனெக்ட் ஆகிவிடும். அப்படி சிச்சுவேஷனை ஃபீல் பண்ணும்போது உள்ளுக்குள் ஒரு டியூன் பிறக்கும்.

மியூசிக் தெரியவில்லையென்றாலும் இந்த மாதிரியான ராகம் மனதின் ஆழத்திலிருந்து பிறக்கும். அதுதான் பாடலின் ஆன்மா என்று சொல்லலாம். இது மாதிரி எல்லோருக்கும் தோன்றும் என்று சொல்லவில்லை. இது என்னுடைய அனுபவம்.

தமிழ்ப் பாடல்களை கவனிக்கிறீர்களா?

இந்தியாவின் பெஸ்ட் சாங்ஸ் தமிழில் வெளிவருகிறது. ராப், மெலடி என பல வகை பாடல்கள் உண்டு. குத்துப் பாடல், ரொமான்ஸ் பாடல், கானா பாடல் என எளிதாக இங்கு பாடலை உருவாக்கலாம்.தமிழ்ப் பாடலை பாடும்போது உணர்வும் ஆன்மாவும் ஒன்றாகக் கலந்திருக்கும், சவுண்டிங்கிலும் வித்தியாசம் பார்க்க முடியும்.

எஸ்.ராஜா