புதிய I Phone Series 15-ல் இந்தியாவின் NavIC!



இந்த வருடத்திற்கான ஐ ஃபோன் 15  சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதும்; சிறப்பு அம்சங்களாக சி டைப் சார்ஜர், ஆக்‌ஷன் பட்டன் வசதி, புதியதாக  A17 ப்ரோ சிப், பிறகு வழக்கம் போல அதிநவீன கேமரா வசதி, உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக எடை குறைவு... என்று நிறைய இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இணையதளங்களில் மக்கள் இதுகுறித்து பிரித்து மேய்ந்து பட்டியலிட்டிருக்கிறார்கள்.

ஸோ, இதையெல்லாம் ஸ்கிப் செய்துவிட்டு அதிகம் சோஷியல் மீடியாவில் பேசப்படாத ஒரு விஷயம் குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம்.அதுதான் இஸ்ரோவின் NavIC.

GPS (Global Positioning System) என்றால் என்ன என்று விளக்கினால் இருந்த இடத்தில் இருந்தே கல் எடுத்து எறிவீர்கள்! ஏனெனில் வழி மாறிப் போய்விடுவோம் என்ற பயம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனில் நொடிப் பொழுதில் எங்கு இருக்கிறோம், நாம் எங்கு செல்ல வேண்டும் என்று தெளிவாக நமக்கு வழிகாட்டிவிடும். GPS-ன் பயன்பாடு நம் அனைவரின் சுவாசத்துடன் கலந்துவிட்டது.

இந்த GPSஐ அமெரிக்காதான் முதன் முதலில் உருவாக்கியது. இது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் முதன் முதலில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவின் வானூர்திப் படையின் 50வது விண்வெளிப் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. 

இது உருவாக்கியதற்கான நோக்கம் ராணுவப் பணிக்காக என்றாலும் காலப்போக்கில் உலக மக்கள் பயன்பாட்டிற்கும் மாறியது. ஆரம்ப காலக்கட்டங்களில் அமெரிக்கா உருவாக்கிய இடங்காட்டும் கருவியைத்தான் அனைத்து நாடுகளும் பயன்படுத்தின.  காலப் போக்கில் அமெரிக்காவை அடுத்து சில நாடுகளும் இடங்காட்டும் கருவிகளை உருவாக்கின.

ரஷ்யாவிற்கு GLONASS உள்ளது, சீனாவில் BeiDou உள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் கலிலியோ உள்ளது.அதேபோல்தான் இந்தியாவிற்கு NavIC (Navigation with Indian Constellation)!முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட NavIC என்ற இடங்காட்டும் கருவியைத்தான், ஆப்பிள் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள ஐ ஃபோன் 15 சீரிஸில் பயன்படுத்தியுள்ளது.NavIC முதன்முதலில் 2006ல் செயல்படுத்தப்பட்டது. 

ஆனால், பயன்பாட்டிற்கு வந்தது என்னமோ 2018ல்தான். இந்திய அரசு, முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகிற அனைத்து ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களும் NavIC கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஆனால், பல நிறுவனங்களுக்கு அது சவாலாக இருந்தது. ஜனவரி 2023ல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்ஃபோன்  நிறுவனங்களும் NavIC என்ற இடங்காட்டும் கருவியைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒருசில நிறுவனங்கள் NavIC-யை செயல்படும் வகையில் கொண்டுவந்தாலும் ஆப்பிள், சாம்சங் போன்று முன்னணி  நிறுவனங்கள் கொண்டு வருவது கடினம் என்றன. 

பல தொழிநுட்பக் கோளாறுகள் ஏற்படும், உடனே இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது  சாத்தியமில்லை என்றன. இப்படியிருக்க, முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐஃபோன் சீரிஸில்  ஐஃபோன் ப்ரோ, ப்ரோ மேக்ஸில் மட்டும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட NavIC -யைக் கொண்டு வந்துள்ளது!

என்.ஆனந்தி