காலனாக மாறியிருக்கும் காலநிலை மாற்றம்... பேரழிவுகளைச் சந்திக்கும் உலகம்...



‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்’ என்பார்கள். அதாவது, எங்கோ நடக்கும் ஒரு செயலுக்கான விளைவு வேறெங்கோ ஓர் இடத்தில் விளையும் என்பதை உணர்த்த சொல்லப்படும் பழமொழி. இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் காலநிலை மாற்றத்திற்குப் பொருந்தும். 
ஏனெனில், காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான கார்பன் உமிழ்வுதான். இதனை வளர்ந்த நாடுகள் அளவுக்கதிகமாக வெளியேற்றியதாலேயே இன்று அதற்கான பாதிப்பை வளர்ந்து வரும் நாடுகளும், ஏழை நாடுகளும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லிபியாவில் ஏற்பட்ட புயலால் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 24 மணிநேரத்தில் 400 மில்லிமீட்டர் கனமழை பெய்ததால் அணைகள் உடைந்து இப்படியொரு கோரச் சம்பவம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 
அந்தளவுக்குக் காலநிலை மாற்றத்தின் தாக்கம் வீரியமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதேபோல கடந்த மாதம் இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், கட்டடங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதையும் பார்த்து மனம் பதை பதைத்தோம்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாட்டிய வெப்பஅலையால் ஒருநாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது இன்னொரு செய்தி. இப்படி இந்தியாவெங்கும் ஒருபுறம் வெள்ளத்தாலும், மறுபுறம் வெயிலாலும் சிரமப்படுவதைப் பார்த்து வருகிறோம்.

உலகமே காலநிலை மாற்றத்தால் இன்று பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது என்பதே உண்மை. இதனுடன் எல் நினோ உள்ளிட்ட பருவநிலை நிகழ்வுகளும் ஒருசேர, அதிகப்படியான பேரிடர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருகாலத்தில் காலநிலை மாற்றம் என்பதே வதந்தி என்றெல்லாம் மறுத்து வந்த நாடுகள்கூட இப்போது அதிகமான வெயில் மற்றும் மழை தாக்கங்களைக் கண்டு அஞ்சி அதை சரிசெய்ய முயற்சியெடுத்து வருகின்றன. வளர்ந்த நாடுகளும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.  

இந்நிலையில் காலநிலை மாற்றம் பற்றி தொடர்ந்து கலந்துரையாடிவரும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பிரபாகரன் வீரஅரசிடம் பேசினோம். ‘‘காலநிலை மாற்றம்னா வெறும்னே வெப்பம் அதிகரிப்பது மட்டும் கிடையாது. அது அனைத்து இயற்கை அமைப்புகளையும் சீரழிக்கக்கூடியது. இப்ப ஆர்க்டிக்ல பனி உருகுது என்றால், அதனால் கடல் நீரோட்டம், காற்றின் திசை எல்லாம் மாறுபடும். அங்கே மாறும்போது பசிபிக் பெருங்கடல்ல மாற்றம் ஏற்படும். அது தமிழ்நாட்டுக்கு புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாறி கனமழைையக் கொடுக்கும்.  

எங்கேயோ ஆர்க்டிக்ல உருகுகிற பனி, சென்னைக்கு அதிக மழைப்பொழிவை உண்டு பண்ணும் என்பதே காலநிலை மாற்றம். ஆர்க்டிக்ல பனி உருகக் காரணம் வெப்பம் அதிகரிப்
பதுதான். வெப்பம் அதிகரிக்கக் காரணம், அதிகப்படியான புதைபடிவ எரிபொருளை எரிப்பதுதான். அதாவது நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல்னு நாம் நிலத்திலிருந்து எடுக்கும் பொருட்களை புதைபடிவ எரிபொருள்னு (fossil fuel) சொல்றோம். இதை வளர்ந்த நாடுகள் அதிகளவில் பயன்படுத்தினதால் அதிலிருந்து வெளியேறிய வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒருபோர்வை போல நிற்குது.

பொதுவாக, சூரியக்கதிர்கள் பூமியில் பட்டு பிரதிபலித்துத் திரும்பும். ஆனா, இந்த வாயுக்கள் போர்வையாக மூடியிருக்கிறதால சூரியக்கதிர்களால் பிரதிபலித்து திரும்பமுடியல. இதனால், வெப்பம் தாறுமாறாக அதிகரிக்குது. இதையே உலகம் வெப்பமயமாகுதுனு சொல்றோம். இப்படி வெப்பம் அதிகரிக்கிறதால ஆர்க்டிக்ல பனிஉருகி புயல், கனமழையைக் கொடுப்பதுடன் கடல் மட்டத்தையும் உயர்த்துகிறது.

தமிழ்நாட்டுல 1076 கிமீ தூர நீளத்திற்கு கடற்கரை இருக்கு. அப்ப ஒரு மீட்டர் கடல் மட்டம் உயர்ந்தால் ஒரு மீட்டருக்குக் கீழுள்ள பகுதிகள் தண்ணீருக்குள் போயிடும். தவிர, கடல்நீர் நிலத்திற்குள் ஊடுருவிவிடும். அதனால், 2 கிமீ தூரம் நிலத்தடி நீர் உப்பாகிடும். அப்ப அருகிலுள்ள விளைநிலம் உப்பாகி விவசாயம் பாதிக்கப்படும். இது அரிசி விளைச்சலைப் பாதிக்கும். விலைவாசி உயரும். உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இப்படி சங்கிலித் தொடர் மாதிரியான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்...’’ என வேதனையுடன் சொன்னபடி, தொடர்ந்தார்.
 
‘‘நம் பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த 11 ஆயிரம் ஆண்டுகளாக 13.9 டிகிரி செல்சியஸாகவே இருந்தது. ஆனா, இதை கடந்த 140 ஆண்டுகள்ல, அதாவது 1880ல் இருந்து இப்பவரை 1.1 டிகிரிஉயர்த்தியிருக்கோம். அதனால, இப்ப பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக மாறியிருக்கு.இந்த வெப்பநிலை உயர்வைத் தடுக்க வேண்டி, பாரிஸ் ஒப்பந்தத்துல உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டாங்க. அதாவது, 2100ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வதைத் தடுக்கணும்னு சொன்னாங்க.   

ஆனா, அதிகரிக்கும் வெப்பத்தால் 1.5 டிகிரி என்பது 2030ம் ஆண்டிலேயே வந்திடும்னு சொல்றாங்க. அதாவது இன்னும் ஏழு ஆண்டுகள்லயே வந்திடும். 2100ம் ஆண்டில் 4.8 டிகிரி செல்சியஸ் உயரவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுறாங்க. 4.8 டிகிரி உயர்ந்தால் எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பதை யோசிக்கவே முடியல. இப்ப கோடைகாலத்தில் சென்னையின் அதிகபட்ச  வெப்பமாக 42 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதற்கே பலரும் புலம்பினோம். அப்ப 5 டிகிரி சராசரி வெப்பம் கூடும்போது சென்னையில் ஏழு முதல் எட்டு டிகிரி வரை அதிகரிக்கலாம். அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எளிமையாகச் சொல்லணும்னா, 1.5 டிகிரி வெப்பம் உயர்ந்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கும். 2 டிகிரி உயர்ந்தால் எதுவும் விளையாது. 3 டிகிரி செல்சியஸில் கடலில் மீன்கள் இருக்காது. இதுதான் காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்கும் ஐநாவின் அதிகாரபூர்வ அமைப்பான ஐபிசிசி கொடுத்த தரவு. ஆனா, போகிற போக்கைப் பார்த்தால் 2 டிகிரி செல்சியஸ் உயர்வு என்பது 2045ல் வந்திடும்போல இருக்கு. அதனால, ஐநா 2030க்குள் நாம் எடுக்கிற முடிவுகள்தான் நம்மை 2 டிகிரி செல்சியஸில் இருந்து காப்பாற்றும்னு எச்சரிக்கிறாங்க...’’ என்கிறவர், ஐபிசிசியின் தடுப்பு விஷயங்கள் பற்றிப் பேசினார்.  

‘‘காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஐபிசிசி ரெண்டு விஷயங்களைக் குறிப்பிடுறாங்க. ஒண்ணு அடாப்டேஷன்(Adaptation), ரெண்டாவது மிட்டிகேஷன் (Mitigation). இதுல மிட்டிகேஷன் என்பது காலநிலை மாற்றம் வராமல் தடுப்பது. அடாப்டேஷன் என்பது காலநிலை மாற்றம் வருமென தெரிந்து, பாதிப்பில் இருந்து தப்பிக்க எடுக்கும் நடவடிக்கைகள். உதாரணத்திற்கு, கடலோரத்தில் ஏதாவது ஒரு பகுதி இன்னும் இரண்டு ஆண்டுகளில் மூழ்கப்போகுதுனு தெரியவரும்போது முன்கூட்டியே அந்த மக்களுக்கு வேறு பகுதியில் வீடு தந்து
குடியமர்த்துவது.

அப்புறம், வராமல் தடுக்க புதைபடிவ எரிபொருள் எடுப்பதைத் தடுத்து, மாற்று எரிசக்திக்கு உடனடியாக மாறணும்னு சொல்றாங்க. குறிப்பா சூரியசக்தி, காற்றாலை மூலம் மின்சாரம் எடுக்கணும். வண்டிகளை எலக்ட்ரிக் ஆக மாற்றணும். மாற்று எரிபொருளை நோக்கி நகரணும். இதற்கு ஐபிசிசியில் உள்ள 160 நாடுகளின் விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிற நேரம்தான் ஏழு ஆண்டுகள்.

இதை செய்ய முடியுமானு கேட்டால் முடியும்தான். இப்ப ஓசோன்ல ஓட்டை விழுந்ததுனு முன்பு பேசினாங்க. ஓட்டையை சரி பண்ணலனா கேன்சர் வந்திடும்னு சொன்னாங்க. இதை 1985ம் ஆண்டு கண்டுபிடிச்சாங்க. பிறகு, இதை சர்வதேச ஒப்பந்தமாக மாற்றி, 1991ம் ஆண்டு இதுக்குக் காரணமாக இருக்கிற நூற்றுக்கணக்கான வாயுக்களை தடைசெய்தாங்க. 

இதனால, கடந்த 2006லேயே இதை சாத்தியப்படுத்தினாங்க. இப்ப ஓசோன் தன் ஓட்டையை தானே மூடிட்டு இருக்கு. 2066ல் ஓசோன் ஓட்டை சரியாகிடும்னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க. அப்ப 15 ஆண்டுகள்ல இத்தனை நாடுகள் சேர்ந்து ஒரு விஷயத்தை சரிபண்ணியிருக்கிறப்ப அதேமாதிரியான முன்னெடுப்பை இதுக்கும் செய்யமுடியும்தானே. பூமியைக் காப்பாற்றலாம்தானே...’’ என்கிறவர், இதற்கு வளர்ந்த நாடுகள் நிதி ஒதுக்கவேண்டும் என்கிறார்.  

‘‘வளர்ந்த நாடுகளே இத்தனை ஆண்டு காலம் தவறுகள் செய்தன. கடந்த 140 ஆண்டுகள்ல உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், சீனா போன்ற நாடுகள்தான் 70 சதவீத கார்பனை வெளியேற்றி இருக்காங்க. மீதியுள்ள நாடுகள் வெறும் 30 சதவீதம்தான். இப்ப இந்த நான்கு பேருடன் இந்தியாவும், ஜப்பானும் சேர்ந்திருக்காங்க. அப்ப இந்த ஆறு நாடுகளும் திருந்தினாலே போதும், காலநிலை மாற்றத்தைச் சரிசெய்யலாம்.  

இதுல வளர்ந்த நாடுகள் தங்கள் தவறை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்திட்டும் வர்றாங்க. முன்பு ரஷ்யா ஏழு சதவீதம் மாசு ஏற்படுத்திட்டு இருந்தாங்க. இப்ப அதை நான்கு சதவீதமாக குறைச்சிருக்காங்க. அப்புறம், ஐரோப்பிய யூனியன் 17 சதவீதம் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க இப்ப 8 சதவீதமாகக் குறைச்சிருக்காங்க.

இதுமாதிரி மற்ற வளர்ந்த நாடுகளும் குறைக்கிறாங்க. இதுதவிர, மீதியுள்ள மாசு ஏற்படுத்தும் காரணிகளையும் முழுவதுமாகக் குறைக்க 2030, 2040ம் ஆண்டுனு டார்கெட் அமைச்சிருக்காங்க.
ஆனா, இந்தியா 2 சதவீதம் மாசு ஏற்படுத்திட்டு இருந்தது. இப்ப 7 சதவீதமாக உயர்ந்திருக்கு. ‘நாங்க வளரும்நாடு, எங்ககிட்ட நிதியில்ல, அதனால நிலக்கரியைப் பயன்படுத்துறோம்’னு இந்தியா சொல்லுது.

அப்ப நிதி கொடுக்கவேண்டிய பொறுப்பு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கே இருக்கு. அவங்கதான் சூரியசக்திக்கும், காற்றாலைக்கும் பணம் தரணும். அதன்வழியாக முதல்ல சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை அதிகப்படுத்தி மாற்று எரிபொருளை நோக்கி நகரணும். இதைச் செய்தால்தான் நாம் பெரிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
அப்புறம், இந்தியாவைப் பொறுத்தவரை அடாப்டேஷன்ல நிறைய கவனம் செலுத்தணும். காரணம், நாம் உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு. தவிர, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கிற நாடு.

நாளைக்கு உணவுப் பஞ்சம்னு வந்தால் ரொம்ப சிரமமாகிடும். அதனால, நம்முடைய எல்லா திட்டங்களும் காலநிலை மாற்றத்தை உள்ளடக்கியதாகவே இருக்கணும். அதுவே காலநிலை மாற்றத்தின் விளைவுகள்ல இருந்து தப்பிக்கும் வழி...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் பிரபாகரன் வீரஅரசு.

தமிழக அரசின் துரித நடவடிக்கைகள்...

‘‘தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் வராமல் தடுக்க முப்பதுக்கும் மேற்பட்ட திட்டங்கள், கொள்கைகள் வகுத்திருக்காங்க. இதில், அடுத்த பத்து ஆண்டுகள்ல 20 ஆயிரம் மெகாவாட் சோலார் பார்க் உருவாக்கப் போறாங்க. இப்ப தமிழநாட்டுக்கு தேவை 18 ஆயிரம் மெகாவாட்தான். ஏற்கனவே 35 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் வச்சிருக்கோம். இதுல பாதி மாற்று எரிசக்தி. அதனால, அதிலிருந்து பாதி மின்சாரம் கிடைச்சிடும். அப்போ, நிலக்கரி பயன்பாடு தேவையில்லாம போயிடும்.

இதுதவிர கிரீன்மிஷன், வெட்லேண்ட் மிஷன், தமிழ்நாடு கிளைமேட் மிஷன், தமிழ்நாடு கிரீன் கிளைமேட் கம்பெனினு பல திட்டங்கள் கொண்டு வந்திருக்காங்க.
கிளைமேட் ஸ்டூடியோ அண்ணா பல்கலைக்கழகத்துல உருவாக்கியிருக்காங்க. இதன் முக்கியத்துவம் நம் அரசுக்கு புரிஞ்சிருக்கு. இருந்தும் இதை முழுமையாகக் கொண்டுவரணும்.
குறிப்பாக அடாப்டேஷன் பணிகள் அதிகம் செய்யணும். அப்புறம், சென்னைக்கு மட்டுமே காலநிலை செயல்பாட்டுத் திட்டம் கொண்டு வந்திருக்காங்க. இதை எல்லா மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தணும்...’’ என்கிறார் பிரபாகரன் வீரஅரசு.

யார் காரணம்?

* காலநிலை மாற்றத்திற்கு வசதி படைத்தவர்களே முதல் காரணமாக இருக்கிறார்கள். இந்தியாவில் ஒருவர் ஆண்டுக்கு 2 டன்னுக்கும் குறைவாகவே கார்பன் உமிழ்கிறார். இதுவே அமெரிக்காவில் ஒருவர் 15 டன் கார்பன் உமிழ்கிறார். இது நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது.

* ஐபிசிசி அறிக்கையின்படி உலகம் முழுவதும் நகரங்களே 70 சதவீதம் காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக உள்ளன. ஏனெனில், அங்கேதான் ஏசி, பிரிட்ஜ், கார், மின்சாரப் பயன்பாடு அதிகம்.
 
* 73.2 சதவீத காலநிலை மாற்றத்திற்குக் காரணம் எனர்ஜி செக்டர். இதில் மின்சார உற்பத்திக்கான எனர்ஜி, பெட்ரோல், டீசல் ஆகியவை அடங்கும். இதற்கு மாற்று கொண்டுவந்திட்டால் 73.2 சதவீத மாசினைக் குறைத்துவிட முடியும்.

இதுதவிர காடுகள், நீர்நிலைகளை அழித்தல் 14 சதவீத காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக உள்ளது. குப்பைகளை எரிப்பதும், கொட்டிவைப்பதும் 3.2 சதவீதம் காரணமாக இருக்கிறது. தொழிற்சாலைகள் 5 சதவீதம் காரணமாக உள்ளன.

பேராச்சி கண்ணன்