ஆ... இப்படி ஒரு வேலையா!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               ‘கல்வித்தகுதி, முன் அனுபவம் தேவையில்லை. வீட்டிலேயே தினம் 2 மணி நேரம் வேலை செய்தால் போதும். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம்’ & இதுபோன்ற பல விளம்பரங்கள் எஸ்.எம்.எஸ்., மின் அஞ்சல் மற்றும் விளம்பரச் சீட்டுகளாக வருகின்றன. இவை எந்த அளவு உண்மை?
ஆர்.நடராஜ், கோவை-5.

பதில் சொல்கிறார் தொழில் முனைவோர் ஆலோசகர் கிருஷ்ணகுமார்

இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களில் பல வகை உண்டு. பொதுவாக இப்படி டெலிமார்க்கெட்டிங், ஆன்லைன் டேட்டா என்ட்ரி மற்றும் பிரமிடு திட்டங்களுக்கு ஆள் சேர்க்கிறார்கள். பிரமிடு திட்டம் என்பது நீங்கள் பலரையும், அந்தப் பலரும் இன்னும் பலரையும் சங்கிலித்தொடர் போல சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டிய வேலை. குறைந்த உழைப்புக்கு அதிக வருவாய் என்பது போன்ற விளம்பரங்கள் அத்தனையுமே அபாயமானவைதான்.

உதாரணம் 1: ஆசைத்தூண்டிலில் லேசாக மயங்கினால் போதும்... உடனே ஒரு ஓட்டலில் நடைபெறும் கூட்டத்துக்கு அழைப்பார்கள். காபியோ, உணவோ வழங்கப்படும். நிறுவனத்தின் அருமை பெருமைகள் விளக்கப்படும். இறுதியில் நீங்கள் ஒரு பதிவுக்கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவீர்கள். அத்தொகை சில பல ஆயிரங்களாக இருக்கும். ‘ஒருமுறைதானே பணம் கட்டுகிறோம். அடுத்த மாதம் முதல் நமக்கு பல ஆயிரம் வரவுதானே’ என்ற எண்ணத்தில் பலரும் பணம் கட்டுவதுண்டு. பணம் கட்டிய பிறகு அந்த நிறுவனத்தை இந்த பூகோளத்தில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது!

உதாரணம் 2: டேட்டா என்ட்ரி வேலை என அழகான ஆங்கிலத்தில் மின் அஞ்சல் வரும். நான்கைந்து அஞ்சல் பரிமாற்றங்களுக்குப் பிறகு ரூ.1,500 என்பதுபோல ஒரு தொகை சொல்லி, காசோலை அனுப்பச் சொல்லி தகவல் வரும். பயிற்சிக் கையேடுகளுக்காகத்தான் அந்தப் பணமாம்! அனுப்பியவர்கள் கூரியர் ஆசாமியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியதுதான், காலமெல்லாம்!

உதாரணம் 3: ‘உங்கள் வீட்டிலேயே கால் சென்டர் அமைத்துத் தருகிறோம். நீங்களே பலருக்கு வேலை கொடுக்கலாம். ரூ.50 ஆயிரம் மட்டுமே செலவு’ என்ற பெரிய தூண்டிலில் சிக்கிய மீன்களும் உண்டு. சிறிது சிறிதாக அவர்கள் வசூலிக்கும் பணத்தை மொத்தமாகக் கூட்டினால் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி நிற்கும். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் தந்த தொலைபேசி எண்கள்கூட இயங்காமல் போய்விடும்.

இணையதளங்களிலும் இதுபோன்ற போலி விளம்பரங்கள் வருகின்றன. அதனால் அனைத்துத் திசைகளிலும் கவனம் அவசியம். ‘வியர்க்காமல் கிடைக்கும் உப்பு ருசிக்காது’ என்று சொல்வதுண்டு. இது உங்கள் கேள்விக்கும் பொருந்தும். தகுதியும் திறமையும் உழைப்பும் இல்லாமல் அதிக பணம் ஈட்டும் வழி இவ்வுலகில் இல்லை என்பதே உண்மை.

எனக்குச் சம்பந்தமே இல்லாத நபர்கள், நிறுவனங்களிலிருந்து, செல்போன் மூலம் தேவையற்ற விளம்பர அழைப்புகள், மின் அஞ்சல்கள் வருகின்றன. இவற்றை எப்படித் தடுப்பது?
 கு.மா.பா.கபிலன், சென்னை-4.

பதில் சொல்கின்றனர் டி.ஆர்.ஏ.ஐ. அமைப்பினர்

லேண்ட்லைன் தொலைபேசி, மொபைல் தொலைபேசி ஆகியவற்றில் விளம்பர அழைப்புகள், எஸ்எம்எஸ்&களை பெற விரும்பாதவர்களுக்காகவே ‘நேஷனல் டூ நாட் கால் ரிஜிஸ்ட்ரி’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடிதம், தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது ஆன்லைன் வாயிலாக உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். START DND என்ற செய்தியை 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தாலே போதும். 1909க்கு அழைத்தும் பதிவு செய்யலாம். இதற்குக் கட்டணம் கிடையாது. 45 நாட்களுக்குப் பிறகு விளம்பர அழைப்புகள், குறுஞ்செய்திகள் நிறுத்தப்பட்டு விடும். அதற்குப் பிறகும் விளம்பரங்கள் தொடர்ந்தால் புகார் செய்யவும் (helpline@ndncregistry.gov.in) வழி வகுக்கப்பட்டுள்ளது. மீண்டும் விளம்பர அழைப்புகளை பெற விரும்பினால் STOP DND என எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.