மலர்தான் வீழ்ந்தது... குளமே அதிர்ந்தது...



இளம் பாடலாசிரியர்களில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. ‘காதலே...’ (‘96’), ‘நகராத நொடியோடு நான் வாழ்கிறேன்...’ (‘தி ரோட்’), ‘மாயா மாயா காதல்...’ (‘இறுகப்பற்று’), ‘மலர்தான் வீழ்ந்தது குளமே அதிர்ந்தது...’ (‘அநீதி’), ‘தரும் அன்பாலே மனம் பூவாய் மாறுமே...’ (‘போர்தொழில்’), ‘நீர்க்குமிழோ...’ (‘கொலை’), ‘தூவி தூவி...’ (‘கார்கி’) என இவரின் ஒவ்வொரு பாடலும் பல கோடி மக்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இருநூறு பாடல்களை நோக்கி இவருடைய இசைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘தி ரோட்’ படத்தில் இவர் எழுதிய அனைத்துப் பாடல்களும் வைரலோ வைரல் ஆகிய நிலையில் கார்த்திக் நேத்தாவிடம் பேசினோம்.

பாடல் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் யார்?

அப்போதும் சரி; இப்போதும் சரி கண்ணதாசனே என்னை உந்தித் தள்ளுவதில் முதலாமவராக இருக்கிறார்.

‘தொட்டி ஜெயா’ முதல் ‘தி ரோட்’ வரையிலான உங்கள் பாடல் பயணம் எப்படியுள்ளது? அதில் கற்றதும், பெற்றதும் என்ன?

இந்தப் பயணம் வாழ்க்கையையும் சேர்த்தே கற்றுத்தருகிறது. மொழியை மட்டுமல்லாமல் மனிதர்களையும், மனிதர்களை எதிர்கொள்ளும் என்னையும் சேர்த்து புரிந்துகொள்ள முயலும் பயணமாகவே இருக்கிறது. கற்றதும் பெற்றதும் பேரனுபவங்கள் என்று அகம் உணர்கிறது. கற்றல் என்பது இறந்தகாலமாக ஆகாத வரையில் நான் அனுபவங்களை ஈட்டும் எளிய கவிஞனாக வாழ்வாங்கு வாழ்வேன்.

‘தி ரோட்’ அனுபவம் சொல்லுங்கள்?

தலைப்பிற்கு ஏற்ப இந்தப் படம் உணர்வுகளின் பயணத்தைக் காட்டக் கூடியதாக உறுதியாக இருக்கும். எளிய மனிதர்களின் மெய்ப்பாடுகள் ஆகச்சிறப்பான கதை வழியாக‌ கடத்தப்பட்டிருக்கிறது. பாடல்கள் அகத்தின் அலறல்களை, கேவல்களை, விசும்பல்களை மொழியாக்கிக்கொண்டது என்றே சொல்வேன்.

நீங்கள் பாடல் எழுதும் முறை எப்படி இருக்கும்?

எப்போது எழுதுவீர்கள்?

எங்கே எழுதுவீர்கள்?

பாடல் எழுதுவதற்கு என்று ஏதேனும் விதிகள் வைத்துள்ளீர்களா?

அப்படியெல்லாம் திட்டவட்டமான சட்டங்கள் ஏதும் இல்லை. அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் ஒரு பாடலை எழுதிவிட்டு, வாசிக்கவோ அல்லது அடுத்த பாடலை எழுதவோ சென்றுவிடுவேன். முன்பெல்லாம் எங்கே இருக்கிறேனோ அங்கே பாடல் எழுதுவதுண்டு. சில சமயம் ஒலிப்பதிவுக் கூடத்தில் எழுதியதும் உண்டு. இப்போதெல்லாம் எனது அறையில் அமர்ந்தே பாடல்கள் எழுதுகிறேன்.

நவீன இசையில் வார்த்தைகள் வாத்தியங்களாக மாறியுள்ளதா?

மாறியிருப்பது உண்மைதான். ஆனால், இந்த மாற்றம் தனிநபரின் விருப்பமாக இல்லை. உலகமயமாக்கலின் கண்ணியில் எண்ணிறந்த நிறுவனங்கள் மாட்டியிருப்பது போல கலையும் மாட்டிக்கொண்டது. கலையும் ஒரு வணிகப் பண்டமாக ஆகியிருப்பதால் விலை போக ஏதுவான விடயங்களே இன்று தயாரிக்கப்படுகிறது. படைக்கப்படுகிறது.மற்றொரு பக்கம் கலை அனுபவத்திற்கு முதன்மை தரும் படைப்புகள் வருகின்றன. அவற்றில் இடம்பெறும் இசையும் வரிகளும் பேரனுபவமாக அமைகிறது.

பாடல்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்வீர்களா?

உறுதியாக நம்புகிறேன். என்னை நிறைய கட்டங்களில் பாடல்களே தேற்றி வழிநடத்தியிருக்கின்றன. தனிமனிதனை வழிநடத்த, விழிப்பிக்க இசை ஒரு சிறந்த கருவி.
பாரதி, பாரதிதாசன், தாகூர், மேலை நாட்டு பாப் மார்லி, ஜான் லெனான்... இப்படி சமூக மாற்றத்திற்குத் தூண்டுதலாக பாடல்களைத் தந்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.
தற்காலத்தில் பொருள் நிறைந்த பாடல்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால், இந்நிலை நிரந்தரமானது இல்லை. அவசரம் தணியும். அமைதி நிலவும். அங்கு பாடல் வழிநடத்தும். ‘Every revolution begins with songs...’ என்பது சிலி நாட்டுப் பழமொழி.

பாடல்களைத் தவிர, திரைக்கதை, வசனம் எழுதும் உத்தேசம் இருக்கிறதா?

இருக்கிறது. அதற்கென்று நிறைய கற்க வேண்டியதும் இருக்கிறது. முறைப்படி கற்று, உள்ளத்தில் நம்பிக்கை உண்டானால் உறுதியாக அதையும் செய்வேன்.

ஒரு ரசிகனாக இன்றைய பாடல்களின் தரம் எப்படி உள்ளது?

கண்ணதாசனின் அனுபவப் பாடல்கள் கேட்டு வளர்ந்தவன் நான். அந்த வகையில் சொன்னால் இன்றைய பாடல்கள் உவப்பாக இல்லை. பாடுபொருள்கள் பரந்தவையாக இல்லை. முன்பே சொன்னது போல இந்நிலை மாறும். மாறிவருகிறது.

அறியப்படாத வாழ்க்கைகளைச் சொல்லவும், நுட்பமான உணர்வுகளைச் சொல்லவும் அருமையான சாதனமாக சினிமா இருக்கிறது. வணிக அழுத்தங்களை மீறி உன்னத கலைப்
படைப்புகள் வந்தவாறே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒரு பேட்டியில் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை...’ மாதிரியான மக்களுக்கான பாடல்களை எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள்.

அது நடந்துவிட்டதா?

நான் நினைத்திருந்த பாதைக்குள் வந்துவிட்டேன். இனி பயணிக்க வேண்டியதுதான்.

பாடல் எழுதுவதற்கு வாசிப்பு அனுபவம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

பாடல் எழுதவும் வாசிப்பு இன்றியமையாதது. பாடலுக்கு மொழிதான் வாகனம். மொழியைக் கற்காமல் ஒலிகளை ஆளமுடியாது. அனுபவமும் நினைவுகளும் மொழித்திறனும் நம்மை நெறிப்
படுத்தும்.

வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கையைக் கூறும் மொழியைக் கைக்கொள்ளவும் வாசிப்பு மிகத் தேவையானது.

‘96’ படம் வெளிவந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது.

அந்தப் படத்திலிருந்து மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருக்கிறதா?

‘96’ வெளியான இந்த ஐந்து வருடம் என்பது எனது மாறிய வாழ்க்கையின் ஐந்து வருடம் என்றே உணர்கிறேன். என்னை என்னிடம் அழைத்து வந்து சேர்த்தது ‘96’.

எந்த பாடல் அதிகம் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது? யாரெல்லாம் பாராட்டினார்கள்?

நிறைய பாடல்கள் பாராட்டைப் பெற்றிருக்கின்றன. முதன் முதலில் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்ட பாடல் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம்பெற்ற ‘படபடவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே...’ பாட்டு. காணும் ஒவ்வொருவரும் அப்போது அந்தப் பாட்டின் சில வரிகளைப் பாராட்டி மகிழ்வார்கள்.

நா.முத்துக்குமார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பாடலின் வரிகளைப் பாராட்டி அப்போது பேசினார். அப்பாராட்டு எனக்கும் வரிகளுக்கும் மேலும் பரவலான அங்கீ
காரத்தைத் பெற்றுத்தந்தது.அதன்பிறகு ‘போறானே போறானே...’ பாட்டு. ‘வாகை சூட வா’ படத்தில். சமுத்திரக் கனி, சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் அழைத்து என்னை உச்சி முகர்ந்தார்கள் அப்போது.சமீபத்தில் வெளியான ‘அநீதி’ பட பாடல் வரிகளைப் பாராட்டி இயக்குநர் லிங்குசாமி அவர்கள் காணொலி ஒன்றில் பேசியிருந்தார். அவரது ஒவ்வொரு சொல்லையும் ஊக்கமாகக்கொண்டு இயங்குகிறேன்.

மற்றபடி ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் பெறும் பாடல்களும் உண்டு. அவை: ‘இதுவும் கடந்து போகும்...’ (‘நெற்றிக்கண்’), ‘Journey...’ (‘ஜானு’), ‘பிரியாதிரு...’ (‘இறுகப்பற்று’).ஐந்து வருடங்காகப் பாராட்டைப் பெற்று வரும் இரண்டு பாடல்கள் ‘96’ படத்தில் இடம் பெற்ற ‘அந்தாதி...’ மற்றும் ‘Life of Ram...’ பாடல்கள். அத்தனை பாராட்டும் வாழ்த்துகளும் பொறுப்பாக இயங்கிட ஊக்கம் அளிக்கிறது. அனைவருக்கும் இந்த நேர்காணல் வாயிலாக எனது நன்றிகள்.

உங்கள் இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் பற்றி..?

பாடல் வாய்ப்புகள் தேடிய நாட்களில் பேருதவியாக இருந்தவர் இசையமைப்பாளர் மரியா மனோகர். ‘ஆண்மை தவறேல்’ படத்தின் இசையமைப்பாளர். இனிய மனிதர். ஓய்வாக இருந்த நாட்களில் என்னை அழைத்து எழுதச் சொல்வார்.

எழுதிய வரிகளுக்கு இசையமைப்பார். அப்படி நிறைய பாடல்கள் அப்போது உருவாயின.இசையமைப்பாளர் சி.சத்யாவிடமும் அப்படியே நடந்தது. அந்நாட்கள் எனக்கான பயிற்சி நாட்கள் என்றே சொல்லுவேன். கவிதையோ பாடலோ எதை எழுதினாலும் முதலில் சொல்வது அண்ணன் அறிவுமதி அவர்களிடம். எப்போதும் ஊக்கம் ஊட்டக்கூடிய மாமனிதர் அவர்.

ஜஸ்டின் பிரபாகரன். அருமையான மனிதர். ஊற்றாக ராகங்கள் வந்துகொண்டே இருக்கும் அவரிடம். தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது. அத்தனை ஆற்றொழுக்காக
வரிகள் வந்து விழும் ஜஸ்டின் இசையில். பணியாற்றிய ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் உண்டு. எனது பயணத்தைப் பொருளுடையதாக ஆக்குபவர்கள் அத்தனை இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் என்பதே உண்மை.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்