ராகுல் டிராவிட் + சச்சின் டெண்டுல்கர் = ரச்சின்! C/O நியூசிலாந்து
கடந்த வாரம் 13வது உலகக் கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியது. இதன் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் இந்த ரன்னை எளிதாக எட்டியது. இதற்குக் காரணம் இருவர்.
 ஒருவர் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே. நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானவர். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓபனிங் செய்பவர். மற்றொருவர் ரச்சின் ரவீந்திரா. பெயரைப் பார்த்ததுமே இந்தியர் என்று கணித்துவிடலாம். யெஸ். இந்தியரேதான். இவரே இப்போது உலகின் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் வீரர். வழக்கமாக ரச்சின் நியூசிலாந்து அணிக்காக நான்காவது அல்லது ஐந்தாவது வீரராகதான் களமிறங்குவார்.
 ஆனால், அன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், தொடக்க ஆட்டக்காரர் வில் யங், டக்அவுட்டில் வெளியேறியதும், வில்லியம்சனுக்குப் பதிலாக யாருமே எதிர்பார்க்காத நிலையில் முதல் வீரராக வந்தார் ரச்சின்.அவரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்திவிடலாம் என்றே இங்கிலாந்து அணியினர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், நடந்தது அதுவல்ல. அவரின் அதிரடி வேறலெவலாக இருந்தது. இங்கிலாந்து வீரர்களே திணறிப் போயினர்.
96 பந்துகளில் 123 ரன்கள் சேகரித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு டெவான் கான்வேயுடன் கைகோர்த்து நின்றார் ரச்சின். இதில் ஐந்து சிக்சர்களும், பதினோரு பவுண்ட்ரிகளும் அடக்கம். இதுமட்டுமல்ல. 82 பந்துகளில் சதம் கடந்து உலகக் கோப்பையில் வேகமாக சதமடித்த இளம் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரச்சின். தவிர, இதுவே அவரின் முதல் ஒருநாள் போட்டி சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய போட்டியின் சிறந்த வீரருக்கான விருதும் வென்றார் ரச்சின்.
சரி, தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
இருக்கிறது. ரச்சின் (Rachin) என்கிற பெயரே ராகுல் டிராவிட் (Rahul), சச்சின் (sachin) என்ற ஜாம்பவான்களின் பெயர்களில் இருந்து எடுத்து வைக்கப்பட்டது என்பதுதான்! ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரைச் சேர்ந்தவர். சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர். பெங்களூரில் கிளப் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தவர். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்தின் நண்பர்.
வேலைநிமித்தமாக நியூசிலாந்தின் வெலிங்டன் நகருக்கு ரவி இடம்பெயர்ந்தார். அங்கேதான் 1999ம் ஆண்டு ரச்சின் பிறந்தார். கிரிக்கெட் ஜாம்பவான்கள் ராகுல் மற்றும் சச்சினின் மீதான அன்பால் தன் மகனுக்கு இருவரின் பெயரிலுள்ள முதல் எழுத்தை இணைத்து ரச்சின் எனப் பெயர் சூட்டினார் ரவி கிருஷ்ணமூர்த்தி.
அதுமட்டுமல்ல. வெலிங்டனில் 2011ம் ஆண்டு ஹட் ஹாக்ஸ் கிளப் என்கிற கிரிக்கெட் கிளப்பை தொடங்கி அதன் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்தக் கிளப்பின் தனித்துவமே, இந்தியாவில் உள்ள உள்ளூர் கிளப்புகளுடன் கிரிக்கெட் ஆடுவதுதான். இந்தச் சுற்றுப்பயணம் மூலம் வீரர்களுக்கு வளமான கிரிக்கெட் அனுபவங்களை வழங்குகிறது. இந்தக் கிளப்பின் வழியாகவே ரச்சின் தன்னுடைய பதின்மூன்றாவது வயதில், இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் ஆடினார். பிறகு, 2016ம் ஆண்டு இளம் நியூசிலாந்து வீரராக அண்டர் 19 உலகக் கோப்பையில் பங்கெடுத்தார். பின்னர், 2018ல் அண்டர் 19 உலகக் கோப்பையிலும் விளையாடினார். இப்படியாக தன் 22வது வயதில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார் ரச்சின். 2021ல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 போட்டியிலும், அதே ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.
இந்தியாவுடன் அந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தோற்கும் நிலையில் இருந்தது. அப்போது பின்கள வீரராக வந்த ரச்சின் 91 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து அணியை டிரா செய்ய வைத்தார். அப்போது ரச்சின் அவ்வளவாக கவனம் பெறவில்லை.
இதன்பிறகு, இந்த ஆண்டு அவர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமான ரச்சின் அந்தப் போட்டியில் ஐந்தாவது வீரராகக் களமிறங்கி 52 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். அப்போதே நியூசிலாந்து அணி அவரை வாரி அணைத்துக் கொண்டது. அவர் இடதுகை ஆட்டக்காரர் மட்டுமல்ல. இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் கூட. இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அவர் இங்கிலாந்து அணியுடன் சதம் அடித்தபோது அவரின் தந்தையும் தாயும் மைதானத்தில் அமர்ந்திருந்து ரசித்தனர். கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதியபோது அதை பெங்களூரின் ஒரு பாரில் அமர்ந்தபடி ரச்சின் கண்டுகளித்தாகச் சொல்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் மாட் ரோலர். இந்த உலகக் கோப்பையில் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது மட்டுமில்லாமல் முதல்போட்டியிலேயே சதமும் அடித்திருக்கிறார்.
‘என்னுடைய வேர்கள் இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வளர்ந்தெல்லாம் நியூசிலாந்தில்தான். நான் என்னை ஒரு கிவியாகவே(Kiwi) உணர்கிறேன்’ என்கிறார் ரச்சின். அதாவது நியூசிலாந்தின் தேசிய பறவையான கிவியை குறிப்பிட்டு தான் ஒரு நியூசிலாந்துகாரர் என்கிறார் ரச்சின். ஒரு ஆல்ரவுண்டராக நியூசிலாந்து அணிக்குக் கிடைத்துள்ள அற்புத வீரர் என அவரை இப்போது சக வீரர்கள் கொண்டாடுகின்றனர்.
தென்னாப்பிரிக்கா வீரர் டெவான் கான்வே...
இங்கிலாந்து உடனான போட்டியில் 121 பந்துகளுக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிக்கு ரச்சினுடன் வித்திட்டவர் டெவான் கான்வே. இவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். அங்கேதான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஆனால், பெரியதாக சோபிக்க முடியவில்லை என்கிற வேதனையில் கிரிக்கெட் விளையாட வேண்டியே நியூசிலாந்து நாட்டிற்கு 2017ம் ஆண்டு குடிபெயர்ந்தார்.
வெலிங்கடனில் இருந்து தன் இரண்டாவது இன்னிங்கிஸை சிறப்பாக துவங்கினார் கான்வே. ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். இதனால், 2020ம் ஆண்டு சிறந்த உள்ளூர் ஆட்டக்காரர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். அதே ஆண்டு ஐசிசி, அவரை நியூசிலாந்து அணிக்கு விளையாட தகுதியானவர் என அறிவித்தது. அப்படியாக ரச்சினுக்கு முன்புதான் இவர் நியூசிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இப்படி வெவ்வேறு மண்ணைச் சேர்ந்தவர்கள்தான் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை பதம் பார்த்தனர்.
பேராச்சி கண்ணன்
|