அமைதிக்கு பெயர்தான் நர்கீஸ்!



இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், மரண தண்டனையை எதிர்த்தும், மனித உரிமைகளுக்காக போராடி வருவதற்காகவும் இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

51 வயதான நர்கீஸ், ‘டிஃபன்டர்ஸ் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் சென்டர்’ என்கிற அமைப்பின் துணை இயக்குநராக இருப்பவர். ஈரானிய அரசு அவரை 13 முறை கைது செய்துள்ளது. ஐந்து முறை குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. இதனால், 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற நர்கீஸ், 154 கசையடிகளும் வாங்கியுள்ளார். இந்த விருது அறிவிக்கப்படும்போதுகூட அவர் தெஹ்ரானில் உள்ள அரசியல் கைதிகள் அடைக்கப்படும் எவின் சிறையில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு போலீஸ் கஸ்டடியில் 22 வயதான மஹ்சா ஜினா அமினி என்ற பெண் கொல்லப்பட்டார். இதனால், ஈரான் ஆட்சிக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. அப்போது ‘பெண் - வாழ்க்கை - சுதந்திரம்’ என்கிற இலக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தார் நர்கீஸ். அரசுக்கு எதிராக பரப்புரை செய்ததாலேயே அவர் இப்போது சிறையில் உள்ளார்.

1972ல் பிறந்த நர்கீஸ் இயற்பியலில் பட்டம் பெற்று எஞ்சினியர். பெண்ணுரிமை, சமத்துவம் குறித்து பேசியவர், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். பல்வேறு சமூக சீர்திருத்த பத்திரிகைகளில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்தும், பெண் உரிமைகள் குறித்தும், போராடுவதற்கான உரிமைகள் பற்றியும் குறிப்பிட்டார்.  

1999ம் ஆண்டு சமூக செயற்பாட்டாளர் தஹ்கி ரஹ்மானி என்பவரை திருமணம் செய்தார். இவரும் 14 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர். இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளன. தற்போது குழந்தைகளுடன் ரஹ்மானி பிரான்ஸில் வசிக்க, நர்கீஸ் ஈரானில் இருந்து தன் போராட்டத்தை முன்னெடுக்கிறார். 

2003ம் ஆண்டு ‘டிஃபன்டர்ஸ் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் சென்டர்’ அமைப்பை நடத்தி வரும் ஷிரின் எபாடியுடன் கைகோர்த்தார் நர்கீஸ். இதன்வழியே மனித உரிமைகளுக்காகப் பேசிவந்தார். மனித உரிமைப் போராளியான ஷிரின் எபாடி ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்.

2011ம் ஆண்டு முதல்முறையாக நர்கீஸ் கைதுசெய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து அவரின் வாழ்க்கை போராட்டங்கள், கைதுகள், சிறைத் தண்டனைகள் என்று மாறியது. இருந்தும் மனித உரிமை, சமத்துவம், பெண் சுதந்திரம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  இப்போது ஷிரின் எபாடிக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் இரண்டாவது ஈரானிய பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் நர்கீஸ்.   
 
பி.கே.