பாலஸ்தீனம் vs இஸ்ரேல்... என்ன பிரச்னை... என்ன வரலாறு...



யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினருக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் அல்-அக் ஷா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மூன்று மதத்தினருக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917ம் ஆண்டு இங்கிலாந்து அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் ஆர்தர் பால்ஃபோர், அந்நாட்டு யூத மதத் தலைவர் ரோத்ஸ்சைல்ட் என்பவருக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதமே ‘பால்ஃபோர் பிரகடனம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பிரகடனம் 9 நவம்பர் 1917 அன்று பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனம், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து, யூத ஏஜென்ஸி எனும் அமைப்பின் தலைவராக இருந்த டேவிட் பென்-குரியன் 1945ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கையை அப்போதைய அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் ஆதரித்தாலும், யூதர்கள் மற்றும் அரேபியர்களைக் கலந்தாலோசிக்காமல், அமெரிக்கா இதில் தலையிடாது என உறுதியாகத் தெரிவித்தார். 1948 வரை பாலஸ்தீனத்தை காலனி ஆதிக்கத்தில் இங்கிலாந்து வைத்திருந்தது. அப்போது பாலஸ்தீனத்தில் யூத அரசு மற்றும் அரபு நாடு உருவாக்கப்படுவதையும், யூத அகதிகளை எல்லை குறிப்பிடாமல் அப்பகுதிக்கு குடியேற்றுவதையும் எதிர்த்தது.

பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க பிரிட்டிஷ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ்.ட்ரூமன், மே 1946ல், ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட ஒரு லட்சம் யூத மதத்தைச் சேர்ந்தவர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப்பதற்கான பரிந்துரையை அங்கீகரித்தார். அதே ஆண்டு அக்டோபரில் யூத அரசை உருவாக்குவதற்கான தனது ஆதரவை, பகிரங்கமாகத் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கான ஐநா சபை, சிறப்பு ஆணையம் ஒன்றை அமைத்து பிரச்னையை ஆராய்ந்து, யூத மற்றும் அரபு நாடாக அப்பிரதேசத்தைப் பிரிக்கும் தீர்மானத்தை நவம்பர் 29, 1947ல் ஏற்றுக்கொண்டது. இத்தீர்மானத்தை பாலஸ்தீன அரசும், மக்களும் ஏற்கவில்லை. பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் அரசியல் கட்சியாக விளங்கும் ஹமாஸ் குழு, தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே, இப்போது பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ் போர் தொடுத்திருக்கிறது. இஸ்ரேலும் எதிர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கிறார்கள்.

அல் அக்‌ஷா மசூதி... டெம்பிள் மவுண்ட்...

சிறந்த விவசாயம், அதி நவீன தொழில் நுட்பம், சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் என மிகச் சிறந்த நாடாக இன்று இஸ்ரேல் அறியப்படுகிறது. ஆனால், யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மத்திய கிழக்கு நாட்டுடன் சண்டையிடும் மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம், இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது.

2012ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐநா-வில் ‘அப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90%க்கும் அதிகமாக இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. 1967ம் ஆண்டு மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அப்போது அறிவித்தது; இப்பொழுதும் அதே எண்ணத்தில் இருக்கிறது.

இதற்கு அன்றும் இன்றும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனம், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகிறது.
ஏனெனில் கிழக்கு ஜெருசலேமின் பழமையான பகுதியில்தான் அல் அக்‌ஷா மசூதி அமைந்திருக்கிறது.இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம்.

அதேநேரம் இந்த மசூதியைச் சுற்றியிருக்கும் ‘வெஸ்ட் வால்’ என்ற ஒரு பக்கச் சுவரை ‘டெம்பிள் மவுண்ட்’ என்று யூதர்கள் அழைக்கிறார்கள். அத்துடன் இதைத் தங்களது புனிதத் தலமாகவும் கருதுகிறார்கள். அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஜெருசலேமையே புனித நகராகக் கருதி வருகின்றன. இரு தரப்பினருக்குமான மோதலுக்கு இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆம். உண்மையில் 1500க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னை இது.

இப்படிப்பட்ட சூழலில் 2017ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது. 

நெடுங்காலமாகவே கிழக்கு ஜெருசலேமில் அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம்.

இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையைத் தீர்க்க நீண்ட நெடுங்காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர்கள் முன்னிலையில் கேம்ப் டேவிட், ஆஸ்லோ என ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

ஆனால், அந்த ஒப்பந்தங்களின் படி இருதரப்பும் செயல்படவே இல்லை. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறது.2006ம் ஆண்டு காஸா தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரச்னை இன்னும் தீவிரமானது. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என எந்நேரமும் போர் பதற்றத்திலேயே எல்லா நாட்களும் மேற்குக் கரை இருக்கிறது.

பேராச்சி கண்ணன்