சிறுகதை - வக்கிரம்
கீதா முற்றத்தில் மலைமாதிரி குவிந்திருந்த பாத்திரங்களை பரபரப்பாக தேய்த்து விளக்கிக்கொண்டிருந்தாள். உள்ளே சமையலறையில் எழிலரசி பாத்திரங்களை வேண்டுமென்றே “டங் டங்” என உருட்டிக்கொண்டே, மேலும் மேலும் பருக்கை ஒட்டிய அழுக்குப் பாத்திரங்களைக் கொண்டு வந்து முற்றத்தில் ஏணம் விளக்கிக் கொண்டிருந்த கீதாவிடம் போட்டுக்கொண்டேயிருந்தாள். “உன்னை லீவு போடுறதா இருந்தா, முன்கூட்டியே சொல்லிட்டு லீவு போடுன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்... திருவிழாவுக்கு விருந்தாளிங்க வந்து குவிஞ்சிருக்காங்க. நீ பாட்டுக்கும் வராம போயிட்ட. உனக்கெல்லாம் எவ்வளவு செஞ்சாலும் நன்றியே இருக்காது.
 புருஷன் இல்லாம, ஒத்தை பொம்பளை புள்ளைய வச்சிட்டு கஷ்டப்படுறியேன்னு வேலைக்கு வச்சிக்கிட்டேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...” என்று மூச்சு விடாமல் கத்திக்கொண்டிருந்தாள் எழிலரசி.“அக்கா! பாப்பாக்கு உடம்பு சரியில்லைக்கா. என்னன்னே தெரியல. கலகலப்பாவே இருக்க மாட்டேங்குது. புள்ளை சரியா சாப்பிடுறது இல்லை. படிக்கறது இல்லை. நைட்டெல்லாம் தூக்கத்துல ஒரே அலறல் அக்கா.
அதான் காடந்தேத்தி அய்யனார் கோயிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சி முடிகயிறு வாங்கிட்டு வந்தேன்க்கா. இங்க பாருங்க கையில முடிகயிறு கட்டிருக்கேன். அவரு போனதுக்கப்பறம் ஒத்த பொட்டப்புள்ளைய வச்சிட்டு நாய் படாத பாடு படுறேன்க்கா.
இந்த சாய்பாபா எப்பதான் கண்தொறப்பாரோ தெரியல. படுக்ககூட இடமில்லாம அண்ணன் வீட்டுல ஒண்டிட்டு இருக்கேன்க்கா... எங்கண்ணி ஒரு ஊமக்கோட்டான். ‘ஊமை ஊரைக்கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக்கெடுக்கும்’னு சும்மாவா சொன்னாங்க. என் புள்ளைய நின்னா குத்தம் சொல்றா, உட்காந்தா குத்தம் சொல்றா. நைசா எங்கண்ணன்ட்ட போட்டுக்கொடுத்துட்டு, என்ட நல்லவ மாதிரி நடிக்கிறாக்கா.
எங்கண்ணன் தங்கமான மனுசன். என்மேலயும், பாப்பா மேலயும் அவ்வளவு பிரியம். எங்க போனாலும் பாப்பாவுக்கு எதாவது வாங்காம வரமாட்டாரு. என் நிலமையப் பாருங்க, சிக்கி சீரழியுறேன். அவரு இருந்தா இந்த நிலமை எனக்கு வருமா?” எனக் கூறிக்கொண்டே கண்கலங்கியவளைப்பார்த்த எழிலரசிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
‘‘இருடி அழாத! கடவுள் எல்லாருக்கும் நல்லது செய்வான். உன் பொண்ணு படிச்சி, பெரியாளா வந்து உன்னை உட்கார வச்சி சோறு போடுவாடி. அழாத. இரு டீ போட்டுத்தர்றேன்...” என்று திரும்பப் போனவளிடம்,“அக்கா பாப்பாக்கு பஞ்சு... அதான் அக்கா விஸ்பர் இருந்தா நாலு கொடுங்கக்கா. மாசக்கடைசி, யாருவீட்லயும் இன்னும் சம்பளம் வாங்கல. தீட்டாவுற சமயம். தப்பா நினைச்சிக்காதீங்க அக்கா. ஆறாவுதுலயே யாரு இத வயசுக்கு வரச்சொன்னா. அது வேற பெரிய ரோதனையா இருக்குக்கா.
ஒண்ணுமே தெரியல அந்தப்புள்ளைக்கு. டிரஸ்ஸெல்லாம் போட்டு இழுப்பிக்குது. நான் எதுக்குன்னு பார்க்கறது. வேலைக்கு போவனா, புள்ளைய பார்த்துட்டே உட்காந்துருப்பனா... எல்லாம் என் தலைவிதி...” என அலுத்துக் கொண்டாள் கீதா.“தர்றேண்டி. வாங்கிட்டு போ. அழகுப் பொண்ணுடி உன் பொண்ணு. நீ வேணா பாரு. மாப்பிள்ளை வந்து கொத்திட்டு போயிடுவான்...” என்று சொல்லிவிட்டு டீ போட உள்ளே சென்றாள் எழிலரசி.
தனியாக வைத்திருந்த கரிப்பாத்திரங்களை, சபீனாவும், பொடியாக நுணுக்கி வைத்திருந்த செங்கல் தூளையும் போட்டு, கரகரவென விளக்க ஆரம்பித்தாள் கீதா. பாத்திரத்தில் கல் துகள் பட்டு எழும்பும் சத்தத்தில் பல் கூசியது.விளக்கிக்கொண்டே, மகளைப்பற்றிய நினைப்புக்குள் மூழ்கினாள் கீதா. ஏன் இந்த ரம்யா குட்டி இப்படி பண்ணுது? போன மாசம் வரைக்கும் துறுதுறுன்னு ஓரிடத்தில நிக்காம ஓடிட்டே இருக்குமே. சாப்பிடாம மெலிஞ்சி போய், எங்கயோ வெறிச்சிப்பார்த்துக்கிட்டே உட்காந்திருக்காளே.
ஸ்கூல் விட்டு வந்ததும் சாப்பிடக்கூட இல்லாம, சுருட்டிக்கிட்டு படுத்துடுதாம்ல்ல. அண்ணி சொன்னாவோளே, மேனகாட்ட கூட சரியா விளையாடுறதில்லையாம்ல்ல, என்ன மேனகாக்கு ரம்யாவ விட ஒரு வயசு கம்மி, என்னதான் அண்ணன் பொண்ணுன்னாலும், ரம்யா அழகு, மேனகா கிடையாது... என எதேதோ சம்பந்தம் சம்பந்தமில்லாமல் நினைத்துக்கொண்டிருந்தவள் சீக்கிரம் வீட்டுக்குப் போய் மகளைக் காணவேண்டும் என வேகமாக வேலைகளைப்பார்க்க ஆரம்பித்தாள்.
எழிலரசி போட்டு வந்து கொடுத்த டீயைக்கூட அவளுக்கு குடிக்க மனசில்லை. மகள் ஞாபகம் நெஞ்சை அடைத்தது. யாராவது பார்க்கிறார்களா என சுற்றிலும் பார்த்துவிட்டு, டீயை சாக்கடையில் ஊற்றி விட்டு, விரைவாக வேலையை முடிக்க ஆரம்பித்தாள்.
அந்த ஊரின், கோயிலுக்கு அருகே ரம்யா படிக்கும் பள்ளிக்கூடம் இருந்தது. கோயில் தேர் அந்த பள்ளிக்கு அருகிலேயே எப்பொழுதும் கிடக்கும். அதில் ஏறி, கயிறு கட்டி இழுக்க செய்யப்பட்ட வளையங்களில் தலைகீழாக, சர்க்கஸில் செய்வதுபோல் உடம்பை ரப்பராக வளைத்து உள்ளே நுழைந்து வெளிவருவாள் ரம்யா.
அந்தத் தேரின் நிழலிலேயே, கொடுக்காப்புளி, இலந்தைப்பழ ஜூஸ், உப்பு மாங்காய், கமர்கட் விற்றுக்கொண்டு லெட்சுமி பாட்டி உட்காந்திருப்பாள்.இவளைப்பார்த்துவிட்டால் போதும், “வயசுக்கு வந்த புள்ள அடக்கஒடுக்கமா இருக்கப்போறீயா, இல்லையா... உங்க அம்மாட்ட சொல்லவாடி...” என மிரட்டிக் கொண்டேயிருப்பாள்.
அன்று அப்படித்தான் ரம்யா விளையாட வந்ததுமே அவள் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு போனாள் வாசுகி. இவளின் உயிர்த் தோழி. படிப்பில் இரண்டு பேருக்கும் சரியான போட்டியிருந்தாலும், இரண்டு பேரும் பிரியமான தோழிகள்.
“ரம்யா இங்க வா... யாருட்டையும் சொல்லாத. உனக்கு ஒண்ணு காமிக்கிறேன்...” என சொல்லிவிட்டு பள்ளியை விட்டு சிறிது தூரத்திலிருந்த குடிசைக்கு அழைத்துக்கொண்டு போனாள்.
அந்தக் குடிசை இவளுக்குத் தெரிந்ததுதான். டெய்லர் கடை. அந்த ஊரிலிருந்த ஒரே ஒரு டெய்லர் கடை இதுதான். குடிசையின் வாசலில் இருந்த கதவில், சற்று உயரே இருந்த ஓட்டையில் ரம்யாவின் தோழிகள் எக்கி எக்கி கண்ணை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரம்யாவும், வாசுகியும் பார்த்தார்கள். உள்ளே சுமதி மேல்சட்டையைக் கழற்றிவிட்டு டெய்லரின் முன்பு நின்று கொண்டிருந்தாள். சுமதி, ரம்யாவோடுதான் படிக்கிறாள். ஆனால், எதையும் புரிந்துகொள்ளாதவளாக, ‘அ’ னா, ‘ஆ’ வன்னாகூட எழுதத்தெரியாதவளாக, வகுப்பிலேயே மிக உயரமாக, எல்லாரையும் விட பெரிய பெண்ணாகத் தெரிவாள். டீச்சர் அவளை ‘பைத்தியத்தையெல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பி நம்ம உயிர எடுக்குறாங்க’ன்னு திட்டுவதும் உண்டு.இந்தக் காட்சியைப் பார்த்ததும் ரம்யாவிற்கு பக்கென்றிருந்தது. ஆனால், எல்லாருமே இதை விளையாட்டாகப் பார்த்துவிட்டு, ஓடிவந்து விட்டனர்.
இப்படியே விளையாட்டாக, இரண்டு மாதங்கள் கழித்து அன்று டீச்சர் வருகைப்பதிவேட்டில் அனைவரையும் அழைத்துக்கொண்டிருந்தபோது, “வாசுகி! வாசுகி... சுமதி உங்க வீட்டு பக்கம்தான? ஏன் ஒரு வாரமா வரல...” எனக் கேட்க,“டீச்சர்... சுமதி நேத்து செத்துப்போயிட்டா டீச்சர்...” அழுது கொண்டே சொன்ன வாசுகியை அனைவரும் அதிர்ச்சியாய் திரும்பிப் பார்த்தார்கள்.
வாசுகி அழுதுகொண்டே ரம்யாவிடம் மட்டும் ரகசியமாக “சுமதி மாசமா இருந்துச்சாம்... அதான் அவுங்க அப்பா விஷத்தை வச்சி கொன்னுட்டாராம். எங்கம்மா யாருட்டையும் சொல்லக்கூடாதுன்னு சொன்னிச்சி. நீயும் யாருட்டையும் சொல்லாத. என் தலைல அடிச்சி சத்தியம் பண்ணு...” என்றாள்.
தலையில் கைவைத்து சத்தியம் பண்ணிக்கொண்டே “மாசமா இருக்கறதுன்னா என்னடி?” எனக் கேட்டாள் ரம்யா.“தெரியலடி. வயசுக்கு வந்துட்டா, ஆம்பளைங்க தொட்டுட்டா, தீட்டு வரலேன்னா மாசமாகிடுவாங்களாம்...” என்றாள் வாசுகி.அத்தோடு அரையாண்டு தேர்வு வந்ததும் பள்ளியில் கொஞ்சம் கொஞ்சமாக சுமதியை மறந்தே போனார்கள்.
அன்றிரவு அம்மாவும், மாமியும் ரம்யாவையும், மேனகாவையும் தூங்க வைத்துவிட்டு இரண்டாம் காட்சி சினிமாவுக்கு போய்விட்டார்கள். எப்பவும் இப்படித்தான் நடக்கும். இரவு கண்விழித்து தேடினால் அம்மா பக்கத்தில் இருக்க மாட்டாள். காலையில் இவளது தலையில் பேன் எடுத்து குத்திக்கொண்டே, படத்தின் கதையைச் சொல்லுவாள். இவளுக்கும் அது மிகவும்பிடிக்கும்.
நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென ரம்யாவிற்கு விழிப்பு வந்தது. துளிக்கூட வெளிச்சமே இல்லை. ஏதோ ஒன்று வித்யாசமாக உணர ஆரம்பித்தாள். நெஞ்சின் மீது பாரமாக, வெப்பமாக, ஏதோ ஒன்று அழுத்தமாக ஊர்ந்துகொண்டிருக்க...
அது கைகள். மிக கனமான மாமாவினுடைய கைகள். மிட்டாய் வாங்கிக்கொடுத்து கொஞ்சிய கைகள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயிருந்தாள். அசையவேண்டும் என்றோ, சத்தம் போட வேண்டும் என்றோ தோன்றாமல், சவம் மாதிரி உடல் விறைத்துப்போயிருந்தது. பயந்து போய் அந்த ஐந்து நிமிடங்கள் உணர்வில்லாமல், நடப்பதை நம்பமுடியாமல், கையைத்தட்டிவிடக்கூடத்தோணாமல், மனதிற்குள் துடித்துக் கொண்டிருந்தாள். எழுந்து உடனே வெளியே ஓடவேண்டும் போல அவளுக்கு இருந்தது. ஆனால், என்ன செய்வதென்றே தெரியாமல் தொண்டை அடைக்க செயலற்று அப்படியே கிடந்தாள்.
எங்க அப்பா இருந்தா, என்னை இப்படி விட்டுருப்பாரா’ என்ற கழிவிரக்கம் உள்ளே சுழன்றடித்து அழுகை வந்தது.
அவள் விழித்திருந்தது, மாமாவுக்குத் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. அவனை அடியோடு கொன்று போட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், எதுவும் செய்ய முடியாமல் மிகவும் பயந்து போயிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் அவள் கண்விழித்த போது கீதாவும், மாமியும் சினிமா பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். யாரையும் பார்க்கவே ரம்யாவிற்குப் பிடிக்கவில்லை. மாமா நடமாடும் வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்கையாவது வெகுதூரம், அவன் பார்வையில் படாத தூரத்திற்கு ஓடிவிட வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. குளியலறையில் வெகுநேரம் அழுதுகொண்டேயிருந்தாள். சாப்பிடப் பிடிக்கவில்லை. மாமியைப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் இதைச்சொல்ல பயமாக, எதோ ஒன்று தடையாக இருந்தது. அந்தத் தெரு முக்கிலிருந்த காளியம்மனிடம், மாமாவிற்கு கைகால் விளங்காமல் போகவேண்டும், பிச்சை எடுக்க வேண்டும், அவன் துடிதுடித்து சாக வேண்டும் என மனதிற்குள் தினமும் வேண்டிக்கொண்டாள்.அவளுக்கு இரண்டு நாட்களாக ரொம்ப யோசனையாக இருந்தது. ஏன் வழக்கமாக பத்தாம் தேதி வரும் தீட்டு, இந்த முறை பத்தாம் தேதி வரவில்லை.
“அய்யய்யோ! வாசுகி சொன்னாளே, ஆம்பளைங்க தொட்டா தீட்டு வரலேன்னா மாசமா இருப்பாங்கன்னு... அப்ப நான் மாசமா இருக்கேனா, என்னைத் விசம் வச்சிக்கொன்னுடுவாங்களா? நான் என்ன தப்பு செஞ்சேன். மாமாதான என்னைத் தொட்டாரு. நான் மாசமா இல்லை.
என்னைக் கொன்னுடாதீங்க. நான் சாக மாட்டேன்...’’ எனவும்,‘‘இல்லை... நான் சாகணும். சுமதி மாதிரி செத்துப்போகணும். சின்னப்புள்ளைங்க மாசமானா செத்துதானே போகணும். விஷம் வச்சா கசக்கும். நானே செத்துப்போயிடுறேன். நான் மாசமா இருக்க மாட்டேன்...’’ எனவும் இருவாறாக மனதிற்குள்ளாகவே தினமும் புலம்பினாள். ‘கர்ப்பிணிப்பெண்கள் நன்றாக சாப்பிட்டால்தான் குழந்தை நன்றாக வளரும்’ என டிவியில் கூறுவதைக் கண்டவுடன், ‘அப்ப நான் சரியா சாப்பிட மாட்டேன். அப்பதான் என் வயித்துல இருக்கற குழந்தை வளராது’ என கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட்டவளாக ரம்யா மாறிக் கொண்டிருந்தாள்.அம்மாவிடம் சொல்ல வேண்டும் என வரும்பொழுதெல்லாம், அவள் மாமாவைப்பற்றி புகழ்ந்தவுடன், தங்களுக்கு போவதற்கு போக்கிடம் வேறு இல்லையென்று புலம்பியதைக் கண்டதும், சின்னஞ்சிறு மனசு மனதிற்குள்ளாகவே புலம்பியது.
அக்கா... டாக்டர் அக்கா... என் பொண்ணுக்கு இந்த மாசம் தீட்டு இரண்டு நாள் தள்ளிப்போச்சுக்கா... ஏன்...” என டாக்டர் வீட்டில் வேலை செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள் கீதா. “இப்பதானே உன் பொண்ணு வயசுக்கு வந்துருக்கு. அது சரியா, முறையா, மாதசுழற்சி வர ஒரு வருசம் ஆகும். நல்லா சாப்பாடு கொடு. போறப்ப சொல்லு, இரும்புச்சத்து டானிக் தர்றேன். இரண்டு வேளை கொடு. சரியாகிடும்...” என்றாள் டாக்டர் மது.
“சரிக்கா. பாவம் புள்ளை சாப்பிடாம மெலிஞ்சி போயிட்டே இருக்கு. நல்லா படிப்பாக்கா. உங்கள மாதிரிதான் பெரிய டாக்டராகணும்ன்னு சொல்லிட்டு இருக்கா...” என்று பெருமிதமாகச் சொன்னாள் கீதா.“சூப்பர். உன் பொண்ண நல்லா படிக்கச்சொல்லு.
நானே டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்...” என்றாள் மது.“சரிக்கா. நான் நாளைக்கு பாப்பாவ உங்கள்ட்ட கூட்டிட்டு வர்றேன். நீங்க கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கக்கா...”என்றவாறே விரைவாக வேலையை முடித்துவிட்டு, ரம்யாவிற்கு டானிக் வாங்கிக்கொண்டு, அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தாள் கீதா.
தூரத்திலிருந்து பார்க்கும்போதே வீட்டின் முன்பாக, நிறைய தலைகள் தெரிந்தன. இவளுக்கு வயிற்றை எதுவோ செய்தது.
இவளுக்கு அறிமுகமில்லாத இருவர், “சின்னப்பொண்ணு... ஏழாவதுதான் படிக்கும். எதுனாலவ் பிரச்னையா இருக்கும். கேணியில விழுந்து செத்துப்போயிட்டு. நாம நம்ப பொழப்பை பார்ப்போம் வாங்க...” எனப்பேசிக்கொண்டு போவதைப் பார்த்தாள் கீதா. யாரோ, யாரையோ சொல்லிட்டுப் போறாங்க என்று டானிக்கை இறுகப் பிடித்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.
- தேவி லிங்கம்
|