மழையில் நனையலாம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           மாளிக்க முடியாத மின்தடையும் சங்கடப்படுத்தும் சாலை உடைசல்களும் சேர்ந்து ‘மழையே அவஸ்தை’ என்று பலரை நினைக்க வைக்கிறது. ஆனாலும், ‘மழையில் மகிழுங்கள்’ என்று உற்சாகப்படுத்துகிறார் கவிஞரும் இயக்குனருமான ராசி அழகப்பன்.

‘‘மழையில நனையக்கூடாது என்கிற அம்மாக்களின் அதட்டலே மழையைப் பார்த்து பயப்பட வச்சிடுது. ‘மழை ஒத்துக்காது’, ‘காய்ச்சல் வரும்’... இப்படி என்னென்னவோ சொல்லி மிரட்டி விடுகிறோம். மழைநீர் போலச் சுத்தமான தண்ணி வேற எங்காச்சும் கிடைக்குமா? அந்தக் காலத்துல இடி இடிக்கறப்பகூட ‘அர்ஜுனா’ன்னு சொல்லிக்கிட்டு நம்ம பாட்டுக்குப் போயிட்டிருப்போம்’’ என்கிற ராசி அழகப்பன், ஆறிலிருந்து அறுபது வரை யாரும் ‘மழையில் நனையலாம்’ என்கிறார்.

சிறுவயது முதல் பார்த்து, ரசித்து, அனுபவித்த மழை நிகழ்வுகளை ‘மழைத்தேன்’ என்கிற கவிதைத் தொகுப்பாக தந்தவர், அதையே இப்போது இசையாக்கி இருக்கிறார்.

‘‘திருவண்ணாமலை மாவட்டத்துல ராயம்பேட்டை கிராமம் சொந்த ஊர். மழை எனக்குள்ள பதிய ஆரம்பிச்சது அங்க ரெண்டாவது படிக்கும்போது. அப்ப வந்தது ஒரு பெரிய புயல். சாதாரண மழைக்கே பாதி இடத்தை தண்ணியால நிரப்பிடுற குடிசை எங்களோடது. புயலுக்கா தாக்குப்பிடிக்கப் போகுது? நெசவாளர் குடும்பம்ங்கிறதால நூல்கண்டுகளை மளிகைக்கடையில கொடுத்து, சாப்பாட்டுக்கு பொரி வெல்லமும் சமைக்க மண்ணெண்ணெயும் வாங்கிட்டு வரணும். டிரவுசர் நனையற வரைக்கும் ஓடற தெருத்தண்ணியில கால் தடுக்கி விழுந்ததுல பொருளெல்லாம் தண்ணியில போயிடுச்சு. அன்னிக்கு முழுக்குடும்பமும் பட்டினி. அதுக்காக வீட்டுல வாங்குன அடியும் இன்னும் மறக்கல. இப்பவும் பளிச்னு இருக்கு அந்த நினைவு.

‘மழைன்னா ஒதுங்கணும்’ ங்கிற எண்ணம் அப்ப பறந்து போனதுதான். இன்னிக்கு சென்னையிலயும் எந்த மழைன்னாலும் ரெண்டு நிமிஷம்கூட ஒதுங்கி நிற்கிறதில்லை. முழுக்க நனைஞ்சிட்டே போய் ‘ஜம்’னு ஒரு டீ அடிச்சா அதுல அத்தனை சுகம் கிடைக்குது’’ என்கிற அழகப்பன், ‘‘இன்னிக்கு சிமென்ட் ரோடுகள் கிராமங்கள்லகூட மழையை மண்ணுக்குள்ள அனுமதிக்க மறுத்து, அது கிளப்பி விடற மண்வாசத்தையும் நுகர முடியாமப் பண்ணிடுச்சு. வளர்ச்சின்னு பண்ற விஷயங்கள் ஒரு காலத்துல மழையையே இல்லாமப் பண்ணிடுமோன்னு தோணுது. நினைச்சுப் பார்க்க முடியுமா அப்படியொரு பயங்கரத்தை’’ என்கிற கவலையையும் வெளிப்படுத்துகிறார்.

அழகப்பனின் இசைக்கவிதைக்கு யாழ்சுதாகர், அனுராதா உன்னியின் குரல்களும் கூடுதல் அழகு சேர்க்கின்றன. இதைக் கேட்பவர்களும் இனி மழையில் நனையலாம்!
அய்யனார்ராஜன்
படம்: ஆர்.சந்திரசேகர்