Must Watch



18+

‘சோனி லிவ்’வில் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘18 பிளஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இடதுசாரி இயக்கத்தில் தீவிரமாக இருக்கும் இளைஞன், அகில். ஊரிலேயே செல்வாக்கான மனிதரான ரவீந்திரனின் மகளான ஆதிராவைக் காதலிக்கிறான் அகில். அவனுடைய அப்பா ரவீந்திரனிடம்தான் வேலை செய்கிறார். அகில் - ஆதிராவின் காதல் விசயம் ஆதிராவின் அண்ணனுக்குத் தெரிய வர, பிரச்னை வெடிக்கிறது.

ஆதிராவின் அப்பாவும், அண்ணனும் அகிலை எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர். ஆனால், அகில் காதலை விடுவதாக இல்லை. ஆதிராவும் அகிலைத்தான் கல்யாணம் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். அதனால் அவளது பெற்றோர் ஆதிராவை வெளியூருக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அகிலும், ஆதிராவும் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இதற்கு அகிலின் இரண்டு நண்பர்கள் உதவி செய்கின்றனர்.

அத்துடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஒருவரும் உதவுகிறார். ஆதிராவின் பெற்றோர் திட்டம் ஜெயித்ததா... அகில் - ஆதிரா திட்டம் ஜெயித்ததா... என்பதே கிளைமேக்ஸ். ஓடிப்போய் திருமணம் செய்வதை வைத்து திரைக்கதையில் விளையாடியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் அருண் டி ஜோஸ்.

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ‘. ஹாட்லியின் தந்தையின் இரண்டாம் திருமணம் லண்டனில் நடக்கிறது. லண்டனுக்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு அவசரமாக வருகிறாள் ஹாட்லி. ஆனால், விமானத்தை தவறவிடுகிறாள். அடுத்த விமானத்தில் செல்வதற்காக பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுக்கிறாள் ஹாட்லி.  

விமானத்துக்கு காத்திருக்கும்போது ஆலிவர் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள். அவனும் லண்டன் செல்வதற்காக ஹாட்லி பயணம் செய்யும் விமானத்தில் பயணிக்கிறான்.
விமானத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் இருவரும் பேசிப் பழகுகின்றனர். அவர்கள் செல்ல வேண்டிய விமானம் வருகிறது. ஹாட்லி பிசினஸ் கிளாஸிலும், ஆலிவர் எகானமி கிளாஸிலும் பயணிக்கின்றனர்.

ஆலிவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சீட் பெல்ட் வேலை செய்யவில்லை. ஹாட்லிக்கு அருகிலிருக்கும் பிசினஸ் கிளாஸ் இருக்கை மட்டுமே காலியாக இருக்கிறது. அந்த இருக்கை ஆலிவருக்குக் கிடைக்க, இருவரும் பேசிக்கொண்டே பயணிக்கின்றனர். 

இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. லண்டனில் விமானம் இறங்கியதும் இருவரும் வெவ்வேறு திசையில் சென்று விடுகின்றனர். மறுபடியும் ஆலிவரும், ஹாட்லியும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை. நல்லதொரு ரொமாண்டிக் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வனீஷா கேஸ்வில்.

நீயட்

சத்தம் இல்லாமல் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப் படம், ‘நீயட்’. இந்தியாவைச் சேர்ந்த பெரிய பிசினஸ்மேன் ஆசிஸ் கபூர் எனும் ஏகே. தனது நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரண்டு வருடங்களாக சம்பளம் தரவில்லை. 

அத்துடன் வங்கியில் வாங்கிய கடன்களையும் திருப்பித்தரவில்லை. அவருடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு, எட்டுப் பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தியாவிலேயே இருந்தால் போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்று ஸ்காட்லாந்துக்குப் பறந்துவிடுகிறார். அங்கே சொகுசான ஒரு மாளிகையில் வாழ்ந்துவருகிறார்.

ஏகேயின் பிறந்த நாள் வருகிறது. ஸ்காட்லாந்து மாளிகையில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டிருக்கிறது. 

கொண்டாட்டத்தின் போது அழையா விருந்தாளியாக வருகிறார் சிபிஐ அதிகாரி மீரா. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தவர்களிடம் நான் சரணடையப் போகிறேன் என்கிறார் ஏகே. அங்கே மீரா எதற்காக வந்திருக்கிறார்... ஏகே சரணடைந்தாரா அல்லது வேறு ஏதாவது செய்தாரா... என்பதற்கு பதில் சொல்கிறது திரைக்கதை. ஏகேவாக நடித்திருப்பவரின் தோற்றம், அவருக்குப் பின்னணியாக இருக்கும் கதை எல்லாம் விஜய் மல்லையாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. படத்தின் இயக்குநர் அனு மேனன்.

கௌசல்யா சுப்ரஜா ராமா

ஆறு கோடி பட்ஜெட்டில் உருவாகி, பதினைந்து கோடியை அள்ளிய கன்னடப் படம், ‘கௌசல்யா சுப்ரஜா ராமா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.  
சித்தகவுடா ஓர் ஆணாதிக்கவாதி. 

தனது மனைவி கவுசல்யாவை ஓர் அடிமை போல நடத்துகிறார். இத்தம்பதியின் ஒரே மகன் ராம். அப்பாவைப் போலவே ஓர் ஆணாதிக்கவாதியாகவே வளர்கிறான் ராம். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியிலும் ஆணாதிக்கவாதியாகவே நடந்துகொள்கிறான்.

கல்லூரியில் ஷிவானி என்ற ஜூனியர் ராமின் மீது காதல் வயப்படுகிறாள். ராமும் ஷிவானியைக் காதலிக்கிறான். ஆனால், இப்படி டிரஸ் போடாதே, இவ்வளவு நேரம் யார்கூட பேசிட்டு இருந்தேன்னு ஆதிக்கத்துடன் நடந்துகொள்கிறான். இருந்தாலும் பொறுமை காக்கிறாள் ஷிவானி. ஒரு கட்டத்தில் ராமின் ஆதிக்கம் அதிகமாக, ஷிவானி அவனை விட்டு விலகிச் சென்றுவிடுகிறாள். ஷிவானியின் பிரிவைத் தாங்க முடியாமல் மதுவுக்கு அடிமையாகிறான் ராம்.

இந்நிலையில் ராமின் அம்மா மரணமடைய, முத்துலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறான். எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் முத்துலட்சுமியிடம் அகப்பட்ட ராமின் எதிர்காலம் என்னவாகிறது என்பதே கிளைமேக்ஸ். ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷஷாங்க்.

தொகுப்பு: த.சக்திவேல்