எம வாகன ரயில்கள்... என்ன காரணம்?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            ரக்கோணம் அருகே சிக்னலுக்காக காத்திருந்த காட்பாடி பயணிகள் ரயில் மீது சென்னை பீச்சில் இருந்து வேலூர் சென்ற ரயில் மோதியதில் 10 பேர் பலி. 100க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் 6வது ரயில் விபத்து இது.

‘‘சிக்னல் சரியாக விழவில்லை. பிரேக் ஃபெயிலியர், டிரைவர் மயங்கிவிட்டார் என்றெல்லாம் ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே தொடரும் விபத்துகளுக்குக் காரணம்’’ என்று குமுறுகிறார்கள் ரயில்வே ஊழியர்கள்.

‘‘விசாரணைக்கு முன்பாகவே இந்த விபத்துக்கு மனிதத் தவறே காரணம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக அவ்வாறு அறிவித்ததுதான் தவறு. எல்லா ஸ்டேஷன்களிலும் ‘டேட்டா லாக்கர்’ என்று ஒரு கருவி இருக்கும். அதை ஆய்வு செய்தால் எதனால் விபத்து நடந்தது என்று தெரிந்துவிடும். ஒருவேளை மனிதத் தவறே காரணமாக இருந்தாலும் அதற்கும் ரயில்வே அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறார், ‘தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்’ செயல் தலைவர் இளங்கோவன்.

‘‘ரயில்வேயில் 20 ஆயிரம் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பற்றாக்குறையால், இருக்கும் டிரைவர்களை பிழிந்து எடுக்கிறார்கள். விடுமுறை, ஓய்வு கூட கிடைப்பதில்லை. அண்மையில், டிரைவர்களின் மனைவிகளைக் கூட்டி அதிகாரிகள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதில், ‘தயவுசெய்து குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் கணவரை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்’ என்று அந்தப் பெண்கள் கண்ணீர் வடித்தார்கள்.

ரயில் விபத்துக்கு ஒரு நொடி கவனக்குறைவு போதும். கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விட்டால் கூட சிக்னலை கடந்துவிடும் வாய்ப்புண்டு. பிரேக் போட்டால் 400 மீட்டர் தள்ளித்தான் நிற்கும். டிரைவர்கள் சோர்வடைந்தாலோ, மன உளைச்சல் அடைந்தாலோ கவனக்குறைவு ஏற்படலாம். விபத்துகளை தடுப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள் டிராக்மேன்கள். 55 ஆயிரம் டிராக்மேன் பணியிடங்கள் காலி. இப்படி பாதுகாப்பு சார்ந்த ‘சேஃப்டி கேடரில்’ 84 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன’’ என்கிறார் இளங்கோவன்.

‘‘கனிகான் சவுத்ரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, புறநகர் ரயில்களில் 2 டிரைவர்களை நியமிக்க உத்தரவிட்டார். 2 வருடங்களில் அந்தத் திட்டத்தை மாற்றி விட்டார்கள். எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இருப்பது போல புறநகர ரயில்களுக்கும் 2 டிரைவர்கள் நியமிக்க வேண்டும்’’ என்கிறார் அவர். 

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

எல்லா ரயில்களிலும் ஏசிடி எனப்படும் ‘ஆன்டி கொலிஷன் டிவைஸ்’ அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு கிலோமீட்டர் தொலைவில் வேறு ரயில்கள் இருந்தால், ஏசிடி சிஸ்டம் தானாகவே ரயிலை நிறுத்திவிடும். ‘‘இப்போது நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள். ஒரே நேரத்தில் எல்லா ரயில்களுக்கும் பொருத்தினால்தான் ஏசிடி கருவியால் பயன்’’ என்கிறார் இளங்கோவன்.

ரயில் பாதுகாப்பு எச்சரிக்கைக் கருவி (டி.பி.டபிள்யூ.எஸ்) என்று ஒரு கருவி. குறிப்பிட்ட தூரத்தில் வேறு ரயில்கள் நின்றால் ரயில் டிரைவரை எச்சரிக்கும். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மட்டும் இதைப் பொருத்தினார்கள். சரியாக பராமரிக்காததால் அந்தக் கருவிகளும் வீணாகிவிட்டன.

உயிர்களை முதலீடாக்கி லாபம் பார்ப்பது ரயில்வேக்கு நல்லதல்ல.
வெ.நீலகண்டன்