விஜய் 10!
‘‘விஜய் சார் சொல்லி தான் ரஜினி சாருக்கு கதை சொன்னேன். ‘ஜெயிலர்’ ஷூட்டிங்க்கு போயாச்சா என்று விஜய் சார் போன் பண்ணினார்...’’ - நெல்சன். ‘‘விஜய்ணா இல்லைன்னா ‘ஜவான்’ பண்ணியிருக்க மாட்டேன்...’’ - அட்லீ.இப்படி விஜய்யை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அல்லது படமெடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விஜய்யுடன் நடித்தால் மார்க்கெட்டைப் பிடித்துவிடலாம் என நினைக்கும் நடிகைகள்...
 என ஆளாளுக்கு விஜய்யைப் பற்றி சொன்னவைதான் இப்பொழுது இணையத்தில் வைரலாக இருக்கின்றன. கூடவே மூத்த பத்திரிகையாளர்கள் யூடியூப், இன்ஸ்டா கிராமில் சொல்லும் சில சம்பவங்கள்தான் தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.ஆனால் விஜய், தனிப்பட்ட வாழ்க்கையில் வேற மாதிரி. திரையில் நாம் பார்க்கும் விஜய்க்கும், அவரது உண்மையான கேரக்டருக்கும் இடையே அவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் விஜய் பர்சனல் தொடர்பான 10 குணங்களைப் பார்க்கலாம்.
 *ஷூட்டிங் எத்தனை மணிக்கு ஆரம்பித்தாலும், முன்கூட்டியே சொல்லிவிட்டால் சொன்ன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாகவே வந்து, மேக்கப் போட்டுக்கொண்டு தயாராகிவிடுவார் விஜய்.
ஆனால், மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் வைப்பதை பெரும்பாலும் விஜய் விரும்புவது இல்லை. காட்சிக்கு தேவைப்பட்டால், முக்கியமான காட்சிகள் என்றால் மட்டுமே 6 மணிக்கு மேல் நடிப்பார். இரவு 2 மணி என்றாலும் நடித்துவிட்டு செல்வதை இன்றும் தொடர்கிறார் விஜய்.
*ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போய் டைனிங் டேபிளில் உட்கார்ந்தால் செல்ஃப் சர்வீஸ்தான். பதினைந்து வயதிலிருந்தே இந்த பழக்கம். அது இன்றுவரை தொடர்கிறது. சாப்பாட்டுத் தட்டில் முதல் முறை வைக்கும் அளவு மட்டும்தான். அதற்குப் பிறகு கூடுதலாக உணவு எடுத்து வைத்து சாப்பிடும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் அரை வயிறு சாப்பாடுதான். இதுதான் அவரது ஸ்லிம்மான உடல் வாகுக்குக் காரணம்.
*விஜய்யின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று ஒவ்வொரு பாடலிலும் டான்ஸ் மாஸ்டர் வைத்திருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்களை ரசித்தபடியே, ரசிகர்களும் ரசிக்கும்படி ஆடுவது. சில பாடல் வரிகளுக்கு கடினமான டான்ஸ் மூவ்மெண்ட்கள் இருந்தாலோ அல்லது ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்தாலோ ஷூட்டிங் முடிந்ததும் நேராக வீட்டிற்குப் போய் வெறும் தரையில் தலையணை கூட இல்லாமல் படுத்துக் கொள்வார் விஜய். இப்படித்தான் உடல் வலிகளிலிருந்து ரிலாக்ஸ் செய்து கொள்வது வழக்கம்.
*சாப்பாட்டைப் பொருத்தவரை விஜய்க்கு விதவிதமான உணவு வகைகள் வேண்டுமென்ற கட்டாயமில்லை. சிம்பிளான ஏதாவது ஒரு மெனு இருந்தால் போதும். இருப்பதை வைத்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடுவார். சாப்பாட்டு விஷயத்தில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. முன்பெல்லாம் விஜய் ரிலாக்ஸ் ஆக இருந்தால், நேராக சமையலறைக்குச் சென்று மொறு மொறு தோசை சுடுவது வழக்கம்.
*விஜய் யாரையும் கோபத்தில் கடிந்து பேசுவதில்லை. தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்களைத் திட்டினாலும் விஜய்க்கு பிடிக்காது. எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும், யாராவது தப்பு பண்ணினாலும் கூட நாலு பேர் முன்னிலையில் அவர்கள் செய்த தப்பைச் சொல்லி அவர்களை காயப்படுத்தக் கூடாது என்பார். எந்த பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை தனியாக அழைத்து மெதுவாகச் சொல்லவேண்டும் என்பது விஜய்யின் பாலிஸி.
*மிஸ்டர் கூல் ஆக விஜய் இருந்தாலும், எப்பொழுதாவது டென்ஷன் ஆனாலோ, மூட் அவுட்டானாலோ விஜய் செய்யும் முதல் காரியம் டிவியில் காமெடி காட்சிகளைப் பார்க்க ஆரம்பிப்பதுதான்.இந்த காமெடி கலாட்டாக்கள்தான் விஜய்க்கு ரிலாக்ஸ் அளிப்பவை. வீட்டிலும் சரி, தனது காரிலும் சரி காமெடி காட்சிகளின் கலெக்ஷனை வைத்திருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி - செந்தில் காமெடி கலாட்டாக்களை ரசிப்பது விஜய்க்கு பிடிக்கும்.
*விஜய்க்கு பொசுக்கென்று கோபம் வருவதில்லை. கோபம் வந்தால் மிஸ்டர் கூல் செம ஹாட்டாகி விடுவார். மனதில் இருப்பதை எல்லாம் மளமளவென கொட்டிவிடுவார். இந்த கோபம் எல்லாம் கொஞ்ச நேரம்தான். நெருக்கமான நண்பர்கள் என்றால், கோபம் தணிந்ததும், எந்த தயக்கமும் இல்லாமல் ஸாரி கேட்டுவிடுவார்.
*விஜய்க்கு லேட்டஸ்ட் கார்கள் மீது செம லவ். மார்க்கெட்டில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் கார்களை ஆர்வத்துடன் ரசிப்பது விஜய்யின் பழக்கம். மார்க்கெட்டிற்கு வரும் லேட்டஸ்ட் கார்களை விரும்பி வாங்கினாலும் அவருடைய ஃபேவரிட் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள்தான்.
ஷூட்டிங் செல்லும்போது, ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்டால், மாருதி ஸ்விஃப்ட்டுக்கு மாறியபின் அவரே காரை ஓட்டுவது வழக்கம். பக்காவான கண்ட்ரோலுடன் கார் ஓட்டுவார். விஜய்க்கு கருப்பு நிற கார்கள்தான் ஆல் டைம் ஃபேவரிட். தன்னுடைய எல்லா கார்களுக்கும் நினைவில் இருப்பது மாதிரியான ஃபேன்ஸி நம்பர்களைத்தான் விரும்பி வாங்குவார்.
*இப்போது விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தினால், அவர் அதிகம் வெளியே செல்ல விரும்புவதில்லை. முடிந்தவரை அவர் படங்கள் பார்க்க திரையரங்குகளுக்கு செல்வதும் இல்லை.
ஆரம்பத்தில், அதாவது ‘கில்லி’ படத்திற்கு முன்பு வரை புதுமுகங்கள் நடித்த படங்களின் பிரீவியூ காட்சிகளுக்கு அழைப்பு வந்தால் மறுக்காமல் சென்று பார்ப்பார். படம் சுமாராக இருந்தாலும், குறைகளைச் சொல்லாமல் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புவார்.
*பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் விஜய்க்கு படிப்பு விஷயத்தில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. சுமாரான மாணவர்தான். இதனால் அவருக்கு படிப்பு, கல்வி என்றால் மரியாதை உண்டு.
இதன் வெளிப்பாடே சமீபத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மாணவிகளை சென்னைக்கு வரவழைத்து உற்சாகப்படுத்தியது. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி தேவை என செய்தித் தாள்களில் வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவது விஜய்யின் நல்ல பழக்கங்களில் முக்கியமானது.
ஜான்சி
|