ரஜினி வாழ்க்கையைப் படமாக்கலாமா? கொந்தளிக்குது திரையுலகம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்தியத் திரையுலகின் தன்னிகரற்ற சூப்பர்ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினி. அவரின் வாழ்க்கையை இந்தியில் சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் அதுல் அக்னிஹோத்ரி. ரஜினி வேடத்தில் நடிக்க சல்மான் கானை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த இருவரும் இணைந்த ‘பாடிகார்ட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த முயற்சி. 

ரஜினியின் வாழ்க்கையைப் படமாக்குவதற்கும், ரஜினி வேடத்தில் சல்மான் நடிப்பதற்கும் ரசிகர்கள் தரப்பிலிருந்து மட்டுமல்ல... திரையுலகில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அக்னிஹோத்ரிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகிறார்கள்.

ரஜினியின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும் சோதனைகளை எதிர்கொண்டு உச்சம் தொட்டவர் ரஜினி. அவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை கடுமையானது. எல்லாவற்றையும் கடந்து இன்று ஈடற்ற உயரத்தில் இருந்தாலும், அந்தத் தோரணைகள் இன்றி எளிமையாக வாழ்பவர். கடும் நோயை எதிர்கொண்ட பிறகும் நடிப்பின் மீதுள்ள காதலால் புத்துணர்வோடு மீண்டுவந்து ‘ராணா’ ஷூட்டிங்குக்காகக் காத்திருக்கிறார் ரஜினி.

‘‘ரஜினி சார் போல நடப்பது, பேசுவது, முடியைக் கோதுவது என பல நடிகர்கள் அவரைப் போல நடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரின் நிழலைக்கூட அவர்களால் தொடமுடியவில்லை. ரஜினி ஒருவர்தான். அவர் கேரக்டரில் அவரால் மட்டும்தான் நடிக்கமுடியும். மற்றவர்கள் நடித்தால் அது வெறும் முயற்சியாக மட்டுமே இருக்கும்’’ என்கிறார் ரஜினியை வைத்து பல படங்களை இயக்கியுள்ள பி.வாசு.

‘‘ரஜினியின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்றால் அது கே.பாலசந்தர் போன்ற இயக்குனர்களால் மட்டுமே முடியும். ரஜினியின் தனித்துவமான ஸ்டைல், அவருக்கு மட்டுமே வாய்த்த வரம். அவரது உடலே செதுக்கப்பட்ட சிலை போல இருக்கும். அவரது உடல்மொழியை வேறு யாரும் உள்வாங்கி நடிக்கமுடியாது. அவரது ஒவ்வொரு செயலுமே ரசிக்கத் தக்கதாக இருக்கும். செட்டில் ஓய்வு நேரத்தில் கண்ணில் ‘வெட் கிளாத்’ போட்டுக்கொண்டு சேரில் சாய்ந்து தூங்குவார். அதுவே அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். எல்லோரும் பார்த்து ரசிப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் அவரது ஸ்டைல் பதிந்துள்ளது. அவருடைய பாத்திரத்தில் இன்னொருவரைக் கற்பனை செய்யக்கூட முடியாது’’ என்று கூறும் வாசு, ‘‘ரஜினியைப் போலவே சல்மானுக்கும் தனி ஐடென்டிட்டி இருக்கிறது. சாஃப்ட்டான ஹீரோவாக வந்து ஆக்ஷன், காமெடி என எல்லா தளங்களிலும் கலக்கும் பெரிய நடிகர் அவர். தன் அடையாளத்தை விட்டுவிட்டு ரஜினியாக நடிக்க அவரே விரும்ப மாட்டார்’’ என்கிறார்.

ரஜினியை தனது வழிகாட்டியாகக் கருதும் நடிகர்&இயக்குனர் லாரன்ஸ், ‘‘ரஜினி சார் பத்தின படமா இருந்தாலும், ரஜினி சார் நடிச்சிருந்தா மட்டும்தான் நான் பாப்பேன். அந்தப் பாத்திரத்தில வேறு யார் நடிச்சாலும் நிச்சயம் ஏத்துக்க முடியாது. நான் மட்டும் இல்லை... ரஜினி ரசிகர்கள்ல ஒருத்தர்கூட அதை ஒத்துக்க மாட்டாங்க’’ என்கிறார்.

‘‘ரஜினி சாரோட ஸ்பெஷலே டயலாக் டெலிவரிதான். அவர் மாதிரி பேச இன்னும் யாரும் பிறக்கலே. அவரை யாரும் ஜெயிக்க முடியாது. அதனால, இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கிறதைத் தவிர்க்கலாம். ரஜினி சாரோட ரசிகர்களும் இதை விரும்பமாட்டாங்க’’ என்கிறார் லாரன்ஸ்.

 தொடக்க காலம் முதல் ரஜினியோடு தொடர்புடைய தயாரிப்பாளர் & இயக்குனர் பஞ்சு அருணாசலம், ‘‘ரஜினியின் வாழ்க்கையை படமாக எடுக்க இது உரிய தருணமல்ல’’ என்கிறார். ‘‘ரஜினியின் வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உண்டு. ரஜினியை மட்டும் மனதில் வைத்து இதைப் பார்க்கக்கூடாது. அவருக்கு இன்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. ரஜினியே விரும்பினாலும், அவரது பழைய வாழ்க்கையைப் படமாக்கினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்&கருணாநிதி வாழ்க்கையை புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் ‘இருவர்’ படத்தில் அற்புதமாகப் பதிவு செய்திருந்தார். அவர்கள் எவ்வளவு பெரிய தலைவர்கள். எத்தனை லட்சம் மக்களால் ஆராதிக்கப்படுபவர்கள். இருந்தும் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்துப் பார்க்க வேண்டும்’’ என்கிறார் பஞ்சு அருணாசலம்.

சல்மான் என்ன சொல்கிறார்?

‘‘நானும் ரஜினி ரசிகன்தான். ஆனால், ரஜினியாக மாறவேண்டும் என்று ஆசைப்படவில்லை. ரஜினி ரசிகர்கள் என்னை ரஜினியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்திய சினிமாவில் ஒரு ரஜினிதான்... ஒரு சல்மான் தான்’’ என்கிறார் அவர்.
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இந்த உண்மை சல்மானின் மைத்துனரான அதுல் அக்னிஹோத்ரிக்குப் புரிந்தால் சரி.

 வெ.நீலகண்டன்

ரஜினிக்கும் விருப்பமில்லை!

ரஜினியின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது பற்றி அவரது குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்? ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவிடம் பேசினோம்.

‘‘இதுபற்றி கடந்த மூன்று மாதங்களாக எங்களைத் தொடர்புகொண்டு அந்தத் தயாரிப்பாளர் பேசி வருகிறார். ரஜினி உள்பட யாருக்குமே அதில் விருப்பமில்லை. மற்றவர்களைப் போல கஷ்டப்பட்டுத்தான் ரஜினியும் முன்னேறினார். உண்மைக் கதையை படமாக்கும்போது நிறைய கஷ்ட, நஷ்டங்கள் இருக்கும். தேவையில்லாத செய்திகள், காட்சிகள், சித்தரிப்புகள் இடம்பெறும் ஆபத்து உண்டு. அது குடும்ப வாழ்க்கையில் வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்தலாம். ரஜினி நிம்மதியை விரும்புபவர். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், அவருடைய கதையை படமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற முயற்சியில் யாரும் இறங்கக்கூடாது. என் தம்பியின் விருப்பமும் இதுதான்’’ என்கிறார் சத்யநாராயணா.
ஏ.வி.மதியழகன்