சிரிப்பும் சிந்தனையும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      ரு வார்த்தை கேட்க ஆசைப்பட்டேன்.

காலையில் 9.45 மணிக்கு கட்டிடக் கூலியாட்கள் இருவர் ஜாலியாகப் பேசியவாறு மெதுவாக ரோட்டில் செல்கிறார்கள்.

வேலைக்குப் போகிறார்கள் என்று ஊகிக்க முடிந்தது.

மணி என்ன?

9.45.

ரோட்டை ஒட்டிய வீடு ஆதலால் கம்பி கேட்டைப் பிடித்துக்கொண்டு சாலையின் நடமாட்டத்தைக் கவனிக்க முடிந்தது. எனக்குப் பிடித்த இலவசப் பொழுதுபோக்கும் அதுதான். குறிப்பாக அன்றைய தினம் அந்த இரண்டு பேரும் & கட்டிடத் தொழிலாளி போன்ற தோற்றம் & ஜாலியாக நடந்த நடை எனக்குப் பொறாமையைத் தந்தது.

நான் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்து ஓய்வு பெற்றேன். ரியல் எஸ்டேட் வேலை மட்டுமல்ல... அந்த முதலாளி ஒரு வொர்க்கிங் மென் ஹாஸ்டல் நடத்தி வந்தார். அதையும் நான்தான் பார்த்துக் கொண்டேன்.

இருபத்து நாலு மணி நேரம் போதாது. அப்படியெல்லாம் நான் உழைத்தேன். இங்கே பார்த்தால் காத்தாலே ஒன்பதே முக்கால் மணிக்கு ஜாலியாக இரண்டு மேஸ்திரியோ, கூலியாளோ அன்னநடை பயின்று கொண்டிருக்கிறார்கள்.

நான் என் ஆயுசில் ஒரே ஒரு நாள் இத்தனை லேட்டாக வேலைக்குப் போனதில்லை. முதலாளிகிட்டே ஒரு நாளில் இருபத்தைந்து மணி நேரம் பயந்து சாவேன்.

ஓய்வு பெற்று நாலு வருஷம் ஆகிறது. இன்றைக்கும் முதலாளி என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டுகிறார்... ‘‘என்னடா மணி, ரொம்பத்தான் துளிர்த்துட்டே... லோடு செங்கல் வந்து இறக்கறதுக்குள் போயிட்டியா.... உங்க பாட்டனா வந்து எண்ணுவான். மூடு வாயை. ராத்திரி எட்டு மணி ஆயிடுச்சேன்னா, கடியாரம்னா ஓடத்தான் ஓடும். நீ கடியாரத்தைப் பார்த்து வேலை செய்யறதுன்னா ஒழிஞ்சு போயிடு இப்பவே’’ என்று கனவுக் கடியாரத்தைத் தூக்கி மூஞ்சியிலே அடித்தார். நல்ல வேளை... கனவு!

இன்னொரு சம்பவம். ஆடி மாதத்தில் ஒருநாள்... அன்னைக்கு ஊரெல்லாம் மாளயம் கொடுக்கிற தினம். ஜனங்க ஈஸ்வரன் கோயில் குளத்துப் படிக்கட்டுகிட்டே ஈ மாதிரி மொய்ச்சிக்கிட்டு கொடுத்திட்டு இருக்காங்க.

நானும் திதி கொடுக்க என் முறைக்குக் காத்திருந்தேன்.

ஒரு கை என் தோளிலே தட்டுனு விழுந்து அழுத்துச்சு... ‘‘ஏண்டா மணி! நீ இங்கே திதி கொடுத்துக்கிட்டு இருக்கிறயா ஜாலியா? அங்கே மூணு லாரி செங்கல் லோடு வந்து இறக்கறதுக்குக் காத்திருக்கு. அதுகளுக்கு எவன் திதி கொடுக்கறது?’’ - குளத்தங்கரையிலேயே பளாரென்று ஓர் அறை விட்டார்.

‘‘உன்னைத் தொலைத்துத் தலை முழுகிடறேன்’’ என்று கத்தினார்.

நான் திதி தராவிட்டாலும் பரவாயில்லை என்று பதறியடித்து ஈர வேட்டியுடன் ஆபீசுக்கு ஓட்டமெடுத்தேன்.

இப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்தது. இந்த ஆளுங்க என்னடான்னா, ஜாலியாக காலை ஒன்பதே முக்கால் மணிக்கு சாவகாசமாக வேலைக்குப் போறாங்க.
சட்டென்று அவர்களைக் கூப்பிட்டேன் கையைத் தட்டி.

‘‘வாய்யா இப்படி?’’ என்று ஓர் ஆளை அழைத்தேன்... ‘‘வேலைக்கா போறீங்க... எங்கே வேலை?’’

‘‘மயிலாப்பூர்.’’

‘‘அங்கே எந்தத் தெரு?’’

‘‘கச்சேரி முதலியார் தெருவில். ஏன் கேட்கறீங்க?’’

‘‘அங்கே யார் வீடு?’’

‘‘கார்னர் வீட்டுலே தளம் போடற வேலை. ஏன் கேட்கறீங்க?’’

‘‘கேட்கற உரிமை இருக்கறதாலே கேட்கறேன். ஏய்யா காலையிலே எட்டரைக்கெல்லாம் வேலை செய்யற இடத்திலே டாண்ணு இருக்கணும். நீங்க நடக்கிற நடையைப் பார்த்தால் பதினொரு மணியாகும் போலிருக்கு. நீங்க வாங்கறது அரை நாள் கூலியா, ஒரு நாள் கூலியா. கொஞ்சம் மனசாட்சியோடு வேலை செய்யுங்கப்பா...’’

‘‘சார்! நீங்க யாரு எங்களுக்கு உத்தரவு போட? கேனத்தனமா பேசறீங்களே?’’

‘‘அவங்க வீட்டு சம்பந்திடா நான். நான் கேட்காமல் யார்ரா உங்களைக் கேட்கறது. உங்களை அங்கே பார்த்திருக்கேன். நீங்கதான் என்னைப் பாத்திருக்க மாட்டீங்க. இவ்வளவு நேரத்துக்கா வேலைக்குப் போகறது? அரை நாள் கூலி கட் பண்ணச் சொல்றேன் எங்க சம்பந்திகிட்டே. அப்பதான் புத்தி வரும் உங்களுக்கு...’’

‘‘மன்னிச்சுக்கோ சார். ஆஸ்பத்திரியிலே ஒருத்தரை சேர்க்க வேண்டியிருந்தது...’’

அவர்கள் பரபரப்புடன் சொல்லிவிட்டு வேக நடையுடன் பஸ் ஸ்டாப்புக்கு விரைவதைப் பார்த்தவாறிருந்தேன்.

‘‘மனசு திருப்தியாச்சா?’’ & தோளருகே குரல் கேட்டது.

மனைவிதான் அப்படிக் கேட்டாள்... ‘‘நீங்கள் எந்தக் காலத்திலேயோ எஜமானருக்கு பயந்து பயந்து வேலை செய்ததற்காக இவர்களை மிரட்டறீங்களாக்கும்? ஒண்ணாம் நம்பர் அல்பத்தனம். உங்களுக்குப் பிள்ளையும் கிடையாது. பொண்ணும் கிடையாது. மயிலாப்பூர் கிழக்கிலா, மேற்கிலா என்றுகூட உங்களுக்குத் தெரியாது. அவுங்க வாயைப் பிடுங்கி அவுங்களையே சதாய்ச்சிட்டீங்க. தான் பட்ட கஷ்டத்தைப் பிறத்தியாரும் படணும்னு நினைக்கிறது மகா பக்கித்தனம். தான் அடைந்த சந்தோஷத்தைப் பிறர் அடையணும்னு நினைக்கிறதுதான் நல்லவங்க குணம்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ங்கறதை ‘யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்’னு மாற்றிக்கொண்டு விட்டீர்களாக்கும்!’’ மனைவி குத்திக் காட்டியதில் மனசு வெட்கப்பட்டது.

அவள் சொன்னது நியாயம்தானே!
(சிந்திக்கலாம்...)
பாக்கியம் ராமசாமி