என்ன காரணம்..?



*27 வயது இளைஞருக்கு பரோட்டா சாப்பிடும்போது மாரடைப்பு...
*16 வயது சிறுமிக்கு குளிர் மற்றும் நொறுக்குத் தீனியால் மாரடைப்பு...
*14 வயது சிறுமிக்கு டியோடரண்ட் அடித்தபோது மாரடைப்பு...
*12 வயது சிறுவனுக்கு காரணமே இல்லாமல் மாரடைப்பு...

25 வயதான இளைஞர் உடற்பயிற்சிக்கூடத்தில் மாரடைப்பால் மரணம், 12 வயது சிறுவன் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம், 38 வயது நபர் விமானத்திலேயே மாரடைப்பால் உயிரிழப்பு... இவையெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் செய்தித்தாள்களில் வந்த நிகழ்வுகள். இவற்றைப் படிக்கும் அனைவருக்கும் ஒருவித பயம், பதற்றத்தை உண்டாக்கும் அளவு முக்கியமான நிகழ்வுகள்.
ஏன் இப்படி நிகழ்கிறது? பன்னிரண்டு வயதுச் சிறுவனுக்கு மாரடைப்பு வருமா? ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவருக்கு ஹார்ட் அட்டாக் வருமா? இதை எப்படி முன்கூட்டி அறிவது? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்... எனப் பல கேள்விகள். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம். உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்ய இரத்த ஓட்டம் அவசியம். இரத்த ஓட்டத்தின் மூலமே உறுப்புகள் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவுப் பொருட்களையும் பெறுகின்றன. ஒரு மோட்டார் பம்ப் போல இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புவது இதயம். ஆனால், அந்த இதயம் வேலை செய்வதற்கும் இரத்த ஓட்டம் தேவை. அதனை ‘Coronary Arteries’ எனப்படும் இதயத் தமனிகள் மூலம் பெற்றுக் கொள்கிறது.

இந்த இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவது மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக்.இதயத் தசைகளின் பிரச்னைகள், இதயத் தமனிகளில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள், இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் அல்லது சில காரணங்களால் இதயம் தனது வேலையை நிறுத்திக் கொள்வது இதயச் செயலிழப்பு எனப்படும்.

ஆனால், நடைமுறையில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கான வரையறைகளைப் புரிந்து பயன்படுத்துவோர் வெகுசிலரே. எனவே பெரும்பாலான மரணங்கள் ஹார்ட் அட்டாக் எனப்படும் ஒரே பெயரின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. நடுத்தர வயதினர், வயதானோர்களுக்கு திடீரென இதயச் செயலிழப்பு ஏற்பட முக்கிய காரணம் மாரடைப்பு. அதாவது இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. ஆனால், இளம் வயதினருக்கு உடனடி இதயச் செயலிழப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

Hypertrophic cardiomyopathy எனப்படும் இதயத் தசைப்பெருக்க நோய், பிறப்பின் போதே இதயத் தமனிகளில் ஏற்படும் குறைபாடுகள், இதய செல் அயனிப் பரிமாற்றக் கடத்திகளின் குறைபாடுகள் (Inherited channelopathies), இதயத்தசை அழற்சி (myocarditis), இதயத்துடிப்பு கடத்தல் குறைபாடுகள், சீரற்ற இதயத்துடிப்பு நோய்கள் போன்றவை முக்கிய காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

இவை தவிர இதயத்தின் சுவர்களில் பிறப்பின் போதே இருக்கும் ஓட்டைகள், அடைப்புகள் போன்றவற்றாலும் இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.

சிறுவயதில் விளையாடும் போது மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவது போன்றவை இதயம் சார்ந்த பிறவிக் குறைபாடுகளின் முக்கிய அறிகுறிகள். இந்தக் குறைபாடுகள் உடையவர்களுக்கு திடீரென இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்பு அதிகம். இதை sudden cardiac death எனக் கூறுவார்கள். குடும்ப உறவுகளில் காரணம் இல்லாத இளவயது மரணங்கள் ஏற்பட்டிருந்தால் அவை இதயச் செயலிழப்பாக இருக்கலாம். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.

முறையான பரிசோதனைகள் மூலம் பிறவி இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்தால் அவற்றிற்கான சிசிச்சைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இளவயது இதயச் செயலிழப்பு மரணங்களைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளது. 35 வயதிற்கு மேல் ஏற்படும் இதயச் செயலிழப்புகளுக்கு முக்கிய காரணம் மாரடைப்பு, அதாவது இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பு. இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படவதை இரண்டு விசயங்கள் தீர்மானிக்கின்றன.

1. இரத்தக் குழாயின் உள்படலமான எண்டோதீலியப் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள்.

2. இரத்தத்தின் அதிக உறைதன்மை.

அதிக இரத்த அழுத்தத்தால் இரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், அதிக இரத்த சர்க்கரையால் இரத்தக்குழாய் பாதிப்பு அடைந்தவர்கள், LDL எனப்படும் கெட்ட கொழுப்பு படிவதால் பாதிக்கப்பட்டவர்கள், எலக்ட்ரான் மின்னேற்ற அயனிகள் (free radicals) பாதிப்பு, மரபணுக்குறைபாடுகளால் பலமற்ற இரத்தக் குழாய் உடையவர்கள், ஹைப்பர் ஹோமோசிஸ்டீனீமியா நோய் உடையோர் போன்றோருக்கு எண்டோதீலிய படல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இவற்றால் இரத்தக் குழாயின் உட்பகுதியில் கொழுப்புப் படிதல் ஏற்படுகிறது. தண்ணீர்க் குழாய்களில் உப்புப் படிவது போல கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து ஒரு கட்டத்தில் முழுமையான அடைப்பை ஏற்படுத்துகிறது. சிறிய அளவுள்ள கொழுப்புப் படிமம் திடீரென இரத்தக்குழாய் சுவரில் இருந்து உடைவதாலும் மாரடைப்பு ஏற்படும். அதிக இரத்த உறைதன்மையால் இரத்தக்குழாயின் உள்ளே இரத்தம் கட்டிக் கொள்வதாலும் மாரடைப்பு ஏற்படும்.

இப்போது, திடீரென இதயச் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களை நம் புரிதலுக்காக இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல்வகை - பிறவியிலேயே இதய பாதிப்பு உடையவர்கள்.இரண்டாவது வகை - இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பிற்கு ஆளாகின்றவர்கள்.

முதல் வகை: பெரும்பாலும் இளம் வயதில் ஏற்படுகின்றது. சிறுவயதில் அதிதீவிர விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்முன் இதயக் குறைபாடுகள் இருக்கின்றனவா என பரிசோதித்துக் கொள்வது நலம்.

குறிப்பாக இசிஜியில் மாறுபாடு உடையவர்கள், குடும்ப உறவுகளில் காரணமறியா இளவயது மரணம் நிகழ்ந்த குடும்பத்தவர்கள் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்து இதய மருத்துவரின் அறிவுரைகளைப் பெற வேண்டும்.

இரண்டாவது வகை: நடுத்தர வயது அல்லது அதற்குப் பின் மாரடைப்பால் நிகழ்கிறது. 35 வயதைக் கடந்தவர்கள் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை பெறுவது நலம்.

மாரடைப்பை அதிகரிக்கும் காரணிகளான தூக்கமின்மை, புகைபிடித்தல், உடற்பருமன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சிகள், இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்தல், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், இரத்தக் கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்தல், புகைபிடித்தலைத் தவிர்த்தல், உடற்பருமனைக் கட்டுக்குள் வைத்தல் போன்ற வாழ்வியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மாரடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்துக் காரணிகள் இருப்பவர்கள் உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன் உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு, மருத்துவர்களின் அறிவுரையுடன் அதற்குரிய சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதற்குப் பிறகு உடற்பயிற்சிகளை ஆரம்பித்தால் திடீர் இதயச் செயலிழப்புகளைத் தடுக்கலாம். திடீர் இதயச் செயலிழப்பு ஏற்பட்டால் உயிர்காக்கும் முதலுதவி செய்யக்கூடிய அவகாசம் கூட சிறிது நேரமே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உடன் இருப்பவர்கள் BLS எனப்படும் Basic Life Support முதலுதவிப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டால் ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவ உதவி வரும்வரை முதலுதவி செய்ய வசதியாக இருக்கும்.

பல நிறுவனங்கள் இந்தப் பயிற்சியை நடத்துகின்றன. மருத்துவத்துறைக்குத் தொடர்பில்லாதவர்களும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். AED (Automated External Defibrillator) எனப்படும் இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளை உடற்பயிற்சிக் கூடங்களில் பொருத்தலாம். அவற்றை இயக்க பயிற்சி பெறுவதும் எளிது. திடீர் இதயச் செயலிழப்பு ஏற்பட்டால் எப்படி முதல் உதவி அளிப்பது எனும் ஒத்திகைகளைப் பள்ளி, கல்லூரிகளில், உடற்பயிற்சிக் கூடங்களில் நடத்தலாம். இவற்றின் மூலம் திடீர் இதயச் செயலிழப்பு மரணங்களைத் தவிர்க்கலாம்.

டாக்டர் சென் பாலன்