பி.டி.உஷா சாதனையை சமன் செய்த கோவை வீராங்கனை!



சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ்.
இதுமட்டுமில்லாமல், இறுதிப்போட்டிக்கு முந்தைய அரையிறுதியில் பி.டி.உஷாவின் சாதனையையும் அவர் சமன் செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் கடந்திருந்தார். அப்போது இது இந்திய அளவில் தேசிய சாதனையாகப் பதிவானது.

இதன்பிறகு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் யாரும் இந்தச் சாதனையை சமன் செய்யவோ, முறியடிக்கவோ இல்லை. இப்போது 39 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனையை சமன் செய்துள்ளார் வித்யா. 
இது பெரிய விஷயமாக பேசப்பட்ட சில மணி நேரங்களில் இறுதிப்போட்டியில் வெண்கலம் வென்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார் வித்யா.
இதுமட்டுமல்ல. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா முதலில் 4X400 மீட்டர் கலப்புப் பிரிவில் வெள்ளி வென்றார். அது குழு போட்டி என்பதால் எல்லோருடனும் பாராட்டு
களைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், இது தனிநபர் போட்டி. இதில் வெண்கலத்தை வென்றது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வித்யா மட்டுமல்ல. அவரின் தங்கை நித்யாவும் தடகள வீராங்கனைதான். இவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். இருவரும் இரட்டைச் சகோதரிகள். வித்யா 400 மீட்டர் தடை ஓட்டம் என்றால், நித்யா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கெடுத்தார். இவர்களின் தந்தை ராம்ராஜ் டிரைவர் பணியில் இருந்துதான் இருவரையும் படிக்க வைத்துள்ளார். தாய் மீனா ஹோம்மேக்கர். ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தே இருவரும் சாதித்துள்ளனர்.

தாய் மீனாதான் விளையாட்டுத் துறையில் இருவரும் சாதிக்க வேண்டுமென விரும்பியவர். இவர்களின் சாதனைகளுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்பவரும் அவர்தான். இதற்கு தந்தை ராம்ராஜும், அக்கா சத்யாவும் மிகப்பெரிய சப்போர்ட் கொடுக்க இருவரும் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். இவர்களின் தேசிய போட்டிகளின் சாதனையாேலயே அரசுப் பணிக்கும் தேர்வாகினர். இப்போது வித்யா ரயில்வே துறையிலும், நித்யா வருமானவரித் துறையிலும் பணியாற்றுகின்றனர். அடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தங்கள் இலக்கு என கண்களில் நம்பிக்கை மிளிர சொல்கின்றனர் இரட்டையர்களான வித்யாவும் நித்யாவும்!

பேராச்சி கண்ணன்