சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னா பாய் ஃப்ரெண்ட்!



சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே, சூர்யாவின் அடுத்தபடம் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.பெயரிடப்படாத சூர்யா43 படத்தை, ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்குரா இயக்கவிருக்கிறார். இந்தக் கூட்டணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு நிலவுகிறது.
இந்நிலையில் சூர்யாவுக்கு வில்லனாக, சமீபகாலமாக கவர்ச்சியில் கலந்து கட்டி நடித்துவரும் தமன்னாவின் ஆண் நண்பர் விஜய் வர்மா நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த விஜய் வர்மா ஏற்கனவே வெப் சீரீஸ்களில் சைக்கோதனமான வில்லனாகவும் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.சூர்யாவுக்கு ஜோடியாக, தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைப் பெற்றிருக்கும் மலையாள சினிமாவின் பஹத் ஃபாசிலின் மனைவி நஸ்ரியா நடிக்கலாம் எனத் தெரிகிறது.அதேபோல் பான் இந்தியா நட்சத்திரமாக இருக்கும் துல்கர் சல்மான், சூர்யாவின் சகோதரர் ஆகவும் நடிக்கவிருக்கிறாராம்.

சூர்யா43 குறித்து இது போன்ற தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தாலும், இது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இன்னும் சில வாரங்களில் சூர்யா43 படம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்ஸ் பாப்பா