பேர் சொல்லும் பேரன்! பாரதியாரின் வாரிசு பாட்டெழுத வந்தாச்சு



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               நல்ல தமிழில் பேசினாலோ, கவிதையாக ஏதாவது சொன்னாலோ, ‘வந்துட்டாங்கப்பா பாரதியாரோட பேரன்’ எனக் கிண்டலடிப்போம். நிரஞ்சன் பாரதியை அப்படிக் கிண்டலடித்தால் பாரதியாருக்கே கோபம் வரும்.

யெஸ்..! இவர் நிஜமாகவே பாரதியாரின் பேரன். அதாவது எள்ளுப்பேரன்! ‘மங்காத்தா’ படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார் நிரஞ்சன் பாரதி. ‘மங்காத்தா’ படத்தின் மனதை அள்ளும் மெலடி பாடலான ‘நீ, நான்...’ நிரஞ்சன் எழுதியதே!

‘‘சினிமாவுக்குப் பாட்டெழுதப் போறேன்னு சொன்னதுமே எங்கப்பா ராஜ்குமார் பாரதியும், வீட்ல மத்தவங்களும் சொன்ன முதல் விஷயம், ‘பாரதியார் வம்சத்துல பிறந்துட்டு, அவர் பேரைக் கெடுக்கற மாதிரி எதையும் செய்யாதே... நல்ல பாடலாசிரியர்னு பேர் வாங்கு’ங்கிறதுதான். முதல் பாட்டுல அதைக் காப்பாத்திட்டேன். இனி அதையே என் கொள்கையா வச்சுக்கிட்டு எழுதுவேன்’’ & உறுதிமொழியுடன் பேச ஆரம்பிக்கிற நிரஞ்சன், 16 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தவராம்.

‘‘பொழுதுபோக்கா ஆரம்பிச்ச விஷயம் கவிதை. நிறைய படிப்பேன். இயல்பாவே தமிழ் ஆர்வம் அதிகம். எஞ்சினியரிங் முடிச்சுட்டு, சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்திட்டிருந்தேன். 21 வயசுல தான் சினிமா ஆசை வந்தது. ‘வானமே உன் எல்லை என்ன’ என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டேன். பிரபலமான பாடல்களுக்கு என்னோட வரிகளைப் போட்டு எழுதி எழுதிப் பார்ப்பேன். அந்தப் பாடல்களையும், என்னோட கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கிட்டுப் போய் நிறைய இயக்குனர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.

அப்படித்தான் வெங்கட் பிரபுவையும் சந்திச்சேன். எங்கப்பாவை அவருக்கு நல்லா தெரியும் ங்கிறதால, பாரதியாரோட எள்ளுப்பேரன் என்ற அறிமுகம் எனக்குத் தேவைப்படலை. என்னை நம்பி டியூனும் சிச்சுவேஷனும் கொடுத்தாங்க. முதல்ல கவிதை மாதிரி எழுதிக் கொடுத்தேன். அப்புறம் அதை இன்னும் எளிமைப்படுத்தச் சொன்னாங்க. நாலாவது முறையா நான் எழுதிக் கொடுத்ததுதான் ஓ.கே. ஆச்சு. பாட்டைக் கேட்டுட்டு, ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் முகம் தெரியாத அன்பர்கள் பாராட்டறது சிலிர்க்க வைக்குது’’ என்கிற நிரஞ்சன், இரட்டை அர்த்தம் தொனிக்கிற வரிகளை எழுதுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்.

‘‘குத்துப்பாட்டுக்கு நான் எதிரியில்லை. ஆனா, காதல் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். பாரதியார் மேல உலகம் முழுவதுமான மக்கள் வச்சிருக்கிற பக்தியைப் பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு. பாரதியார் என்ற கண்ணாடி மூலமா என்னைப் பார்க்காம, நிரஞ்சன் என்ற கவிஞனா ஏத்துக்கிட்டாங்கன்னா இன்னும் சந்தோஷம்...’’   எதிர்பார்க்க வைக்கிறது எள்ளுப்பேரனின் பேச்சு!
 ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்