கவனிக்க வேண்டிய கடற்கரைப் பசங்க பாண்டிராஜ்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                    ந்தமுறையும் ‘பசங்க’ளோடு தான் பவனி வரவிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ஆனால் இவர்கள் கடந்தமுறை பார்த்த பள்ளிச்சிறுவர்கள் இல்லை. பள்ளியை விட்டுக் கடந்த சிறுவர்கள். காலாற நடைபழகும் சென்னைக் கடற்கரையில் கண்களை மேயவிட்டால் தென்படும், பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றிய படம் இது.

அவர்களுடன் கைகோர்த்து அங்கும் விரவிக்கிடக்கும் சுக, துக்க தருணங்களைச் சோழிகளாகவும், சிப்பிகளாகவும் பொறுக்கியெடுத்து இந்தமுறை நம் காட்சிக்கு வைக்கவிருக்கிறார் அவர். அதனால் படத்தின் தலைப்பே ‘மெரீனா’வாகியிருக்கிறது. படத்தைத் தயாரித்திருப்பவரும் அவரேதான். அவரது நிறுவனத்தின் பெயரும் ‘பசங்க புரடக்ஷன்ஸாக’ இருக்க, தொடர்ந்து பசங்களின் கைப்பற்றிச் செல்லும் பயணம் பற்றிப் பேசினார் பாண்டி.

‘‘இன்னும் ‘பசங்க’ கதைகள் நாலு என்கிட்ட இருக்குன்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும். ஒவ்வொண்ணும் சுகமான அனுபவங்கள். ரஜினியையும், விஜய்யையும் வச்சு ஒரே டைரக்டர் அடுத்தடுத்து படங்களைச் செய்வது போலத்தான் இதுவும். அவர்களுக்கு பதில் எனக்கு பசங்க. இரண்டாவது படமா ‘வம்சம்’ செய்தபிறகு இந்த கடற்கரையோரப் பசங்க கதையை எடுத்துறணும்னு ஒரு உந்துதல்

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineவந்தது. அடுத்தடுத்து ஆக்ஷன் கதைகள் செய்தாலும், கைல இருக்கிற நாலு ஸ்கிரிப்ட்ல ரெண்டையாவது படம் பிடிச்சுட எண்ணம் இருக்கு.

மெரீனாவில சுண்டல், முறுக்கு, காபி விற்கிற பசங்கள்ல யாரையாவது கூப்பிட்டு, ‘நீ ராமநாதபுரம்தானே..?’ன்னு குத்துமதிப்பா கேட்டீங்கன்னாகூட ‘ஆமாம்...’‘னு பதில் வரலாம். பலரும் நினைக்கிறது போல அவர்கள் சென்னையைச் சேர்ந்த சிறுவர்கள் இல்லை. இந்த ஆச்சரிய உண்மை தெரியவந்தபோது அவர்களைக் கவனமா கண்காணிச்சேன். அப்ப கிடைச்ச கதைதான் இது. ‘பசங்க’ள்ல ‘பக்கடா’வா வந்த பாண்டியும், ‘கௌதம்’ங்கிற பையனும் இதில முக்கியக் கேரக்டர்கள்ல வர்றாங்க. இவங்களோட, உண்மையிலேயே கடற்கரை விற்பனையை வாழ்வாதாரமா வச்சிருக்க சிறுவர்களும் நடிச்சிருக்காங்க. மாலை நேரத்து விற்பனை பரபரப்புகள் தவிர்த்து, காலை தொடங்கி அவங்க வாழற வாழ்க்கையில அவங்களா தேடிக்கிற மகிழ்ச்சி அலாதியானது.

இந்தக்குழந்தைகளோட நட்புலகம் பற்றி யுகபாரதி எழுதியிருக்க பாடலும், விடியல்ல தொடங்கி இரவு வரை தொடர்ற கடற்கரை வாழ்வை ஒரு பையனின் பார்வையில சொல்ற நா.முத்துக்குமார் பாடலும் கவனிக்கவைக்கும். 

கடற்கரை சிறுவர்கள் கதைன்னாலும், மெரீனாவில கால்பதிக்கிற அத்தனை பேரைப்பற்றிய பதிவுகளும் இதில உண்டு. அங்கே கிறுக்குத் தனமா சுற்றித் திரியறவர்கள், பிச்சையெடுக்கிற பெரியவர்கள், குதிரைக்காரர்கள்னு அணுகிப் பார்த்தப்ப அவங்க ஒவ்வொருத்தரும் கடற் கரைக்கு வந்துசேர்ந்த கதைகள் ஆச்சரியப் படுத்துச்சு. அதோட கடற்கரைக்குத் தோளோடு தோள் சேர்ந்து படகு மறைவைத் தேடிவர்ற பெரும்பாலான காதல் ஜோடிகளும் திரும்பிப் போகும்போது மணலைத் தட்டிவிட்டுப் போறது போலவே காதலையும் தட்டிவிட்டுப் போறது வாடிக்கையா நடக்குது. இந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் பட்டினப்பாக்கம் தொடங்கி மெரீனா, எம்.ஜி.ஆர் சமாதி, துறைமுகம்னு போய் காசிமேடு வரை கேமராவை அலைபாய விட்டிருக்கோம்.

சிவகார்த்தியும், ஓவியாவும் கடற்கரைக் காதல்ஜோடிகளா இதில நடிக்கிறாங்க. இவங்க காதல் ‘பசங்க’ விமல் & வேகாவையும்விட கூடுதல் சுவாரஸ்யத்தோட இருக்கும். என் படங்கள்ல தொடர்ந்து நடிச்ச ஜெயப் பிரகாஷுக்கு இதில ஒரு சீன்தான் வரும்னாலும், பவர்ஃபுல்லா இருக்கும். பசங்களை விட ‘பக்கடா’ பாண்டி நல்லாவே வளந்துட்டான். சிவாஜி சார்போல டப்பிங்ல ஒரு பக்க டயலாக்கை வரிவிடாம பேசி அசத்தும்போது எனக்கே மலைப்பா இருக்கு...’’

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய், இசையமைப்பாளர் கிரிஷ், படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா என்று முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மூவரை அறிமுகப்படுத்தும் பாண்டிராஜ், தான் தயாரிப்பாளராக நேர்ந்ததைப் பற்றியும் சொன்னார்.

‘‘டைரக்டரா இரண்டு கமிட்மென்ட்கள் இருந்தும் நானே தயாரிப்பாளரான நோக்கம், இதைத் தாமதம் ஆகாம எடுத்து முடிச்சாகணும்னு இருந்த உள்ளுணர்வுதான். அதுக்கு நானே எதிர்பார்க்காம ஒத்துழைப்புகளும் கிடைச்சது. பீச்ல முழுப்படமும் எடுக்கிற அனுமதிக்கு ஆரம்பத்தில பிரச்னைகள் இருந்தாலும், போலீஸே என் முயற்சியைப் பாராட்டி ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்தாங்க. அதேபோல சிறுவர்களை வியாபாரத்தில ஈடுபடுத்துபவர்கள்கிட்டேர்ந்தும் கொஞ்சம் எதிர்ப்பு வந்தது. இது யாரையும் குற்றம் சொல்லவும், காயப்படுத்தவும் செய்யாத படம்னு போகப்போக அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க.

என் முதல் முயற்சிக்கு எப்படி சசிகுமார் தயாரிப்பாளராகி நான் உருவாகக் காரணமானாரோ, அப்படி இந்த என் பேனரை நிறுத்தி இங்கே சில பாண்டிராஜ்கள் உருவானா சந்தோஷப்படுவேன்.

பள்ளியைவிட்டு பிள்ளைகளை நிறுத்திய பெற்றோரையும், அவர்களை வேலைக்கு வச்சிருக்கவங்களையும் இந்தப் படம் ஆழமா பரிவோட யோசிக்கவைக்கும். அதேசமயம் படத்தை மகிழ்ச்சியாவும் பார்க்கமுடியும். நான் படத்தில சொல்ல வர்றதே பள்ளிக்கு பசங்களை அனுப்புங்கன்றது தான்..!’’
 வேணுஜி