இடப்பெயர்ச்சி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              ற்று நேரத்துக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, கபூருக்கு. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து விட்டது. அதுவும், எல்லோரையும் ஏங்க வைக்கிற ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனத்தில். இத்தனைக்கும் இன்டர்வியூவில் சுமாராகத்தான் செய்திருந்தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, இவன் தேர்வானதை அறிவித்து விட்டார்கள். கூடவே பணிபுரிய வேண்டிய இடமும்.

தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில், சேலம்.

அவனது மகிழ்ச்சி சட்டென விடைபெற்றது.

பிறந்ததிலிருந்து பெரிய அளவில் சொந்த மண்ணின் எல்லை தாண்டி வெளியிடங்களுக்குச் சென்றது கிடையாது. இனி, இதுவரை பார்த்திராத பூமி. எதிர்கொண்டிராத மக்கள். முற்றிலும் வேறுபட்ட கலாசாரம். ஆழமாக வேரூன்றி, மண்ணின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட மரத்தின் வேர்கள் அசையும் ஓசை அவனுக்கு துல்லியமாகக் கேட்டது. இந்த வேர்களுக்கு இந்த மண் இனி சொந்தமில்லை.

கபூருக்கு இனம்புரியாத பீதி ஏற்பட்டது.

எப்படி சமாளிக்கப் போகிறேன்?

இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டால்?

சிறிது உற்சாகமுடன், நண்பர்களை நோக்கி விரைந்தான். அவர்களைப் பார்க்க பொறாமையாக இருந்தது. அவர்களுக்கெல்லாம் உள்ளூரிலேயே வேலை கிடைத்திருந்தது. சுமாரான சம்பளம்தான். ஆனால், கூப்பிடு தூரத்தில் உத்தியோகம்.

தனக்கு மட்டும் ஏன் இவ்வளவு தூரம்? சேலம் எங்கிருக்கிறது

என்றுகூடத் தெரியாத சூழலில், மனதுக்கு விருப்பம் இல்லாத ஒரு பணியை தான் ஏன் ஏற்க வேண்டும்? எப்படியும் அவனது தகுதிக்கு சிறிது தாமதமானால் கூட, கண்டிப்பாக உள்ளூரிலேயே வேலை கிடைத்து விடும்.

குடும்பத்தைப் பிரிந்து எங்கோ வாழ்வது, வாழ்நாட்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள வேண்டுமானால் பயன்படலாம். வெறுமனே சுவாசம் கொள்வது எப்படி வாழ்வதற்கு ஒப்பாகும்? எவ்வளவு செல்வம் கிடைத்தாலும், வேண்டாம். சொந்த வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ள முடியாமல் தூரம் என்னைப் பார்த்து புன்னகை செய்வதை அனுமதிக்க மாட்டேன்.
இந்த ரீதியில் கபூர் தன்னுடைய கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டான். அவர்களுள் மோத்தி, ‘‘கபூர், அதிகமா எதையுமே யோசிக்கக்கூடாது. ரொம்ப சிந்திச்சா சீரழிஞ்சிடுவோம்...’’ என்றான். பூஷண், ‘‘என்னடா உளர்ற... அவனவன் இந்த கம்பெனில வேலை கிடைக்காதான்னு அலையறான்...’’ என்றான். சட்டர்ஜீ பதிலே சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நண்பர்களின் பதில் அலுப்பூட்டுவதாக இருந்தது. ‘‘போகப்போக சரியாகி விடும்...’’ கபூருக்கோ, தான் எதிர்கொள்ள இருக்கும் இடப்பெயர்ச்சியின் சிக்கல்களை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்று தோன்றியது.

ஆனால், அப்பா தன்னை நன்றாகப் புரிந்து கொள்வார்...

கபூர் தனது இருப்பிடத்தை நெருங்கும்போது, தெரிந்தவர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். அவனது எதிர்காலம் சுபிட்சமாக இருக்கப்போகிறது. அதுவும் இந்தச் சிறு வயதில், பெரிய கம்பெனி, பிரமிப்பு தரும் ஊதியம்... ‘‘கபூர், ஏன் என்னவோ போலிருக்கிறாய்?’’

அப்பா கை குலுக்கினார். அம்மா ஏதோ விசேஷ தின்பண்டத்தைத் தயாரித்திருந்தாள். தங்கை வழக்கமாக அதிகம் பேச மாட்டாள்... அவளே இந்தச் செய்தியில் சந்தோஷமடைந்திருந்தாள். வீடே மகிழ்ச்சியில் திணறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனக்கு அவ்வளவு தூரம் சென்று வேலை பார்ப்பதில் விருப்பமில்லை என்பதை எப்படிச் சொல்வது? சொல்லித்தான் தீர வேண்டும். இவர்களின் சந்தோஷத்துக்காக, இனி வாழ்நாள் முழுவதும் அந்நிய ஊரில் கிடந்து சீரழிய முடியாது.

‘‘அப்பா...’’ என்றான் கவலையுடன்.

அப்பா இவனது சோக முகத்தை, பலவீன வார்த்தையைப் பொருட்படுத்தாது, அவர் சின்ன வயதில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை நினைவுகூர்ந்தார். ஆனால், கபூர் கொடுத்து வைத்தவன். சின்ன வயதிலேயே பெரிய நிலையை எட்டிவிட்டான். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மகனின் திறமையை அவர் நன்கு அறிவார்.

‘‘அப்பா, சேலம் ரொம்ப தூரம்ப்பா...’’

‘‘கபூர், இந்த விஞ்ஞான உலகில் தூரம் ஒரு பொருட்டே அல்ல. என்ன, விசேஷ நாட்களில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ள வேண்டும். நெரிசல் தாங்க முடியாது...’’

‘‘....................’’

‘‘விசாரித்து விட்டேன். சேலம் அருமையான ஊர். சுற்றிலும் மலைகள். நம்ம ஊர் மலைகள் மாதிரி பெரிசு என்று சொல்ல முடியாது. அருகில் ஏற்காடு என்று மலை வாசஸ்தலம் இருக்கிறது...’’

இவ்விதம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவரது முகம் திடீரென மலர்ந்தது. ‘‘கபூர், எதிர் ஃப்ளாட்டில் இருக்கிறானே குஷால்... எப்போது என்னைப் பார்த்தாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போவான். இன்று என்னடாவென்றால் வலியப் பேசுகிறான். ‘பையனுக்கு வேலை கிடைத்திருக்கிறதாமே’ என்று கேட்கிறான்... ‘எல்லாம் கடவுள் அருள்’ என்றேன். ‘இந்த புராஜெக்ட் முடிந்தால் திரும்பி வந்து விடலாமா’ என்கிறான். ‘பொதுவாக ட்ரான்ஸ்பர் அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை’ என்றேன்... அடுத்த தடவை, ‘அவனது பெண்ணை கட்டி வைக்கவா’ என்று கேட்கப் போகிறான்! எல்லாம் இந்த வேலை செய்யும் மாயம்! ஆமாம், என்ன பேசிக் கொண்டிருந்தேன்..?’’

‘‘................’’

‘‘ம், ஏற்காடு கூப்பிடு தொலைவில். கோட்டை மாரியம்மன் கோயில் என்கிற பிரசித்தி பெற்ற கோயில் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை தருகிறார்கள். அப்புறம் சேலத்தில் தட்டுவடை செட், குழிப்பணியாரம், மட்டன் சுக்கா... எல்லாம் நன்றாக இருக்குமாம்!’’

‘‘.....................’’

‘‘அங்கே என்னுடைய நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் ஒருவரைப் பிடித்துவிட்டேன். பெயர் முருகேசன். தங்கமான மனிதர். அவர் உனக்கு உதவி செய்வார்...’’

இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கபூர், ‘‘அப்பா...’’ என்று கண்ணீர் சிந்தினான். குரல் கம்ம, ‘‘அப்பா... உங்களை, அம்மாவை, ஃபன்னாவை எல்லோரையும் பார்க்காமல் எப்படி இருப்பேன்? உங்களைப் பிரிந்து எப்படி இருப்பேன்?’’ என்றான்.

அப்பா புன்னகையுடன், ‘‘ஓ கபூர்...’’ என்றார். ஆதரவாக அவனைத் தொட்டார். ‘‘என்னடா, சிறு பிள்ளை மாதிரி...’’

‘‘................’’

‘‘போகப் போக சரியாகி விடும்...’’

‘‘..................’’

‘‘நினைத்துப் பார். உன்னை, உன் திறமையை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்புக்கு உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்... இது எவ்வளவு பெரிய விஷயம்!’’

‘‘...................’’

‘‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதில் என்ன பலன்? என்னையே எடுத்துக் கொள். ஒரு குறுகிய வட்டத்து க்குள்ளேயே சிக்கி கிணற்றுத் தவளையாகவே இருந்துவிட்டேன். தைரியமில்லை... பயம்! இதைத் துறந்திருந்தால் இன்னும் முன்னேறியிருப்பேன். கபூர், இந்த வீடு... இந்த மண்... இவற்றின் மீது எல்லாம் அளவுக்கு அதிகமாக பற்று வைத்தால் அப்புறம் சிரமம்தான்... உலகம் பரந்தது. நல்லவேளை, உனக்கு சேலத்துக்காவது கிடைத்தது. சிலருக்கு போஸ்டிங் கிடைக்கிற இடத்தைக் கேள்விப்பட்டால், மயக்கமே வருகிறது. சேலம் அந்த அளவு தூரமில்லை...’’

கபூர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அப்பா அவனுக்கு எதிரில் அமர்ந்து, ஆறுதலைத் தொடர்ந்தார். ‘‘கபூர், நீ இந்த வாய்ப்பை வேண்டாம் என்றால் நானோ, உன் அம்மாவோ உன்னை எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால், அதன் பிறகு உன் மதிப்பீட்டில் நீயே தாழ்ந்து போவாய். உன் திறமையே உன்னை கேலி செய்யும். கடவுள் உனக்கு இத்தனை திறமை கொடுத்தது, அதைப் பயன்படுத்தவே... ஓடி ஒளிவதற்காகவா..? நீயே சொல்லு...’’

‘‘......................’’

‘‘அம்மா முன் இப்படி நீ அழுதால், அவளும் அழுது உன்னை இன்னும் பலவீனமாக்கி விடுவாள்...’’

‘‘ஸாரிப்பா, உங்களைப் பிரிவதை நினைத்துத்தான்...’’

‘‘இந்தக் குறுகிய எல்லைகளுக்குள் உன்னை பலி கொடுத்து விடாதே... உனக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. நீ இந்த சேலம் புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவர்களே உன்னை இங்கே பக்கத்தில் எங்கேயாவது மாற்றிவிடவும் வாய்ப்பு இருக்கிறது...’’

திரும்ப இங்கே வருவது அவ்வளவு சுலபமல்ல. அது அப்பாவுக்கும் தெரியும். அப்படியே வர வேண்டும் என்றால், பல வருடங்கள் ஆகிவிடும். அவ்வளவு வருடங்கள் புதிய மண்ணில் இருந்து விட்டால், அது பழகிவிடும். அப்புறம் இங்கே வர மனசே இருக்காது. இப்படித்தான் முகேஷ் பெங்களூரிலேயே செட்டிலாகிவிட்டான். அங்கே பேசுகிற பாஷையே & அது என்ன தெலுங்கா, கன்னடமா... அதையே & பேசுகிறான். அவனது குழந்தைகள் அந்த ஊரின் மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டார்கள். இந்த ராஜா... அழுதுகொண்டே அமெரிக்கா சென்றவன்...
அப்பா குறுக்கிட்டு, ‘‘கபூர். தினமும் பேசிக்கொள்ளப் போகிறோம். விடுமுறை கிடைக்கும்போது நாங்களும் உன்னைப் பார்க்க வரப் போகிறோம். பிறகு என்ன?’’ என்றார்.

‘‘சரிதான்பா... பிரச்னை ஒன்றுமில்லை...’’ & கபூர் எழுந்தான்.

‘‘சேலம் பற்றி விசாரித்துவிட்டேன். நம் இனத்தவர் ஒன்று கூடி, ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். நமது விசேஷ நாட்களில் விழா நடத்துகிறார்கள். கல்ச்சுரல்ஸ் எடுக்கிறார்கள். நமது குழந்தைகளுக்குப் பரிசு வழங்குகிறார்கள். நமது பாரம்பரிய உணவைக்கொண்ட மெஸ் கூட நடத்துகிறார்களாம்...’’

‘‘சாப்பாடு ஒரு பிரச்னையில்லை, அப்பா...’’

‘‘நம் விமலாவை எடுத்துக் கொள். பிழைப்பதற்காக பாலக்காடு போனாள். அங்கே ஒரு நல்ல பையனாகப் பார்த்து கல்யாணமும் செய்து கொண்டாள்... நன்றாகத்தான் இருக்கிறார்கள்...’’

‘‘.........................’’

‘‘அது மாதிரி, ஆந்திராலர்ந்து இங்க வேலைக்கு வந்தாளே சிநேகா, நம்ம ராகுலை கல்யாணம் பண்ணி, அப்புறம் அவனோட ஃப்ரண்ட் நித்திஷ் கூட கள்ளக்காதல் ஏற்பட்டு... இப்ப டைவர்ஸ் வாங்கி, நித்திஷ் கூட வாழறா இல்லியா... சொந்த ஊருக்கெல்லாம் போறதே இல்ல...’’

‘‘ஆமாம்ப்பா...’’

‘‘அவ எல்லாம் இந்த ஊர்ப் பொண்ணாவே மாறி, நம் மொழி, கலாசாரம¢, உணவு எல்லாத்துக்கும் பழகிட்டா... மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். புரியுதா? எதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள். புதிய ஆர்வங்களை, தேடல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்... நீ அங்கே போவதற்குள் தமிழ் சிறிதாவது கற்றுக் கொள்...’’ கபூர் தலையசைத்தான். அப்பா அவனை கன்வின்ஸ் செய்துவிட்ட திருப்தியில் அங்கிருந்து செல்ல, கபூர் அவனது கவலைகளில் ஆழ்ந்தான்.

அப்பா, இந்த மண், கலாசாரம், நான் பெரிதும் நேசிக்கும் இவ்வுணர்வுகள் இனி என்னோடு முடிந்து விடக்கூடும். என் வாரிசுகள் முற்றிலும் புதிய வாழ்க்கைச்சூழலுக்குப் பழகி, இந்த மண்ணின் அடையாளத்தை இழக்கும்.  இதுதான் மாறிவரும் இந்த காலகட்டத்துக்கு, விஞ்ஞான வளர்ச்சிக்கு நான் கொடுக்கப் போகும் விலை. முடிந்த அளவு என் அடையாளங்களை, என் மண்ணின் வாசனையை நான் காப்பாற்றி வரவேண்டும் என்பதுதான் என் முன் உள்ள சவால்.

கபூர் இந்தத் தீர்மானத்துக்கு வந்து ஆறுதல் பெற முயன்றாலும் நாட்கள் நெருங்க நெருங்க அவனது கலவரம் இன்னும் அதிகமானது. உணவு ருசிக்கவில்லை. குழப்பமான கனவுகள் திகழ்ந்தன. யாரைப் பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. சொந்த ஊரில் சொற்பமாக சம்பாதித்து, பிறந்த மண்ணைப் பிரியாதவர்கள் அவனது பொறாமைக்கு இலக்கானார்கள்.
ஒவ்வொரு நாளும் வீழ்ச்சியடைந்தான். அவனது தெருவில், ஊரில் இருக்கிற அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் யாவற்றையும் அற்புதமாக உணர்ந்தான். காலையில் எழுந்ததும் கண்ணில் படுகிற பிரமாண்ட மலை. இதன் உச்சியை யார் முதலில் தொடுகிறார்கள் என்று நண்பர்களுடன் ஏற்படும் போட்டி... சரோஜ், சும்மா பறப்பான்..! இனி எங்கே... இந்தப் பறவைகள், பெரிய ஏரி...

இவற்றை, இவர்களைப் பிரிய வேண்டியிருக்கிறது. ‘ஒவ்வொரு நொடியும் கடந்து செல்கிறபோது, எனக்கும் இந்த ஊருக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’ என்ற உணர்வு அவனை வதைத்தது.

‘‘கிளம்பலாமா?’’ என்றவாறு அப்பா லக்கேஜ்களை எடுத்துக் கொண்டார். குடும்பம், நண்பர்கள் எல்லோரும் கபூரை வழியனுப்ப வந்திருந்தார்கள். வேறு வழியின்றி செயற்கையான சிரிப்புகளோடும் உள்ளே வலியோடும் கையசைத்து...

இப்படித்தான் கி.பி. 2211ல் கபூகா கிரகத்திலிருந்து, பல லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள பூமி என்ற கிரகத்திலுள்ள சேலம் என்ற ஊருக்கு 8 அடி உயரமும் இறக்கைகளுமுள்ள கபூகா இளைஞன் ஒருவன் விண்கலத்தில் பயணமானான்.            
ஷங்கர்பாபு