காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அங்குள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கூடி நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சிலர் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள்.

‘‘இத நாங்க செத்தாலும் விடமாட்டோம். எங்கள எவனும் இங்க வந்து பாக்கல; ஏன்னு கேக்கல’’ என்று ஒரு பெண் தனது பெருங்கோபத்தை ‘மைக்’கில் பொங்கிக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் குஜராத் மக்களின் ஒற்றுமைக்காகவும் சமாதானத்துக்காகவும் மத நல்லிணக்கத்துக்காகவும் ‘சதாகவனா சேவை’ என்று ஒரு திட்டத்தைத் தொடங்கி, முதற்கட்டமாக மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இது முதற்கட்டமா, ‘முதல்’ கட்டமா என்று எனக்குத் தெரியவில்லை. 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.

மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றவர்கள்; அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அபலைகளாக நிற்பவர்கள் இருவருமே இங்கும் அங்கும் எங்கும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பழரசத்தைக் கொடுத்து யாராவது ஒருவர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து விடுகிறார். பிரச்னைகள் முடியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

‘வாழ்க்கை
செய்திமயமாக உள்ளது.
நான் வாழவில்லை
வெறுமனே அச்சடிக்கப்படுகிறேன்.
கண்ணீர் விடுவதில்லை
அச்சு மைதான்
பிரவாகமாகிறது.
நான் மனிதனில்லை
வியாபாரப்பொருளாக
நிற்கிறேன்.
இப்போது
அவ்வப்போது
கொஞ்சம்  சிரிக்கிறேன்’

 இது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் கவிதை. உண்மைதான். வாழ்க்கை செய்திமயமாகத்தான் உள்ளது. அதன் தலைப்புச்செய்திகளுக்குப் பின்னால் உள்ள தலைகள் யாருடையவை?

உலகிலேயே மிகக்கொடுமையானது பசியை வேடிக்கை பார்ப்பது. அந்தப் பசியை ஆயுதமாக ஏந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்திவிடக்கூடாது.
எத்தனையோ உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

சென்னை மாகாணத்தை இரண்டாகப் பிரித்து தனி ஆந்திர மாநிலம் கேட்டு 1952ல் பொட்டி ஸ்ரீராமலு 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.

‘சென்னை ராஜ்ஜியம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றக் கோரி 1957ல் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இந்தியக் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதைக் கண்டித்து 1929ல் ஜதிந்திரநாத் தாஸ் என்ற விடுதலைவீரர் லாகூர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்தார்.

இந்திய ஆயுதப் படையினருக்கான சிறப்புரிமைச் சட்டத்தின் அத்துமீறலை எதிர்த்து 2000ம் ஆண்டு நவம்பரிலிருந்து இன்றுவரை உண்ணாவிரதம் இருக்கிறார் மணிப்பூரில¢ ஐரோம் ஷர்மிளா என்கிற பெண் போராளி. உலகிலேயே மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் இதுதான்.

கங்கை நதி அசுத்தப்படுத்தப் படுவதைக் கண்டித்து, அதைப் புனிதப்படுத்த நிகமானந்தா என்கிற துறவி 114 நாட்கள் உண்ணாவிரதமிருந்து கண்களை மூடினார்.

இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளைக் கண்டித்து எத்தனையோ பேர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள்.

இந்த உண்ணாவிரதங்களைப் பற்றி ஒரு பத்திரிகையாளரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் எனக்குள் ஒரு கேள்வியை விதைத்தார்.

ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவை பம்பரம் போல சுழன்று சுழன்று படம்பிடித்துக் காட்டிய வட இந்தியத் தொலைக்காட்சிகளின் கேமரா, ஏன் இன்றைய மற்ற உண்ணாவிரதங்களை நோக்கித் திரும்பவில்லை?

ராணுவத்தினரின் அத்துமீறலிலிருந்து தனது மக்களைக் காப்பாற்ற நினைக்கிற ஐரோம் ஷர்மிளாவின் 11 வருட உண்ணாவிரதம் உயிரான பிரச்னை இல்லையா?

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்து தமிழரின் போராட்டங்கள் மனித உரிமை சார்ந்ததில்லையா?


கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பும் உண்ணாவிரதமும் மக்களின் அடிப்படை பிரச்னை இல்லையா?

ஒருவேளை பிரபலமானவர்கள் உண்ணாவிரதம் இருந்தால்தான் அது கவனிக்கப்படுமா?

அதுவும் எனக்குச் சரியாகப் படவில்லை.

ஏனென்றால், அன்னா ஹசாரேவை இதற்கு முன்னால் எனக்குத் தெரியாது; எனக்கு மட்டுமல்ல, என்னைப் போலவே பலரும் அவரைத் தெரியாது என்றுதான் சொன்னார்கள்.

ஊழலை எதிர்த்து திடீரெனத் தோன்றிய அவரது புகழை வட இந்தியத் தொலைக்காட்சிகள் படபடவெனப் பரப்பத் தொடங்கின. அவரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்சிமிட்டாமல், கண்ணுறங்காமல் ‘ஸ்டார் நைட்’, ‘ரியாலிட்டி ஷோ’ போல இருபத்து நான்கு மணி நேரமும் ஒளிபரப்பின. ஆடல், பாடல் சந்தோஷத்தோடு கொந்தளிக்கும் ஒரு குட்டி இந்தியாவையே திரட்டி அவரோடு உண்ணாவிரதத்தில் உட்கார வைத்தன.

இங்கேதான் என் நண்பர் எழுப்பிய சந்தேகங்களை நானும் யோசிக்கத் தொடங்கினேன்.

 இந்தப் போராட்டத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?

 போராடும் நபரை யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

 பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழிகாட்டுதலின் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்களா?

 போராட்டத்துக்கான செலவை யார் செய்வது?

 போராட்டத்தை படம் பிடிக்க மீடியாக்களை யார் அழைத்தது?

 இரவும் பகலும் போராட்டத்தைத் தொடர்ந்து ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கு யார் கட்டளையிட்டது?

 லாப நோக்கத்தோடு மட்டுமே பெரும்பாலும் செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகளான இந்த வட இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு இதனால் என்ன லாபம்?

 இவையெல்லாம் இல்லையென்றால், மக்களுக்கு ரியாலிட்டி ஷோ பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது என்பதால் நிகழ்ச்சிகளில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றமா?

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஊழலை ஒழிப்பது முக்கியமானதுதான்; அதைவிட முக்கியமானது, மக்களிடம் எழுந்துள்ள இந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவது.

உஷாராணியின் கவிதை வீடு பெட்ரோல் குண்டுவீச்சும் போலீஸ் துப்பாக்கிச்சூடும் நடந்த பரமக்குடியிலிருந்து பா.உஷராராணியின் கவிதைத்தொகுதி வந்திருக்கிறது. கலவரச்செய்திகளால் படபடத்த இதயத்தைக் கவிதைகள் ஆறுதல்படுத்தின.

பூச்செடி, குழந்தை, பூனைக்குட்டி என ஒவ்வொரு ஜீவிதத்தையும் வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கும் அன்பின் விரல்களால் எழுதப்பட்ட கவிதைகளை ‘மரம் வைத்த வீடுகள்’ என்னும் தலைப்பு மேலும் அழகாக்குகிறது.

மல்லி, அடுக்குமல்லி, பவளமல்லி, பிச்சி, தும்பை, துத்தி, ரோஜா, வேப்பம், மருதாணி, மலம்பூவரசு, நந்தியாவட்டை, செங்காந்தள், நாகலிங்கப்பூ, மனோரஞ்சிதம், செம்பருத்தி, வெள்ளைச் செம்பருத்தி, டிசம்பர் பூ, வெள்ளை டிசம்பர் பூ, கள்ளி, கருவேலம், செவ்வரளி, பன்னீர்ப்பூ, மகிழம்பூ என ஒரு பெரிய பூப்பட்டியலை இவரது கவிதைகளில் காணமுடிகிறது. அத்தனைப் பூக்களும் வீசுவது அன்பென்னும் ஒரே வாசந்தான்!

இந்தக் கவிதைகளைப் படித்தபோது எனக்குள் ஓடிய ஒரு சலனப்படம் இதுதான்...

பிரியங்களின் சிறகுகள் கொண்ட ஒரு தேவதை ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நின்று ஒரு குழந்தையை அழைக்கிறாள். அதன் கைகளில் ஒரு மரக்கன்றைக் கொடுக்கிறாள். அவளுக்குப் பின்னே மழையை ஏந்திச் செல்லும் ஓர் அழகி நடக்கிறாள்.

‘என்னை நீ
எவ்வாறு
அடையாளம்
கண்டுகொள்கிறாய்?
..... ..... ..... .....
நான் உடலால்
மூடப்பட்டவள் அல்ல’
என்று ஒரு குரல் எதிரொலிக்கிறது. அது உஷாராணியின் குரல். மூதாதையரின் மண்ணில் கிளை விரித்து நிற்கும் பெருமரத்தின் குரல்.
(சலசலக்கும்)
பழநிபாரதி